காலச்சுவடு பதிப்பகம் அடையாளம் கு.ப.ரா கதைகள் ,பிரமிள் கவிதைகள் தி.ஜானகிராமன் படைப்பு...
கு.அழகிரிசாமியும், கி. ராஜநாராயணனும் பக்கத்துப் பக்கத்து வீட்டுக்காரர்கள். குழந்தைப் பருவத்திலிருந்து ஒரு தெருவின் புழுதியில் ஒன்றாய்க் கட்டிப் புரண்டு விளையாடியவர்கள். பின்னால் அழகிரிசாமி வேலை கிடைத்து வெளியூர் போனபோது குறைந்தது நாள் ஒன்றுக்கு ஒரு கடிதமாவது எழுதுவது என்கிற பழக்கம் அவர்களைத் தொற்றிக்கொண்டது. ‘‘தூங்கி எழுந்ததும் காலைக் கடன்களை முடித்து, குளித்துவிட்டு பூஜைக்கு உட்காருவது போல், கடிதம் எழுத உட்காரும் பழக்கம் எங்களிடமிருந்தது’’ என்கிறார் ராஜநாராயணன். இவற்றில் கு. அழகிரிசாமியின் கடிதங்கள் தொகுக்கப்பட்டு 1987ஆம் ஆண்டு ‘அன்னம்’ வெளியீடாக வெளிவந்தது. அவற்றில் பல கிட்டத்தட்ட ஒரு காதலிக்கு எழுதப்பட்டதுபோல் இருக்கின்றன. கு. அழகிரிசாமிக்கும், கி. ராஜநாராயணனுக்கும் இசை மீதிருந்த கிறுக்கு ஊரறிந்த விஷயம். இளம்பிராயத்தில், ஒரு குருவிடம் முறையாக இசை கற்பது, சாகித்யங்கள், நாட்டிய பதங்கள் பண்ணுவது பின்னாளில் இசை அறிந்த பெண்ணையே மணம் முடிப்பது என்று மனக்கோட்டை கட்டியிருந்தார்கள் அவர்கள். பின்வரும் கடிதம் அதற்கு சிறந்த சாட்சி :
சென்னை
21_5_45
என் அன்புமிக்க ஆருயிர் நண்பன் ராஜநாராயணனுக்கு,
உன் 19_ம் தேதி கடிதம் கிடைத்தது.
நீ சங்கீதத்தை முறைப்படி படித்துவரும் விபரம் அறிந்தேன். அந்தத் தெய்வீகமான கலையில் ஒவ்வொருவனும் நல்ல பயிற்சி பெற்றிருக்கவேண்டும். தமிழனுக்குக் கிடைத்த ஒரு தனிச்செல்வம் கர்நாடக சங்கீதம். இதற்கு இணை உலகில் வேறு எந்த சங்கீதமும் இருக்குமா என்று தெரியவில்லை. இந்தத் தனிப்பெரும் செல்வத்தை சம்பாதிக்காமல் இருந்தால் அது ..... அந்த துர்ப்பாக்கியத்தை என்னவென்று சொல்லுவது?
கோடை விடுமுறை கழிந்ததும் நானும் இங்கே இசையை முறைப்படி படிக்கத் தீர்மானித்திருக்கிறேன். நல்ல வசதி இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இரவும் பகலும் மனம் இசைப்பித்தில் ஊறிப் போயிருக்கிறது.
எந்தக் கலையை எடுத்துக் கொண்டாலும் உலகில் எல்லோரும் (பாஷை, தேசம் முதலிய வேறுபாடுகளால் பாதிக்கப் பெறாதபடி) ரசிக்கக் கூடியதாக இருக்கிறது. இத்தாலி தேசத்தான் ஒருவன் தீட்டிய சித்திரத்தைத் தமிழன் ரசிக்க முடியும். தமிழன் எழுதிய ஒரு காவியத்தை மொழிபெயர்த்தால் கூடிய மட்டும் அதை ஒரு ஆங்கிலேயன் அனுபவித்து விடுவான். இப்படி எந்தக் கலையை எடுத்துக் கொண்டாலும் அது உலகத்தாரின் ரசனைக்குப் பொதுவாகத்தான் இருக்கிறது. ஆனால், சங்கீதம் அப்படி இல்லை. நம்முடைய அருமையான தோடி, ஆனந்த பைரவி போன்ற ராகங்கள் அந்நிய நாட்டானுக்குப் பிடிப்பதில்லை. அந்நிய நாட்டான் இசை நம் காதில் விழுவதைவிட ரயில் எஞ்ஜின் சத்தம் நமக்கு சற்று எரிச்சல் கொடாமல் இருக்கும். சங்கீதம் தேசம்வாரியாக வேறுபட்ட அமைப்புகளில் அமைந்த ஒரு விசித்திரமான கலை. ஆனால் நம் விளாத்திகுளம் சுவாமியவர்கள் ஆங்கிலப் பண்களை நம் கர்நாடக ராகங்கள் சிலவற்றில் பொருத்திப் பாடினார்கள். சங்கீதத்தில் ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் உறவு தேடிக் கொடுத்த பெருமை நம் சுவாமியவர்களையே சேரும். அன்று முதல் ; இங்கு உயர்ந்த ஆங்கிலச் சங்கீதம் நிரம்பிய பல படங்களைப் பார்த்தேன். நம் உள்ளத்தை அமுக்கிப் பிடித்துக் கொண்டுதான் ரசிக்க வேண்டும். அவர்கள் ஆலாபனம் செய்யும் போது அதி துரிதமாக ரவைகள் புரளுகின்றன. அது ஒன்றேதான் அதிலுள்ள சிறப்பு.
இந்துஸ்தானி சங்கீதத்தில் குரலினிமையை நெளித்து நெளித்துக் காட்டுகிறார்கள். தேன்பாகுபோல் சாரீரம் இருந்தாலும் இசையைக் கேட்க முடிவதில்லை. ஆனால், நம் கர்நாடகராகம் ஒன்றை முரட்டுத் தொண்டையில் ஒருவன் பாடினாலும் அதில் என்ன ‘‘ஜீவு’’ இருக்கிறது, தெரியுமா?
‘‘ஆ’’... என்ற ஒரு ஓசையில் எத்தனையோ கோடிக் கணக்கான ஒலி அணுக்கள் இருக்கின்றன. மனிதனுடைய குரல் பேதங்களில் லக்ஷம் விதமான அணுக்களும் இருக்கின்றன. ஒலியின் ஏற்றமும் இறக்கமும் இஷ்டப்படியெல்லாம்தான் சஞ்சரிக்கின்றன. ஆனால், மனிதனுடைய குரலையே ஏழு பிரிவுகளுக்குள்ளே அடக்கி வைத்த நம் முன்னோர்களின் பெருமைதான் என்ன! ஏழே ஏழு ஸ்வரங்கள். ஒரு எழுத்தை மாற்றி மற்றொரு எழுத்தைப் போட்டு ஏதோ ஒரு வரிசைக் கிரமமான அமைப்பை உண்டாக்கி விட்டால் அதில் ஒரு தெய்வநாதம் கிளம்பி விடுகிறது. அந்த நாத இழையின் நெளிவு ராகமாக உருப்பெற்று மணிக் கணக்காக சஞ்சரிக்கிறது. அதற்கு ஆதியும் அந்தமுமே இல்லை. இவ்வளவுதான் என்று வரையறுக்க முடியாத ஒரு உருவில் ரீங்காரம் செய்கிறது ராகம். ஆனால், காலத்தின் எல்லைக்கோட்டுக்குள் அடங்கின மனிதன் எல்லையற்ற அகண்டத்தில் ஒரு பரிபூரணத்துவத்தைக் கண்டது போல ஒரு ராகத்தை முடிக்கிறான். இப்படி எத்தனை ஆயிரம் ராகங்கள்! சாதாரணமாக கூவும் ஒரு குரலை இத்தனை பகுதிகளில் ஒழுங்கு படுத்திய தமிழனுடைய இசை ஞானத்தை இனி உலகம் என்றாவது மறக்குமா?
கவிக்கு சிறப்புக் கொடுப்பதும் இசைதான். இசையில்லாத சொற்கள் மனித உணர்ச்சியைப் புலப்படுத்தாது. இசை சேரும்போதுதான் உணர்ச்சி வெளிப்படுகிறது. வசனத்தினால் ஒரு விஷயத்தைத் தெரிவிக்கலாம். ஆனால், அந்த விஷயத்தை மனசுக்குள்ளிருந்து தள்ளும் உணர்ச்சியை வசனத்தில் எப்படி எழுதுவது? அங்கே இசைதான் வந்து உதவ வேண்டியிருக்கிறது. அடுத்தவன் உணர்ச்சியை நம்மனசில் குடியேற்றுவது இசைதான். இசையில்லாத சொற்களல்ல ; அவை வெறும் எழுத்துக்கள்.
சீன தேசத்தில் கிறிஸ்து பிறக்க 500 வருஷத்துக்கு முன்னால் கன்பூஷியஸ் என்ற அறிஞர் இருந்தார். அவர் சொல்லுவதாவது :
‘‘நாம் வாயால் தெரிவிக்கும் விஷயத்தை நம் எழுத்துக்கள் பரிபூரணமாகத் தெரிவிக்காது. நாம் நினைக்கக் கூடிய விஷயங்களைப் பரிபூரணமாக நம் பேச்சிலே தெரிவித்து விட முடியாது’’.
இது எவ்வளவு உண்மையான விஷயம்!....
நம் ராகம் ஒன்றை எடுத்துக் கொள்ளுவோம். சில ஸ்வரங்கள் வரிசைக்கிரமமாக அமைந்துவிட்டன. அவற்றின் ஐக்கியத்தில், அவை ஒன்றோடொன்று கட்டித் தழுவியாடும் ‘‘அலகிலா விளையாட்’’டில் நெஞ்சை உருக்கும் தீங்கானம் பிறக்கிறது. அந்த இசையைக் கேட்டு இது நல்ல ஒலியா அழகான ஒலியா என்று தீர்மானிப்பது நம் மாமிச அவயவங்களல்ல. நமக்குள் ஒரு நல்ல ரசிகன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அவன் இசையின் ஸ்பரிசத்தில் தன்னை மறந்து கண்களை பரவசத்தில் மூடி அனுபவிக்கிறான். அவன் அருவருத்து விட்டால் அது கெட்ட இசை என்று முத்திரை வைத்துவிடலாம். நல்ல இசையில் அவன் பாம்பாகக் கட்டுண்டு சுருளுவான். இங்கே ஒரு அறிஞர் சொல்லுவதை நீ கவனிக்க வேண்டும் :
‘‘கெட்ட இசை மனிதனைத் தாக்கினால் அவனுள் ஒரு கெட்ட உணர்ச்சி பிறந்து அந்த இசையோடு சேர்ந்து கொள்ளுகிறது. கெட்ட உணர்ச்சி கிளம்பியதும் அந்த இசையை மோசமானது என்று நீக்கி விடலாம். இனியதாகிய ஒரு உயர்ந்த இசையைக் கேட்டால் ஒரு உயர்ந்த பண்பு உதயமாகி அது தன் குணங்களை மனிதன் கண்முன் பரப்புகிறது. உயர்ந்த இசை அப்பேற்பட்டது.’’
இப்படிப்பட்ட இசைக்கு உள்ள சக்தியை வரையறுக்க முடியாது. எல்லா நாட்டினரும் இதை ஒப்புக்கொள்ளுகின்றனர். இங்கேயும் கூட சில அந்நிய நாட்டறிஞர்களின் அபிப்பிராயங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். (உனக்கு அலுப்பாக இருக்குமோ என்னவோ!)
இன்பானுபவத்துக்கு கன்பூஷியஸ், கலைகளை நாடினாராம். அதிலும் இசையைப் பற்றி அவர் சொல்லுவதைப் பார் :
‘‘மனித சமுதாயத்துக்குப் பொருந்திய நற்குணங்களில்லாத மனிதனுக்குத்தான் சங்கீதம் பயன்படாமல் போகும்.’’
ஷேக்ஸ்பியரோ, ‘‘சங்கீதத்துக்கு உருகாதவன் சண்டாளன்’’ என்கிறார்.
சீனாவில் 2400 வருஷத்துக்குமுன் ‘‘லி_கி’’ என்ற ஒரு புத்தகம் இயற்றப்பட்டது. அதில் கீழ்வருமாறு காணப்படுகிறது :
‘‘ரிஷிகள் இசையில் இன்பத்தை அனுபவித்தார்கள். மனிதர்களை நல்வழிப்படுத்த அதுபயன்படும் என்று கண்டார்கள். மனிதனை இசை ஆட்கொண்டு, அவன் பழக்க வழக்கங்களை மாற்றி விடுவதால் பழையகாலத்து அரசர்கள் சங்கீதத்தின் மூலமாக பல சாஸ்திரங்களைப் போதிக்கச் செய்தார்கள்’’
இந்தியர்களாகிய நாமோ சங்கீதம், ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஒட்டச் செய்யும் சக்தி வாய்ந்தது என்று நம்புகிறோம்.
அதோடு வேத காலத்திலிருந்த ஒரு இந்தியதத்துவ ஞானி ‘‘எவனொருவன் வீணை வாசித்துக்கொண்டு இனிமையாகப் பாடுவானோ அவன் விடுதலைப் பாதையில் இலேசாக அடி எடுத்து வைத்து விடுகிறான்’’ என்கிறார். பார்க்கப்போனால் இந்தியர்கள் தான் இசையை தெய்வமாகப் போற்றியிருக்கிறார்கள்.
இவ்வளவு சீர்பெற்றுப் பெருகி நிறைந்த இசை வெள்ளத்தில் ஒரு துளியாவது நாம் அருந்த வேண்டாமா? இந்த அமுத ஓடை ஓடும்போது பார்த்துக் கொண்டே இருந்தால் நம் கலைப்பசி தீருமா? ஒவ்வொருவருமே அந்த அமுதவெள்ளத்தில் திளைத்து விட வேண்டும்.
எப்படியோ இசைக்கலையில் மனம் பற்றிப் படிக்கத் தொடங்கியிருக்கிறீர்கள். சந்தர்ப்பவசமாக முயற்சியில் இறங்கினோம் ; அதை வெற்றிகரமாக முடிப்பதில் தானே பெருமை!
அங்கே பக்கத்தில் இசையில் வரம்பற்ற மேதாவிலாசம் படைத்த பலர் இருக்கிறார்கள். விளாத்திகுளம் சுவாமியவர்களின் இசையைப்போல நம் எதிர்காலத்தில் கேட்கப்போகிறோமா? இது நல்ல சந்தர்ப்பம். விடாமுயற்சிதான் துணை செய்யும்.
இந்தக் கடிதத்தில் நான் எழுத நினைத்த விஷயங்கள் வேறு. ஆனால் சங்கீதம் வந்து இடத்தை அடைத்துக் கொண்டபின், அவற்றை எங்கே எழுதுவது? பின்னால் பார்க்கலாம். கடிதம் நீண்டதற்கு மன்னிக்கவும்.
உன்
கு. அழகிரிசாமி
கு.அழகிரிசாமியும், கி. ராஜநாராயணனும் பக்கத்துப் பக்கத்து வீட்டுக்காரர்கள். குழந்தைப் பருவத்திலிருந்து ஒரு தெருவின் புழுதியில் ஒன்றாய்க் க...
தந்தியைக் கண்டு எல்லோரும் இடிந்து உட்கார்ந்துபோனோம். அதில் கண்டிருந்த விஷயம் எங்களுக்கு அர்த்தமே ஆகவில்லைபோல் இருந்தது.
‘சிவராமையர் - டேஞ்சரஸ்-’ என்ற இரண்டு வார்த்தைகளே இருந்தன. தந்தி சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருந்தது.
என் தமக்கை இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சென்னையிலிருந்து வந்தாள். அப்பொழுது எங்கள் அத்திம்பேர் நன்றாகக் குணமடைந்து விட்டார். க்ஷயத்தின் சின்னம் கொஞ்சம்கூட இல்லையென்று பிரபல வைத்தியர்கள் நிச்சயமாகச் சொல்லிவிட்டார்கள்.
ஓங்கித் தலையில் அடித்ததுபோலக் குஞ்சம்மாள் பிரமை தட்டிப் போய் உட்கார்ந்திருந்தாள்.
எங்கள் எல்லோருடைய மனத்திலும் ஒரு பெருத்த போர் நடந்து கொண்டிருந்தது. ‘இருக்காது!’, ’ஏன் இருக்கக்கூடாது? இருக்கும்’ என்று இரண்டு விதமாக மனத்தில் எண்ணங்கள் உதித்துக் கொண்டிருந்தன. ‘இருக்கும்!’ என்ற கட்சி, தந்தியின் பலத்தில் வேரூன்றி வலுக்க வலுக்க, ‘இருக்காது!’ என்ற கட்சி மூலைமுடுக்குகளிலெல்லாம் ஓடிப்பாய்ந்து தனக்குப் பலம் தேட ஆரம்பித்தது.
தந்தியில் கண்டிருந்ததைத் திரும்பத் திரும்பப் படித்தோம். அதில் ஒன்றும் பிசகு இருக்கவே முடியாது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்துதான் வந்திருந்தது. சந்தேகமில்லை. காலையில் அடித்திருக்கிறார்கள். குஞ்சம்மாள் பேருக்குத்தான்! தவறு எப்படி நேர்ந்திருக்க முடியும்?
ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் என்ன நேர்ந்திருக்க முடியும்? மூன்று நாட்களுக்கு முன்புதானே கடிதம் வந்தது? ஏதாவது உடம்பு சௌகரியமில்லாமல் இருந்தால் அதில் எழுதாமல் இருப்பாரோ?
என் தமக்கையும் நானும் சாயந்தரம் ரெயிலில் சென்னைக்குப் புறப்பட்டோம். அதுதான் அன்று கும்பகோணத்திலிருந்து சென்னைக்குப் போகும் முதல்வண்டி.
புறப்படுவதற்கு முன் நல்லவேளை பார்த்துப் ‘பரஸ்தானம்’ இருந்தோம். சாஸ்திரிகள், ‘ஒண்ணும் இருக்காது. கிரகம் கொஞ்சம் பீடிக்கும், அவ்வளவுதான்!’ என்றார். அம்மா, தெய்வங்களுக்கெல்லாம், ஞாபகமாக ஒன்றைக் கூடவிடாமல், பிரார்த்தனை செய்துகொண்டு, மஞ்சள் துணியில் காணிக்கை முடிந்து வைத்தாள். குஞ்சம்மாளுக்கு மஞ்சள் கிழங்கு, குங்குமம், புஷ்பம், வெற்றிலைப் பாக்கு க்ஷேமதண்டுலம் எல்லாம் மறந்து போகாமல் மடி நிறையக் கட்டிக்கொடுத்தாள். பசியுடன் போகக்கூடாது என்று. புறப்படும்பொழுது கட்டாயப்படுத்தி இருவரையும் சாப்பிடச் செய்தாள்.
குஞ்சம்மாள், இயந்திரம்போலச் சொன்னதையெல்லாம் செய்தாள்; ‘ஸ்வாமிக்கு நமஸ்காரம் பண்ணு!’ என்றதும் போய் நமஸ்காரம் செய்தாள்.
அவள் கதிகலங்கிப் போயிருந்தாள் என்பது அவள் பேச்சற்றுப் போயிருந்ததிலிருந்தே நன்றாகத் தெரிந்தது. அவளுடைய கலகலப்பு, முதல் தடவையாக அன்று, எங்கோ அடங்கிவிட்டது.
அம்மா வாசலில் போய்ச் சகுனம் பார்த்தாள். திவ்யமான சகுனம். காவேரியிலிருந்து அடுத்தவீட்டுச் சுந்தரி ஜலம் எடுத்துக்கொண்டு எதிரே வந்தாள்.
‘ஒண்ணும் இருக்காது! நமக்கேன் அப்படியெல்லாம் வரது? நாம் ஒருத்தருக்கு ஒண்ணும் கெடுதல் எண்ணல்லே’ என்றெல்லாம், அம்மா அடிக்கடி தன்னையும் பிறரையும் சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.
ரெயில் ஏறுகிறபோது மணி சுமார் எட்டு இருக்கும். இரவு பூராவும் போயாக வேண்டுமே என்று துடித்தோம். போய் இறங்குவதற்குமுன் செய்வதற்கு ஒன்றுமில்லை என்றதால், கொஞ்சங் கொஞ்சமாகத் துடிப்பும், கலக்கலுங்கூட மட்டுப்பட்டன. இரண்டு ஜன்னல்களின் அருகில் நேர் எதிராக இரண்டு பெஞ்சுகளில் உட்கார்ந்தோம்.
‘நீ புறப்படுகிறபோது ஒன்றுமே’ இல்லையே, அக்கா?’ என்றேன், ஏதாவது பேச்சுக் கொடுக்க வேண்டும் என்று.
‘ஒண்ணுமில்லையே! இருந்தால் புறப்பட்டு வருவேனா?’ என்று அவள் ஏக்கம் நிறைந்த குரலில் பதில் சொன்னாள்.
‘அதற்குள் திடீரென்று ஒன்றும் ஏற்படுவதற்குக் காரணமே இல்லையே!’
எது எப்படியானாலும், மனசைச் சில மணி நேரங்களாவது ஏமாற்றித் தத்தளிப்பைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தது போலப் பேச்சு வெளிவந்தது.
‘நான், இந்த நோன்பிற்காக இங்கே தாமதம் செய்யாமல், போயிருக்காமல் போனேன்!’
’ஒருவேளை, அக்கா, நோன்பிற்காக நீ இங்கே இருந்துவிட்டதுதான் அத்திம்பேருக்குக் கோபமோ? அவர் உடனே வரும்படியாக எழுதியிருந்தார். நாம் ஒரு வாரத்தில் வருவதாகப் பதில் எழுதினோம். அதற்காகத்தான் இப்படித் தந்தி அடித்துவிட்டாரோ?’
‘ஆஸ்பத்திரியிலேயிருந்து வந்திருக்கே?’
’ஆஸ்பத்திரி பேரை வைத்து அத்திம்பேரே அடிக்கக் கூடாதா?’
‘அப்படி அடிக்க முடியுமோ?’ குஞ்சம்மாள் குரலில் ஆவல் இருந்தது.
‘ஏன் முடியாது? தந்தியாபீஸில் - ‘
‘ஒருவேளை அப்படி இருக்குமோ?’ என்று கேட்டபொழுது குஞ்சம்மாளின் முகம் கொஞ்சம் மலர்ந்துவிட்டது.
‘அப்படித்தான் இருக்கவேண்டும். இப்படித் திடீரென்று ஒன்றும் ஏற்படக் காரணமே இல்லை. முந்தா நாள் தானே கடிதாசு வந்தது?’
‘ஆமாம்! அதில் ஒடம்பெப் பத்தி ஒண்ணுமே இல்லையே?’
‘தந்தி அடித்தால் நாம் உடனே புறப்பட்டு வருவோம் என்றுதான் அடித்திருக்கிறார். வீட்டிலிருந்து அடித்தால் கூட அவ்வளவு தாக்காது என்று ஆஸ்பத்திரி பேரை வைத்து அடித்திருக்கிறார்’.
‘அப்படி அடிக்க முடியுமாடா, அம்பி? அப்படியிருக்குமா?’ என்று மறுபடியும் குஞ்சம்மாள் சந்தேகத்துடன் கேட்டாள்.
அவள் அப்படிக் கேட்ட பொழுது, முடியாது என்று எனக்குத் தெரிந்திருந்தால்கூடச் சொல்ல மனம் வந்திருக்குமோ, என்னவோ?
‘நீ வேண்டுமானால் பாரேன்! எழும்பூர் ஸ்டேஷனில் வந்து இருக்கப் போகிறார்’ என்றேன்.
மனத்தில், ஆழத்தில் பீதி அதுபாட்டிற்குப் புழுப்போலத் துளைத்துக்கொண்டே இருந்தது. மேலே மட்டும் சமாதானம் கொஞ்ச நேரத்திற்கு ஒரு தரம் அந்தத் திகில் மேல்மட்டத்திற்கு வந்து தலையெடுக்கும்; உடம்பு பதறும்; நெஞ்சு உலரும்; அடிவயிறு கலங்கும்; முகம் விகாரமடையும். மறுபடியும் மெதுவாகச் சமாதானத்தின் பலம் அதிகமாகும்; பயத்தைக் கீழே அமுக்கிவிடும்.
சுகமோ துக்கமோ எந்த நிலைமையிலும் நீடிக்க முடியாது என்பதற்கு மனித சுபாவத்தில் இதுவும் ஓர் அத்தாட்சியோ?
ரெயில் வண்டி வெறி பிடித்ததுபோல் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தது; எங்கேயோ சென்னையில் விடியப்போகும் ஒரு காலையை நோக்கிக் கனவேகமாகப் போய்க் கொண்டிருந்ததுபோல் இருந்தது.
துக்கத்தில் தலையெடுக்கும் தைரியம்போல தொலை இருளில் அந்த ஒளித்தொடர் விரைந்து சென்று கொண்டிருந்தது.
சென்னை போய்ச் சேரும்பொழுது, எங்கள் கவலையும் அந்த இருளைப் போலப்பின் தங்கிவிடாதா? நிம்மதி, காலையைப் போல, அங்கே எங்களை வந்தடையாதா? இருள், நிச்சயம் கூட வராது! சென்னையில் காலைதான்! - இவ்வாறெல்லாம் பேதைமனம் தன்னைத் தேற்றிக் கொண்டே இருந்தது.
குஞ்சம்மாள் மூட்டையிலிருந்து வெற்றிலை பாக்கை எடுத்து எனக்குக் கொடுத்துத் தானும் போட்டுக் கொண்டாள்.
எங்களவர்க்குள்ளேயே குஞ்சம்மாள் அதிக அழகு என்று பெயர். நல்ல சிவப்பு; ஒற்றை நாடித் தேகம்; அவளுக்கு தெருவிலேயே ஒரு செல்வாக்கு உண்டு.
அன்று என்னவோ, இன்னும் அதிகமாக, அவள் ஒளிர்ந்து கொண்டிருந்தாள். அவள் முகத்தில் என்றுமே இல்லாத ஓர் ஏக்கம் என்று முதல் முதலாகத் தென்பட்டதாலோ என்னவோ, அவள் அழகு மிளிர்ந்து தோன்றினாள்.
குஞ்சம்மாளுக்குப் புஷ்பம் என்றால் பிராணன். யாரு கேலி செய்தாலும் லட்சியம் செய்யமாட்டாள். தலையை மிஞ்சிப் பூ வைத்துக் கொள்ளுவாள். ஆனால் அன்று அவள் தலையில் வைத்துக் கொண்டிருந்த பூவைப்போல, அது என்றும் சோபித்ததில்லை என்று என் கண்களுக்குப் பட்டது. வெற்றிலைக்காவி அவளுடைய உதடுகளில் அன்றுதான் அவ்வளவு சிவப்பாகப் பிடித்திருந்ததுபோல இருந்தது.
சோர்வில்தான் சௌந்தரியம் பரிமளிக்குமோ? அல்லது-? கடைசியாக, அணைவதற்கு முன்னால், விளக்கு-? இல்லை! இல்லை!
குஞ்சம்மாள் அன்று என்னவோ அப்படி இருந்தாள்.
வெற்றிலையைப் பாதி மென்றுகொண்டே, ‘அம்பு, ஒங்க அத்திம்பேருக்கு வாக்கப்பட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்?’ என்றாள் குஞ்சம்மாள்.
அவளுடைய கண்களில் ஜலம் மளமளவென்று பெருகிற்று.
‘என்னிக்கும் பிடிவாதம், என்னிக்கும் சண்டை, நான் அழாத நாள் உண்டா? - என் வாழ்வே அழுகையாக-’ என்று உணர்ச்சி வேகத்தில் ஆரம்பித்தவள் சட்டென்று நிறுத்திக்கொண்டாள்.
‘எதிலாவது நான் சொன்ன பேச்சைக் கேட்டது உண்டா? எப்படியோ ஆயுசுடன் இருந்தால் போதுமென்று தோன்றிவிட்டது, போனதடவை உடம்புக்கு வந்தபோது!’
இருவரும் வெகுநேரம் மௌனமாக இருந்தோம். ஆனால் மனசு மட்டும் மௌனமாக இருக்கவில்லை.
நல்ல நிசிவேளை. வண்டியில் ஜனங்கள் உட்கார்ந்து கொண்டும் படுத்துக் கொண்டும் அநேக தினுசாகத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். வண்டி ஒரு சின்ன ஸ்டேஷனில் நின்றதும், சிலர் எழுந்து இறங்கிப் போவார்கள், மௌனமாகப் பிசாசுகள் போல. அப்பொழுதுதான் தூங்கி எழுந்த சிலர், ‘இதென்ன ஸ்டேஷன்?’ என்று தலையை நீட்டிக் கேட்பார்கள். போர்ட்டர் ஒருவன் ஏதாவது ஒரு ஸ்டேஷன் பெயரை அரைகுறையாகத் தூங்கி வழிந்துகொண்டே சொல்லுவான். மறுபடியும் வண்டி பூரான் மாதிரி ஓட ஆரம்பிக்கும்.
சுமார் ஒரு மணிக்கு வண்டி விழுப்புரம் ஸ்டேஷனுக்குள் ஆர்ப்பாட்டத்துடன் போய் நின்றது. அதுவரையிலும் வண்டியில் அமைதியும் நிசப்தமும் இருந்தன. அந்த ஸ்டேஷனில் கூட்டமும் கூக்குரலும் அதிகமாயின. அது வரையில் காலியாகவே வந்த எங்கள் பலகையில் சாமான்கள் நிறைந்தன. நகரத்தார் இனத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருத்தி, பெண் குழந்தையும் புட்டியுமாக என் தமக்கையின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.
அவள் அணிந்திருந்த முதல் தரமான வைரங்களுடன் அவள் முகமும் ஜொலித்துக் கொண்டு இருந்தது. ஏதோ ஓர் உள்ளப்பூரிப்பில் அவள் தன்னையே மறந்து தன் குழந்தையுடன் கொஞ்சினாள்.
வண்டி புறப்பட்ட சற்று நேரத்திற்கெல்லாம் என் தமக்கையின் பக்கம் தன் புன்னகை பூத்த முகத்தைத் திருப்பி; ‘எங்கிட்டுப் போறீக அம்மா?’ என்று கேட்டாள்.
என் தமக்கை சுருக்கமாக, ‘பட்டணம்’ என்றாள்.
’நானும் அங்கேதாம்மா வாரேன்!’ என்று ஆரம்பித்து, அந்தப் பெண் வரிசையாகக் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தாள். பிறகு தன் பக்கத்திலிருந்த ஓலைப் பெட்டியிலிருந்து கொஞ்சம் மல்லிகைப்பூ எடுத்துக் குஞ்சம்மாளுக்குக் கொடுத்தாள்.
என் தமக்கை மெய்சிலிர்த்துப் போனாள். வெகு ஆவலுடன் அந்தப் பூவை வாங்கி ஜாக்கிரதையாகத் தலையில் வைத்துக்கொண்டாள். அம்பாளே அந்த உருவத்தில் வந்து தனக்குப் பூவைக் கொடுத்து, ‘கவலைப்படாதே! உன் பூவிற்கு ஒருநாளும் குறைவில்லை!’ என்று சொன்னதுபோல எண்ணினாள்.
அதுவரையில் அவளுக்கு ஒவ்வொரு வார்த்தை பதில் சொல்லிக் கொண்டு வந்தவள். உடனே இளகி, அவளிடம் சங்கதி பூராவும் சொன்னாள்.
‘மகாலட்சுமி போலே இருக்கீங்கம்மா! ஒங்களுக்கு ஒண்ணும் கொறவு வராது!’ என்று அவள் சொன்னதைத் தெய்வ வாக்காக எடுத்துக்கொண்டுவிட்டாள் குஞ்சம்மாள். அந்த ஆறுதலில் கொஞ்ச நேரம் அவளுடன் கவலை மறந்து பேசிக் கொண்டிருந்தாள்.
திடீரென்று ஞாபகம் வந்துவிட்டது. ஏதோ பெருத்த குற்றம் செய்தவள் போலத் திகிலடைந்தாள். ‘ஐயையோ! பைத்தியம் போல் இப்படிச் சிரிச்சுண்டு பேசிக் கொண்டிருக்கிறேனே!’ என்று எண்ணினவள்போல அவள் கலவரமடைந்தது நன்றாகத் தெரிந்தது. வண்டிபோன வேகத்தில் விர்ரென்று அடித்த காற்றிலும் அவளுடைய முகத்தில் வியர்வை தென்பட்டது.
ஆனால் எவ்வளவு நேரந்தான் கவலைப்பட முடியும்? கவலையால் ஏற்பட்ட அசதியிலேயே எங்களை அறியாமல் கண்ணயர்ந்தோம்.
துக்கத்தில், நித்திரையும் நினைவு மறதியும் சேர்ந்துதான் வாழ்க்கைக்கு ஒரு சிறு போதையாகித் தாபத்தைத் தணிக்கின்றனவோ?
வண்டி செங்கற்பட்டை நெருங்குகிற சமயம். வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தோம். கிழக்கு வெளுத்துக்கொண்டிருந்தது. வண்டி ஏதோ ஒரு குக்கிராமத்தைக் கடந்து போய்க்கொண்டிருந்தபொழுது கோழி கூவியதுகூடக் காதில் வந்துபட்டது.
‘அப்பா! விடியுமா?’ என்கிற நினைப்பு ஒருபக்கம்.
‘ஐயோ! விடிகிறதே! இன்னிக்கி என்ன வச்சிருக்கோ!’ என்ற நினைப்பு மற்றொரு பக்கம்.
இரவின் இருட்டு அளித்திருந்த ஆறுதலைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தலைகாட்டிய வெளிச்சம் பறிக்க வருவதுபோல் இருந்தது.
எங்கேயோ, கண்காணாத தூரத்தில் உருவடைந்த ஒரு காட்சியில் ஈடுபட்டவளாய் நிலைகுத்திய பார்வையுடன் குஞ்சம்மாள் அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.
‘செங்கற்பட்டில் பல் தேய்த்துக்கொண்டு காபி சாப்பிடுவோமா?’ என்று கேட்டேன்.
‘எல்லாம் பட்டணத்தில்தான்!’ என்று சொல்லிவிட்டாள் குஞ்சம்மாள். பக்கத்தில் நகரத்தார் பெண் கவலையற்றுத் தூங்கிக் கொண்டிருந்தாள்.
‘இதோ ஆயிற்று, இதோ ஆயிற்று!’ என்று சொல்வதுபோல வண்டி தாவிப் பறந்து கொண்டிருந்தது.
ஆனால் எங்களுக்கு என்னவோ பட்டணம் நெருங்க நெருங்க, வண்டி வேண்டுமென்றே ஊர்வதுபோல இருந்தது.
எழும்பூர் வந்தது கடைசியாக.
ஸ்டேஷனில் யாருமில்லை; அதாவது எங்கள் அத்திம்பேர் இல்லை - எல்லோரு இருந்தார்கள். ‘ஆனால் அவர் ஸ்டேஷனுக்கு எதற்காக வரவேண்டும்? அங்கே எதிர்பார்ப்பது சரியில்லைதான்’ என்று அப்பொழுது தோன்றிற்று.
வீட்டுக்குப் போனோம். வீடு பூட்டியிருந்தது.
உடம்பு சௌகரியமில்லைதான்! சந்தேகமில்லை இப்பொழுது!
ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் போனோம். அரைமணி நேரம் துடித்த பிறகு குமாஸ்தா வந்தார்.
‘நீங்கள் கும்பகோணமா?’ என்றார்.
’ஆமாம்-’ என்றேன்.
‘நோயாளி - நேற்றிரவு - இறந்துபோய்விட்டார்’ என்று குமாஸ்தா சாவதானமாகச் சொன்னார்.
’இறந்து-? அது எப்படி? அதற்குள்ளா?’ அப்பொழுதும் சந்தேகமும் அவநம்பிக்கையும் விடவில்லை.
‘சிவராமையர்-?’
’ஆமாம், ஸார்!’
‘ஒருவேளை-’
‘சற்று இருங்கள். பிரேதத்தைப் பெற்றுக் கொள்ளலாம்’ என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுக் குமாஸ்தா தம் ஜோலியைக் கவனிக்கப் போனார்.
கொஞ்சநேரம் கழித்துப் பிரேதத்தைப் பெற்றுக் கொண்டோம்.
அப்பொழுது, அதைப் பார்த்தவுடன், நிச்சயமாயிற்று!
ஒருவழியாக மனத்திலிருந்த பயம் தீர்ந்தது; திகில் தீர்ந்தது.
பிறகு-?
விடிந்துவிட்டது.
தந்தியைக் கண்டு எல்லோரும் இடிந்து உட்கார்ந்துபோனோம். அதில் கண்டிருந்த விஷயம் எங்களுக்கு அர்த்தமே ஆகவில்லைபோல் இருந்தது. ‘சிவராமையர் - டேஞ்...
1
‘மணி!’ வாசலில் நின்று கொண்டே ராமு கூப்பிட்டான். நண்பன் வீட்டில் இருக்கிறானோ இல்லையோ என்று அவனுக்குச் சந்தேகம்.
‘எங்கேயோ வெளிலே போயிருக்கா. நீங்க யாரு?’ மணியின் மனைவி கதவண்டை நின்றுகொண்டு மெல்லிய குரலில் கேட்டான்.
ராமுவுக்குக் கொஞ்சம் தூக்கி வாரிப்போட்டுவிட்டது.
மணியும் அவனும் கலாசாலையில் சேர்ந்து படித்தவர்கள். மணியின் மனைவியைப் பற்றி அவனுக்கு அதிகமாகத் தெரியாது. அவளை அவன் அதுவரையில் பார்த்ததுகூட இல்லை. புதுக்குடித்தனம் நடத்த அவள் சென்னைக்கு வந்து ஒரு மாதந்தான் ஆகியிருந்தது. அந்த மாதம் முழுதும் ராமு சென்னையில் இல்லை. அதற்கு முன் சாரதாவும் அவனைப் பார்த்ததில்லை.
ராமுவும் மணியைப் போல மிகவும் முற்போக்கமான கொள்கைகள் உடையவன்தான். கலாசாலை விவாதங்களிலும் சர்ச்சைகளிலும் பேசியபொழுது, ஸ்தீரி புருஷர்கள் சமானர்களாகப் பழக வேண்டுமென்றும், பெண்களின் முன்னேற்றம் மிகவும் அவசியமான சீர்திருத்தமென்றும் ஆவேசத்துடன் கர்ஜித்து வந்தான். ஆனால் அநுஷ்டானத்தில் அந்தக் கொள்கைகள் சோதனைக்கு வந்தபொழுது அவன் கலவர அடைந்துவிட்டான். முன்பின் பரிச்சயமின்றி மணியின் மனைவி தன்னுடன் பேசியது அவனுக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. அவன் அதைச் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. ‘வீட்டில் மணி இல்லாவிட்டால் பதில் வராது. கொஞ்சநேரம் நின்று பார்த்துவிட்டுப் போய் விடுவோம்’ என்றே அவன் ஒரு குரல் கூப்பிட்டுப் பார்த்தான்.
மணியின் மனைவி சாரதா படித்த பெண்ணும் அல்ல; அசல் கிராமாந்தரம்; எந்தப் பக்கத்திலும் ரெயில் பாதைக்கே இருபது மைல் தூரத்திலுள்ள ஒரு சோழ தேசக் கிராமத்துப் பெரிய மிராசுதாரின் பெண். அவளுடைய நடை உடை பாவனைகளிலும், அந்தச் சில நிமிஷங்களில் அவன் கண்களில் பட்டமட்டில் ஒரு விதப் புதுமாதிரியான சின்னமும் காணவில்லை.
விலையுயர்ந்த பெங்களூர்ப் பட்டுச் சேலையை நேர்த்தியாகக் ‘கொசாம்’ விட்டுக் கட்டிக் கொண்டிருந்தாள். அதற்கேற்ற வர்ணம் கொண்ட பழையமாதிரி ரவிக்கைதான் அணிந்திருந்தாள். தலைமயிரை நடுவே வகிரெடுத்துத்தான் பின்னிக் கொண்டிருந்தாள். பின்னல்கூட, நவநாகரிகப் போக்குப்படித் ‘தொள தொள’வென்று காதை மூடிக் கொண்டு இருக்கவில்லை. பின்னலை எடுத்துக் கட்டிக் கொண்டிருந்தாள். நெற்றியில் பூர்ணசந்திரன் போலப் பெரிய குங்குமப்பொட்டு இருந்தது. உடம்பின் மேலிருந்த வைரங்கள் பூத்துக்கொட்டிக் கொண்டிருந்தன. மூக்கில் புலாக்கு இருந்தது. கைக்காரியமாக இருந்தவள், அவசரமாக யாரென்று பார்த்துப் பதில் சொல்ல வந்தாள் என்பது அவள் தோற்றத்திலிருந்து தெரிந்தது. அப்பேர்ப்பட்டவள் தன்னுடன் வந்து பேசினதும் ராமு மனம் தடுமாறிப் போனான்.
ஒரு பெண் வந்து தன்னுடன் பேசிவிட்டாள் என்பதால் அவன் கூச்சமடையவில்லை. கலாசாலையிலும் வெளியிலும் படித்த பெண்கள் பலருடன் பேசிப் பழகினவன் தான் அவன். அது அவனுக்கு சகஜமாயிருந்தது. இந்தப் படிக்காத பெண் தன்னுடன் பேசினதுதான் அவனுக்குக் குழப்பத்தை உண்டாக்கிவிட்டது. படித்த பெண்கள் கூடப் புது மனிதர்களிடம் பேசுவது கஷ்டமாயிற்றே! அப்படியிருக்க, நவநாகரிக முறையில் ஆண்களுடன் பழகுவது என்பதே அறியாத பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த பெண் பிற புருஷனுடன் பேசுவதென்றால், அது ராமுவுக்கு விபரீதமாகப்பட்டது. ஆனால் அவள் சொன்ன வார்த்தைகள் மெல்லிய தொனியுடன்தான் வெளிவந்தன. அவன் முகத்தைப் பார்த்துக்கூடப் பேசவில்லை அவள். தலைகுனிந்த வண்ணமாகவே இருந்தாள். இருந்தாலும் அவன் மனம் என்னவோ சமாதானப்படவில்லை.
‘நான் - நான் - மணியின் சிநேகிதன் - ‘ என்று சொல்லி மேலே என்ன சொல்லுவது என்பது தெரியாமல் தத்தளித்தான்.
‘இதோ வந்துடுவா உள்ளே வந்து உட்காருங்கோ’ என்றாள் சாரதா.
அதைக் கேட்டதும் உண்மையிலேயே ராமு திகைத்துப் போனான். தலை கிர்ரென்று சுற்றிற்று. ஏதோ தப்புச் செய்துவிட்டவன்போலச் சுற்றுமுற்றும் பார்த்தான். ஒரு சிறு தனிவீட்டில், தனியாக இருக்கும் இளம்பெண் தன்னை உள்ளே வந்து உட்காரச் சொன்னாள்! - அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
‘இல்லை, அப்புறம் வரேன்’ என்று அரைகுறையாகக் கூறி தலையெடுத்துப் பார்க்காமல் வெகு வேகமாய்ப் போய்விட்டான்.
2
ஐந்து நிமிஷத்திற்கெல்லாம் இலையும் காய்கறியும் வாங்கிக்கொண்டு மணி உள்ளே நுழைந்தான்.
'உங்க சிநேகிதராமே? - வந்து தேடினார்’ என்று சாரதா குதூகுலமாகக் குதித்துக்கொண்டு அவனை எதிர்கொண்டு போய்ச் சொன்னாள். அவள் மேனியும் குரலும் ஒரு படையெடுப்புப்போல் அப்பொழுது அவனைத் தாக்கின. மணி புதுக்குடித்தனத்தின் தொல்லைகளிலும் தன்னை வந்து தாக்கிய அந்த இன்ப அலையை அநுபவித்து ஆறுதல் அடைந்தான்.
‘யார் அது?’ என்று அவளுடைய கன்னத்தைக் கிள்ளிக்கொண்டு கேட்டான்.
‘யார்னு கேக்கல்லே’ என்று சொல்லிக்கொண்டு வலி கொண்டவள் போலப் பாசாங்கு செய்து, ‘ஹா!’ என்றாள்.
திடீரென்று மணியின் முகம் சிவந்தது, கோபம் பொங்கி எழுந்தது.
‘எவ்வளவு தரம் சொல்லுகிறது உனக்கு? யார் என்று கேட்கிறது என்ன கேடு உனக்கு? ஒரு வார்த்தை கேட்டுவிட்டால் என்ன மோசம்? உன் கையைப் பிடிச்சு இழுத்துடுவாளோ?’ என்று வார்த்தைகளை வீசினான்.
ஒரு வாரத்திற்கு முன்புதான் இப்படி ஒரு சம்பவம் நடந்து மணி சாரதாவைத் தாறுமாறாகக் கோபித்துக் கொண்டான். ‘பட்டணத்தில் நண்பர்கள் அடிக்கடி தேடுவார்கள்; பதில் சொல்லாமல் உள்ளே நுழைந்து கொண்டு கதவைச் சாத்திக்கொள்ளக் கூடாது; பட்டணத்தின் நாகரிகத்திற்கு ஏற்றவாறு நடந்துகொள்ள வேண்டும்’ - இந்த மாதிரி உபதேசங்கள் செய்து முடித்தான். அதன் காரணமாக இருவரும் இரண்டு நாள் பேசாமல்கூட இருந்தார்கள்.
இந்தத் தடவை, தான் சொல்லப்போகிற பதில் மணிக்கு மிகவும் சந்தோஷத்தை உண்டாக்கப் போகிறது என்ற நிச்சயமான எண்ணத்தில், ‘வேண்டிய மட்டும் பேசட்டும்’ என்று சாரதா வாயை மூடிக் கொண்டிருந்தாள். பிறகு அவன் ஓய்ந்ததும் சாவதானமாகப் பதில் சொன்னாள்.
‘யாருன்னு கேட்டேன். சிநேகிதன்னு சொன்னார். பேர் சொல்லல்லே. ‘உள்ளே வந்து உக்காருங்கோ; வந்துடுவா’ன்னேன். அப்புறம் வரேன்னு போய்ட்டார்’.
சாரதா ஆவலுடன் மணியின் முகத்தைக் கவனித்தாள். அதில் எவ்விதமான சந்தோஷக் குறியும் தோன்றாததைக் கண்டு அவள் முகம் சுண்டிப் போய்விட்டது. சடக்கென்று திரும்பி உள்ளே போய்விட்டாள்.
மணியோ அந்த மாதிரிப் பதிலை அவளிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை. முதலில் அவனுக்கு முகத்தில் அடித்தாற்போல் இருந்தது அவள் பதில்; பிறகு தான் சொன்னதற்கு மேலாக, அதியாக அவள் நடந்து கொண்டுவிட்டது அவனுக்கு அதிருப்தியை உண்டாக்கிற்று. அதன் பிறகு ஏன் அப்படிச் செய்தாள்? நாம் சொன்னதற்காகக் கீழ்படிந்து நடந்த மாதிரியா அது? அல்லது... என்று கொஞ்சம் அவன் மனம் தடுமாற ஆரம்பித்தது. எல்லாம் சேர்ந்து அவன் வாயை அடக்கிவிட்டன. சாரதாவும் அவனைச் சாந்தப்படுத்தவோ பேச்சில் இழுக்கவோ முயலவில்லை. அவளுக்கும் கோபம்.
சாப்பாடு முடிந்து வெளியே போகும்வரை மணி ஒருவார்த்தை கூடப்பேசவில்லை. தெருவழியாகப் போய்க்கொண்டே என்ன என்னவோ யோசித்தான். அவன் மனம் சொல்லமுடியாத வேதனையை அடைந்தது. சாரதா அவ்வளவு தூரம் போய்விடுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. படித்த பெண் அம்மாதிரி செய்திருந்தால் அதில் ஒன்றும் விசேஷம் இராது. ஒரு கிராமாந்தரப் பெண், முகம் தெரியாதவனை உள்ளே வந்து உட்காரச் சொன்னது மிகவும் அநாகரிகம். சிநேகிதன் என்ன நினைத்திருப்பான்? ‘என்ன தைரியம் இந்தப் பெண்ணிற்கு?’ என்றோ, அல்லது ‘சுத்த அசடு!’ என்றோ நினைத்திருப்பான் அல்லது....
இம்மாதிரி யோசித்துக்கொண்டே போய்க் கொண்டிருந்தான்.
எங்கேயோ போய்விட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்த ராமு, தெருவில் மணி எதிரே வருவதைக் கண்டு மிகவும் சங்கடமடைந்தான். அப்பொழுது மணியைக் கண்டு பேசுவதா வேண்டாமா என்று கூட அவனுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. வீட்டுக்கு வந்திருந்ததாகச் சொல்வதா வேண்டாமா? அவன் மனைவி சொன்னதைச் சொல்வதா வேண்டாமா? இப்பேர்ப்பட்ட பிரச்சினைகள் எழுந்தன. ஒருவேளை மணியின் அநுமதியின் பேரில் அவ்வளவு சகஜமாகப் பேசியிருந்தால் சரியாய்ப் போய்விடும். இல்லாவிட்டால் தான் சொல்லுவதால் அந்தப் பெண்ணின் அசட்டுத்தனமோ, அல்லது அறியாமையோ மணிக்குக் கோபத்தை உண்டாக்கினால்? அவர்களிடையே பெருத்த மனத்தாங்கல் ஏற்பட்டால்? யார் கண்டார்கள்? மனித சுபாவம் எது வேண்டுமானாலும் நினைக்கும். அந்த மாதிரி மனஸ்தாபத்திற்குத் தான் காரணமாகக்கூடாது. அவள் தானாக மணியிடம் முழுவதும் சொல்லியிருக்கிறாள் என்பது என்ன நிச்சயம்? சொல்லியிராவிட்டால் அசட்டுத்தனம் ஆபத்தாக அல்லவோ முடியும்?
இவ்விதம் எண்ணியவனாய், ராமு, சடக்கென்று ஒரு சந்தில் திரும்பி மணியின் கண்ணில் படாமல் தப்பினான். ஆனால் அன்று காலையில் நடந்த சம்பவத்தைத் தன் மனத்தைவிட்டு அகற்ற அவனால் முடியவில்லை. அந்தப் பால்வடியும் புதுமுகத்தின் களங்கமற்ற பார்வை; தடங்கல், திகைப்பு, பயம் இவையற்ற அந்தத் தெளிவான சொற்கள்! ‘இதோ வந்துடுவா!’ என்றாள் அவள். அதில் என்ன நேர்மை! என்ன மரியாதை! இன்னும், தன்னை உள்ளே வரும்படி அழைத்ததில் என்ன நம்பிக்கை! - தன் புருஷனின் நண்பன் என்றதால் ஏற்பட்டது! ‘சே, சே, அந்த நாலு வார்த்தைகளில் அவள் எவ்வளவு அர்த்தத்தை வைத்து விட்டாள்! நமையும் நம்பினாள்... அவளா அசடு? அதனால்தான் எனக்கு அந்தக் கலவரம் ஏற்பட்டது. மணியை மாலையில் கண்டு அவனிடம் சொல்ல வேண்டும்’. இந்த மாதிரி எண்ணிக்கொண்டு ராமு நடந்தான். ஆனால் தான் முதலில் அந்தப் பேச்சை எடுப்பதற்கு முன்பு, நிலைமை எவ்வாறு இருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தான். மாலை ஏழு மணிக்குச் சென்றால் அவன் நிச்சயம் வீட்டிலிருப்பான் என்று எண்ணினான்.
3
மாலை ஆறு மணி இருக்கும். சாரதா வீட்டுக்காரியங்களைச் செய்து முடித்துவிட்டு அறையில் தலையை வாரிப் பின்னிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். பக்கத்தில் ஒரு தட்டில் தொடுக்கப்படாத கனகாம்பர புஷ்பங்கள், எதிரே முகம் பார்க்கும் கண்ணாடி, ரிப்பன், சீப்பு, வாசனைத் தைலம் முதலியவை இருந்தன.
உள்ளே நுழைந்த மணிக்கு இவற்றையெல்லாம் பார்த்ததும் ஏதோ ஒரு ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது.
‘இது என்ன பூவென்று இதை நித்தியம் வாங்கித் தலையில் வைத்துக் கொள்ளுகிறாய்?’ என்று அவன் அவலை நினைத்துக்கொண்டு உரலை இடித்தான்
ஆனால், கனகாம்பரத்தைத்தான் அவன் சொல்லுகிறான் என்று நினைத்துச் சாரதா, அந்தச் சந்தர்ப்பத்தில்தான் அவனது பட்டண நாகரித்தை இடித்துக் காட்ட வேண்டுமென்று தீர்மானித்தாள்.
‘பட்டணத்துலே எல்லோரும் இதைத்தானே வச்சுக்கறா? சங்கீத வித்வத்சபைலே கூட இதைத்தானே தலைதாங்காமெ வச்சுண்டு வந்தா?’ என்று சாரதா சொன்னாள்.
‘எல்லாம் பட்டணத்துலே செய்யறாப்பலே செய்யணும்னு யார் சொன்னது? அப்படி கட்டாயமா? பட்டணத்துப் பெண்கள் மாதிரிதான் இருக்கு, அவர்கள் வைத்துக் கொள்ளுகிற கனகாம்பரமும். வாசனையில்லாத பூவை எங்கேயாவது தலையில் வைத்துக்கொள்வதுண்டா? காக்கரட்டான் பூவைத் தலையில் வச்சுக்கற பெண்களுடைய வாழ்க்கை ரஸனையும் அப்படித்தான் இருக்கும்.’
’நீங்கதானே நான் பட்டணத்துப் பெண் மாதிரி இருக்கணும்னேள்? இல்லாட்டா ஒங்களுக்கு வெக்கமா இருக்கும்னேளா?’ என்று சாரதா மணியின் முகக்குறியை ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொண்டு கூறினாள்.
‘அதுக்காக மூணாம் மனுஷனைப் போய் ஆத்துக்குள்ளே வந்து உக்காருங்கறதோ?’ என்று மணி ஆத்திரத்தில் கொட்டிவிட்டான்.
சாரதாவின் முகம் சட்டென்று மாறுதல் அடைந்தது. என்ன கிராமாந்தரமானாலும் அவள் பெண்; அளவு கடந்த கோபத்துடன் மணியின் முகத்தை ஒரு நிமிஷம் ஏறிட்டுப் பார்த்தாள். அவன் எண்ணங்கள் அவன் முகத்தில் அவளுக்குப் பட்டவர்த்தனமாகத் தெரிந்தன. தனக்கு - தன் பெண்மைக்கு -அவன் செய்த அவமரியாதையை அறிந்தவள் போல அவளுடைய முகத்தில் ஓரு ஆழ்ந்த வெறுப்புக்குறி தோன்றிற்று. பாதி போட்ட பின்னலை அவிழ்ந்து முடிந்துகொண்டு கனகாம்பரப்பூவைத் தட்டுடன் அப்படியே எடுத்து அலமாரியில் வைத்துவிட்டுச் சமையலறைக்குள் போய்விட்டாள்.
இந்த மகத்தான கோபத்தின் முன்பு மணி அயர்ந்து போனான். அடிபட்ட நாய்போல மௌனமாக அறைக்குப் போய் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு ஒரு புத்தகத்தைப் படிப்பதாகப் பாசாங்கு செய்தான்.
ஏழு அடிக்கும் சமயத்தில் ராமு வந்தான். மணி கலகலப்புடன் பேச முயற்சி செய்தும் பயன்படவில்லை. வந்ததும் வராததுமாய் ராமு, ‘மணி, நான் காலையில் வந்திருந்தேன். நீ எங்கே போயிருந்தாய்?’ என்றான்.
‘நீயா வந்திருந்தாய்?’ என்று கேட்டுவிட்டு மணி மௌனத்தில் ஆழ்ந்தான்.
‘மணி, எனக்கு ஏற்பட்ட ஆச்சரியத்தில் என் பெயரைக் கூடச் சொல்ல மறந்து போனேன்.’.
ராமுவின் தொண்டை அடைபட்டது. மணி தலை குனிந்து கொண்டான்; அவனால் பேசவே முடியவில்லை. நண்பர்கள் இருவரும் சில நிமிஷ நேரம் மௌனமாக உட்கார்ந்திருந்தார்கள். ராமு நிலைமையை ஊகித்துவிட்டான். திடீரென்று எழுந்தான்.
‘மணி, நான் போய்விட்டு வருகிறேன். இதைச் சொல்லத்தான் வந்தேன்.’
‘இங்கேயே சாப்பிடேன், ராமு?’
‘இல்லை. இன்று வேண்டாம்!’
4
இரவு சாப்பாடு பேச்சில்லாமல் முடிந்தது. ஜன்னல் வழியே பாய்ந்த நிலவைக் கவனிப்பதுபோல மணி ஏங்கிப்போய் உட்கார்ந்து கொண்டிருந்தான். சாரதா பால் டம்ளரை எடுத்து வந்து மௌனமாக நீட்டினாள்.
அதுவரையில் அவளுடைய முகத்தைப் பார்க்கக்கூட அவனுக்குத் தைரியம் வரவில்லை. அப்பொழுதுதான் தலையெடுத்துப் பார்த்தான். அவள் முகத்தில் தோன்றிய துக்கக் குறியைக் கண்டு அவன் பதறிப் போனான்; எழுந்து அவள் தோளைப் பிடித்துக்கொண்டான்.
‘சாரதா!’ என்று சொல்லி மேலே பேச முடியாமல் நிறுத்தினான்.
‘வேண்டாம்!’ என்று சாரதா அவன் முகத்தைத் தடவினாள்.
‘நான் சொன்னது-’ என்று மணி தன் மனத்தை வெளியிட ஆரம்பித்தான்.
‘கனகாம்பரம் எனக்குப் பிடிக்காதே! நீங்கள் சொன்னதில் தப்பென்ன?’ என்று சாரதா, பெண்களுக்கென்றே ஏற்பட்ட சாதுரியத்துடன் பேச்சை மாற்றிவிட்டாள்.
1 ‘மணி!’ வாசலில் நின்று கொண்டே ராமு கூப்பிட்டான். நண்பன் வீட்டில் இருக்கிறானோ இல்லையோ என்று அவனுக்குச் சந்தேகம். ‘எங்கேயோ வெளிலே போ...
ஜெயமோகன்
கு.ப.ராஜகோபாலனின் படைப்புகளைப்பற்றி மிகுந்த பிரேமை கொண்ட ஒரு எழுத்தாள நண்பரும் நானும் பேசிக் கொண்டிருதோம். கு. ப. ராஜகோபாலன்தான் தமிழிலக்கியத்தின் உச்சம் என்ற எண்ணம் கொண்டவர் அந்நண்பர். 'ஒவ்வொரு சொல்லையும் செதுக்கிச் செதுக்கி அடுக்குபவர் ' என்று அவர் கு.ப.ராஜகோபாலன் பற்றி சொன்னார். 'செதுக்கிச் செதுக்கி ஒரு நகைபோல கதைகளை உருவாக்கியவர். ஒரு வார்த்தையைக்கூட வெளியே எடுக்கமுடியாது. ஒரு வார்த்தையைக்கூட சேர்த்துவிடவும் முடியாது. .தமிழ் இலக்கியத்தின் உச்ச சாதனைகள் சிறுகதைகளில் மட்டுமே உள்ளன. தமிழ்ச் சிறுகதைகளின் உச்சம் கு.ப.ராஜகோபாலனின் கதைகள் தான் '
நான் அவரை உடனே மறுக்கவில்லை ,ஆனால் 'எதன் பொருட்டு ? ' என்று கேட்டேன். அவருக்குப் புரியவில்லை . ' கு.ப.ராஜகோபாலன் தன் மொழியையும் வடிவத்தையும் மேலும் மேலும் நேர்த்தி கொள்ளச் செய்ததன் நோக்கம் என்ன ? ' .அவர் சற்று எரிச்சலுடன் 'இலக்கியத்துக்கு என்ன நோக்கம் இருக்கவேண்டும் ? ' என்றார். நான் ' ' இலக்கியத்துக்கு தெளிவான நோக்கம் இருக்கவேண்டும் என்று நான் சொல்ல முனையவில்லை .இலக்கிய வடிவத்துக்கு நோக்கம் இருக்க வேண்டும் என்றுதான் சொல்ல வந்தேன். வடிவம் ஒரு கொள்கலம். ஒரு பாதை. அதில் நிரப்பப் படுவதே அதன் வடிவத்தை நியாயப்படுத்தமுடியும். இலக்கற்ற பாதை என்று ஒரு பாதைஇருக்க முடியாது ' என்றேன்
' 'இலக்கிய வடிவத்தை ஏன் அப்படிப் பார்க்கவேண்டும் ? ஏன் ஓரு சங்கீத ஆலாபனையாகக் காணக்கூடாது ? ஒரு ராகம் வெறும் வடிவம்தான். அந்த வடிவத்துக்குள் நாம் அர்த்தங்களை , உணர்ச்சிகளை கொட்டி நிரப்பி அனுபவிக்கிறோமே ' என்றார் நண்பர் .அது ஆர்வம் அளிக்கும் ஒரு தரப்புதான். கண்டிப்பாக இலக்கியத்தில் அப்படியொரு வகைமாதிரி உண்டு. வடிவமே அனுபவமாக ஆகும் இலக்கியக் கூறு என்றால் அது அணி [அலங்காரம்] மட்டும்தான் . நீண்டகாலம் சம்ஸ்கிருத இலக்கிய மரபில் அதுவே இலட்சிய இலக்கியமாக இருந்தது. ஒரு குறுகிய காலம் -- சிற்றிலக்கியங்களின் காலகட்டத்தில் -- தமிழிலும் அப்படி இருந்தது. தமிழிலக்கியத்தில் அந்த அம்சம் கொண்ட எழுத்து லா.ச.ராாமாமிருதத்தின் எழுத்தும் , கோணங்கியின் கதைகளும்தான்.
ஆனால் கு .ப.ராஜகோபாலனின் கலை அத்தகையது அல்ல. அது அலங்காரங்களுக்கு நேர் எதிரானது. சொல்லும் விதத்தில் பல்வேறு சாத்தியங்களை அவர் சோதனை செய்யவில்லை. ஜாலங்களை முயற்சி செய்யவில்லை .கச்சிதமான ,முழுமையான ,கூறல்முறைக்காகவே முயன்றார். ஆகவே அவருக்கு கூறப்படும் விஷயம் முக்கியமானதே.எந்த அளவுக்கு அது சொல்லப்பட்டது என்பதை வைத்துத்தானே கச்சிதமா இல்லையா என்று சொல்லமுடியும் ?என் தரப்பை சிறு சிந்தனைக்கு பிறகு நண்பர் ஏற்றுக் கொண்டார். 'ஆம். கு.ப. ராஜகோபாலன் தன் இலக்கிய ஆக்கங்கள் மூலம் தொடர்ந்து ஒன்றை சொல்ல முயன்றார் என்றே படுகிறது. அதை மனதின் உள்ளோட்டங்கள் என்று சொல்லலாம் ' ' என்றார் . 'அவை வெளியே தெரியாதவை ,ஆதலால் அவற்றை வெளியே சொல்லும்போது அவை இயல்பு மாறி விடுகின்றன. அவற்றை உணர்த்தவே முடியும். கு.ப.ராஜகோபாலன் முயன்றது அதற்காகவே. தன் கதைகள் மூலம் சொல்லாமல் உணர்த்தப்படவேண்டிய விஷயத்தையே அவர் முன்வைத்திருக்கிறார். ' நண்பரின் இவ்விளக்கம் கு ப ராஜகோபாலனின் ஆக்கங்களைப்பற்றிய சிறந்த மதிப்பீடு என்பதில் ஐயமில்லை. ஆனால் இது அவர் மீது முன்வைக்கப்பட்டுவரும் வழக்கமான கருத்தே
தமிழின் மூத்த விமரிசகர்கள் பெரும்பாலும் கு.ப.ராஜகோபாலன் மீதுசற்று அதிகப்படியான கரிசனத்துடனேயே எழுதியுள்ளார்கள். கறாரான விமரிசகரான எஸ்.வி. சுப்ரமணிய அய்யர் புதுமைப்பித்தனுக்கு அளித்த [வடிவச்சிதைவு குறித்த] சிறு எதிர்மதிப்பீட்டைக் கூட அவருக்கு அளிக்கவில்லை. சி சு செல்லப்பா அவரை கொண்டாடினார். க.நா சுப்ரமணியம் புதுமைப்பித்தனுக்கு சமானமான அல்லது சற்று மேலான ஓர் இடத்தை அவருக்கு அளித்தார். புதுமைப்பித்தனிடம் சோதனைகள் அதிகம், கு.ப.ராஜகோபாலனிடம் வெற்றிகள் அதிகம் என்றார் க.நா.சுப்ரமணியம் . இதைச் சுட்டிக்காட்டி தன் 'தமிழ்ச் சிறுகதைவரலா 'ற்றில் எம் வேதசகாயகுமார் புதுமைப்பித்தனுடையது அடர்காடு. பெரியமரங்களும் சிறுசெடிகளும் உள்ளது. கட்டற்றது. கு.ப.ராஜகோபாலனின் எழுத்து சீர்ப்படுத்தப்பட்ட தோட்டமே என்றார் .வெங்கட் சாமிநாதன் அவரை தமிழின் சாதனையாளராகவே காண்கிறார். சுந்தர ராமசாமிக்கு சிறுகதைவடிவத்தின் சிறந்த மாதிர்ியை அடைந்தவர் அவர் என்று படுகிறது. இந்த சாதக மதிப்பீடுகளுக்கு இவர்களைத்தூண்டிய விஷயங்கள் இரண்டு. ஒன்று அவரது சோகமான வாழ்க்கையும் ,அவல முடிவும். இரண்டு அவர் நவீனத்தமிழிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர் என்பது.வேறு காரணங்களும் இருக்கலாம்.
முன்னோடிகளை பேரிலக்கியவாதிகளாக கருதும் மனமயக்கம் எல்லா இலக்கிய மரபிலும் உள்ளதுதான் . ஒரு இலக்கியச் சூழலில் புதிய போக்கு ஒன்றை உருவாக்குவது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. அதற்கு பின்னால் பொது ஓட்டத்தில் இருந்து விலகி இயங்கும் ஆன்ம பலமும் , வெளியுலகு மீதான ஆரோக்கியமான தொடர்பும், தன் சுய ஆளுமை மீதான ஈடுபாடும் உள்ளன. முன்னோடி என்பது இலக்கியத்தில் கண்டிப்பாக ஒரு எளிய பீடம் அல்ல. ஆனால் அபூர்வமாகவே முன்னோடிகளில் பேரிலக்கியப்படைப்பாளிகள் உருவாகியிருக்கிறார்கள். குறைவாகவே முன்னோடிகள் செவ்விலக்கியத்தன்மையுடன் இருந்திருக்கிறார்கள் [ கிளாஸிக் என்ற சொல்லின் இரு அர்த்தங்களுக்கு இவ்விரு சொற்களையும் பயன்படுத்துவது என் வழக்கம். ஒரு சூழலின் உச்ச இலக்கியப்படைப்புகளை ஆக்கியவர் பேரிலக்கியவாதி. ஒர் இலக்கிய மரபின் அடிப்படைகளை உருவாக்கிய படைப்புகளை ஆக்கியவர் செவ்விலக்கியவாதி] புதுமைப்பித்தன் தமிழ்ச் சிறுகதையின் முன்னோடியான செவ்விலக்கியவாதி. பேரிலக்கியம் என்பது எளிீய விஷயமல்ல. கு.ப. ராஜகோபாலன் தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். நம் நவீனத்துவச் சிறுகதைவடிவின் அடிப்படைகளை உருவாக்கியவர்.
கு.ப. ராஜகோபாலனின் படைப்புகளை இன்று படிக்கையில் மிக மிகக் குறைவான எண்ணிக்கை கொண்ட அவரது கதைகளே பொருட்படுத்தும்படியாக உள்ளன என்பதைக் காணலாம். 'காணாமலே காதல் ' என்ற தொகுதியில் உள்ள அவரது சரித்திரக் கதைகளை நல்லுபதேசத் தட்டைப்படைப்புகள் என்று நிராகரிக்கலாம். கனகாம்பரம் என்ற தொகுதியில்தான் சில நல்ல கதைகள் உள்ளன. ஆற்றாமை, விடியுமா, சிறிது வெளிச்சம் , பண்ணைச்செங்கான்.... இக்கதைகளை மீண்டும் மீண்டும் சொல்லித்தான் அவரது கதைகள் இத்த்னை காலம் சிலாகிப்பைப் பெற்றுள்ளன. ஒரு கோணத்தில் பார்த்தால் அவரது கதைகள் சாதாரணமாகக் கிடைக்காமல் இருந்தமைதான் அவரது இலக்கிய இடத்தை இத்தனைகாலம் தக்கவைத்துக் கொள்ளக் காரணமா என்ற எண்ணம் எனக்கு ஏற்படுகிறது.
'ஆற்றாமை ' தமிழில் ஒரு முக்கியமான கதை . அதன் கலைத்தன்மையால் என்பதைவிட அது தொடர்ந்து தமிழுக்குப் பல கதைகளை உருவாக்கும் முன்வடிவமாக அமைந்தது என்ற வகையில். பாலுணர்வுகள்மீது பலவகையான பாசாங்குகள் நிரம்பிய நம் கலாச்சார சூழலில் பாலுணர்வுகளும் வன்முறையும் கலாச்சாரத்தின் அடியோட்டமாக ஓடுவதன் சித்திரத்தை அளிக்கும் அழகிய பல கதைகளை இதை முன்மாதிரியாகக் கொண்டு தி.ஜானகிராமன், வண்ணநிலவன், வண்ணதாசன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். பாலுணர்வின் தன்னிச்சையான வல்லமைக்குக்கும் சமூக நெறிகளுக்கும் இடையேயான நுட்பமான மோதலை, அன்பும் பாலுணர்வும் இடம் மாறும் நுட்பமான சிக்கல்களை தமிழ்ச்சிறுகதை மிக வெற்றிகரமாகவே தொட்டுக் காட்டியுள்ளது. உள்ளழுத்தப்பட்ட காமம் குரோதத்தின்த்தின் விளிம்பை தொட்டுப் பின்வாங்குவதைச் சொல்லும் கதையான ஆற்றாமை ஒரு முக்கியமான முன்னோடியான முன்னகர்வேயாகும்.
ஆனால் அம்முன்னகர்வு வெறுமே வடிவம் சார்ந்தது மட்டுமே. இக்கதை கூறும் வாழ்க்கைப்பார்வை எவ்வகையிலும் நமக்கு புதிதல்ல. காம குரோத மோகங்கள் ஓடும் நதியாக மானுட மனதை காட்டிய பேரிலக்கியங்கள் உள்ள மண் இது. மீண்டும் மீண்டும் காமம் போன்ற அடிப்படை விஷயத்தைத்தானே இலக்கியம் சொல்லமுடியும் என்று கேட்கலாம். உண்மை, ஆனால் பேரிலக்கியங்கள் மனதின் ஒரு கோணத்தைக் காட்டுவதில்லை. இருளும் ஒளியும் சேர்ந்து உருவாகும் எல்லையற்ற நிழலாட்டத்தின் கணம்தோறும் பெருகும் சித்திரப்பெருவெளியை அவை காட்டுகின்றன. கு.ப.ராஜகோபாலன் அன்றாட வாழ்க்கையின் திரையை விலக்கி காமத்தை காட்டி நிறுத்திவிடுகிறார். 'ஆற்றாமை 'யில் அப்பெண்ணின் மனம் நமக்கு தெரியும் கணத்தில் ஏற்படும் திறப்பு மட்டுமே அதன் அனுபவம் .அதற்கு பிறகு முன்னகர ஏதும் பாதை இல்லை. அதுவரை நம்மை இட்டுவந்த கு.ப.ராஜகோபாலனின் தொழில்நுட்பத்திறனை எண்ணி மகிழ்வதன்றி.
கு.ப.ராஜகோபாலனின் சிறந்த கதைகளில் ஒன்றான 'சிறிதுவெளிச்ச 'த்தை காரூர் நீலகண்டபிள்ளை எழுதிய 'மரப்பாவைகள் ' என்ற சிறுகதையுடன் நான் ஒப்பிட்டுக் கொள்வதுண்டு. மரப்பொம்மைகள் விற்கவரும் ஒருவனுக்கும் வீட்டில் உள்ள இளம்பெண்ணுக்கும் இடையே
நடக்கும் சிறு மனெளரசல்தான் அக்கதை. இருவருமே தங்கள் காமத்தின் ஏக்கத்தை உணர்ந்து , ஒருவருக்கொருவர் உணரச்செய்து எல்லைதாண்டாது திரும்பிச்செல்வதைப்பற்றிய அக்கதை கிட்டத்தட்ட கு.ப.ராஜகோபாலனின் கதைதான். ஆனால்கதில் அந்த மரப்பொம்மைகள் சொல்லப்படுவதற்கும் குறிப்புணர்த்தப்படுவதற்கும் அப்பால் ஒரு கவித்துவமான குறியீட்டுத்தளத்துக்கு கதையைக் கொண்டு செல்ல்கிறது. கு.ப.ராஜகோபாலன் தன் கவிதையை புனைவின் மெளனம் கொண்டதாக மட்டுமே அமைத்துள்ளார். கவித்துவமெளனத்தினை எந்தக் கதையிலும் முயன்றது இல்லை. மெளனம் கனம் கொள்வதும் முடிவின்மையை வாசிப்பில் உணரச்செய்வதும் கவித்துவம் கொள்ளும்போதுதான். இந்த முக்கியமான அம்சத்தை முதலிலேயெ சொல்லிவிடவேண்டியுள்ளது.
காமத்தின் உள்ளோட்டம் உருவாக்கும் உணர்வெழுச்சிகளின் நுட்பமான வெளிப்பாடு என்பது தமிழ்ச் சமூகத்துக்கு மொத்தமாகப் பொருந்திவரக்கூடிய ஒன்றா என்ன ? தமிழ் சமூகத்தின் மேல்தட்டில் இருந்த சில சாதியினரின் உலகுக்குள் மட்டுமே உள்ள விஷயம் அல்லவா அது ? உறவுகளுக்குள் கவனமும், அதன் விளைவான நாசூக்கும் உருவாகிவிட்ட சாதிகளுக்கும் வற்கத்தினருக்கும் உரியது அது என பொதுவாகச் சொல்லலாம் . அதன் சமூகவியல் தளங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை . அதீத உடைமைமனநிலை , உடல் உழைப்பின்மை ஆகியவற்றால் வெகுவாக திரிபுபட்ட காமம் அது . அதாவது கூடத்துக்கும் புழக்கடைக்கும் இடையே நிறைய தூரம் இருந்த வீடுகளுக்கு உரியது. அதன் சிக்கல்கள் பல அப்படியே அடுத்த தள மக்களுக்கு பொருந்துவன அல்ல. உதாரணமாக பிற்பாடு எழுதவந்த பல படைப்பாளிகள் காமத்தைப்பற்றி எழுதியவிதமே வேறாக இருந்தது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கு அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், ராஜேந்திர சோழன் போன்றவர்களை உதாரணம் காட்டலாம். 'அழகம்மாள் ' 'கனிவு ' 'புற்றில் உறையும்பாம்புகள் ' ஆகிய கதைகளை கு.ப.ராஜகோபாலனின் காமம் சார்ந்த கதைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இக்கதைகளிலும் காமத்தின் கரவும் ரகசிய ஆட்டங்களும் உள்ளன, ஆனால் அவை நாசூக்கும் பூடகமும் கொண்டவையாக இல்லை .
ஒரு குறிப்பிட்ட சூழலுக்குரிய சித்தரிப்பாக ஒரு ஆக்கம் இருப்பது குறையல்ல. அது தன் முதற்கட்ட சித்திரத்தை வாசக மனதிலே உருவாக்கியபிறகு மேலும் வளர்ந்து மானுடத்தன்மையை அடையவேண்டும். தல்ஸ்தோயின் எழுத்துக்களில் ருஷ்ய பிரபுகுல வாழ்க்கையின் யதார்த்தமே உள்ளது . ஆனால் அதன் உச்சங்கள் மானுடம் தழுவிய அகச்சிக்கல்களை நோக்கி நகர்கின்றன. இதுதான் முக்கியமானது .கு ப ராஜகோபாலனின் பெரும்பாலான கதைகளில் பேசுதளம் மட்டுமல்ல பேசப்படும் ஆழமும் அப்படி ஒரு குறிப்பிட்ட சூழலுக்குள் நின்றுவிடக்கூடியதாகவே உள்ளது. முரண்பாடாகத் தோன்றும் ஒரு விஷயம் உண்டு. அவ்வுலகின் விரிவான சித்திரத்தை அவர் முன்வைக்கவில்லை, அதிலிருந்து 'உயரிய ஓர் யதார்த்ததை ' அவர் உருவாக்கமுயல்கிறார். அவ்வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியை , காமம் சார்ந்த சிக்கல்களை மட்டுமே கருத்தில்கொண்டு அதை இலட்சியவாதச்சாயலில் மறுஆக்கம் செய்து அளிக்கிறார். 'வாழ்க்கை இலக்கியமன்று. வாழ்க்கை முடிவடைகிற இடத்தில் இலக்கியம் ஆரம்பமாகிறது ' என்ற கு.ப.ராஜகோபாலனின் வரி முக்கியமாகஇங்கே கவனிக்கத்தக்கது.
ஆக கு.ப. ராஜகோபாலனின் பங்களிப்பு எந்த தளங்களில் நிகழ்கிறது ? நீண்ட விவசாயசமூக வரலாற்றில் இருந்து அடுத்தகட்ட சமூகக் கட்டமைப்பை நோக்கி வந்த உயர்தள மக்களின் காமம் சார்ந்த ஒருசில உளவியல் சிக்கல்களை அவர் எடுத்துப் பேசினார் என்பதே பொருத்தமானது. முந்தைய சமூகக் கட்டமைப்பின் பாலியல் சார்ந்த அடக்குமுறை , இடக்கரடக்கல்கள், நாசூக்குகள், சுத்த அசுத்த போதங்கள் ஆகியவை நவீன காலகட்டத்தில் அடையும் மோதல்களையும் திரிபுகளையும் நுட்பமாகப் பார்க்க முயன்றார். ஆனால் ஒரு படைப்பாளியாக அவரை மிகமிகக் குறுக்குவது அவர் பாலியல் சார்ந்தே அந்தப் பெரும் கலாச்சாரமாற்றத்தை பார்த்தார் என்பதே. உறவுகளின் பல்வேறுபட்ட இணைவுகளை நாம் அவரது படைப்புலகில் காணமுடியவில்லை . பாலுறவின் சிக்கல்கள் கண்டிப்பாக முக்கியமானவையே ஆகும். ஆனால் அதற்குச் சமானமான முக்கியத்துவம் கொண்ட வேறு மோதல்களும் சிக்கல்களும் உள்ளன. பொதுவாகச் சிலவற்றை அடையாளப்படுத்துகிறேன். பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே உருவாகும் மோதல் . நம் மதநம்பிக்கைகள் மற்றும் குலதெய்வங்களுக்கும் நமது நவீனத்துவப்பார்வைக்கும் இடையேயான மோதல். நமது இனக்குழுசார்ந்த வாழ்க்கைமுறை நவீனகாலத்தின் வாய்ப்புகள்மூலம் முற்றிலும் மாறான ஒரு வாழ்க்கைமுறையுடன் உறவுகொள்ளும்போது ஏற்படும் சிக்கல் . மாறுபட்ட மதிப்பீடுகள் ஒழுக்க சந்திக்கும்போது உருவாகும் தடுமாற்றங்கள். நம்மில் எவருக்கேனும் இவை சிறிதேனும் இல்லாமல் உள்ளதா என்ன ?
இந்தியா நவீனமயமானபோது பண்டைய இந்தியா நவீன இந்தியாவை சந்தித்துக் கொண்ட கலாச்சார , வரலாற்றுப் புள்ளிகளை இந்திய எழுத்தாளர்கள் பலவகையில் தீவிரமாக எழுதிய்ள்ளனர். கு ப ராஜகோபாலனுக்கு முன்னுதாரணமாக அமைந்த தாகூர் எழுதிய கோரா என்ற பெரும் நாவல் ஓர் உதாரணம். இந்து மரபைப்பற்றி ஒரு தீவிரமான ஆசாரப் பார்வையை கொண்ட கோரா அவன் பிறப்பால் ஒரு வெள்ளையன் என்ற உண்மையை அறியும்போது வாழ்க்கையின் இயல்பான கட்டுக்கடங்காத தன்மையை சந்தித்து ஆழமான ஒரு மோதலை அடைகிறான், தரிசனத்தையும். கு.ப.ராஜகோபாலன் தாகூரிலிருந்துகூட பெண்களை மட்டுமே கவனித்து பெற்றுக் கொண்டிருக்கிறார். தாராசங்கர் பானர்ஜியின் 'ஆரோக்கிய நிகேதன் ' நாவலில் ஆயுர்வேதம் X நவீனமருத்துவம் என்ற குறியீட்டினூடாக இந்த மாபெரும் கலாச்சார நகர்வின் முழுமையும் மானுடவரலாற்றின் சிக்கலான உள்நகர்வும் சித்தரிக்கபடுகின்றது. யு.ஆர்.அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா இன்னொரு முக்கியமான உதரணம். அங்கே பிராணேசாச்சாரியார் மரபின் பிரதிநிதியாக நின்று மாறிவரும்காலத்தை சந்தித்து 'சந்தையில் ' வைத்து தன் சாரத்தைக் கண்டடைகிறார். எஸ் எல் பைரப்பாவின் வம்சவிருட்சம் இன்னொரு முக்கிய உதாரணம். இந்த படைப்புகள் காட்டும் உக்கிரமும் தீவிரமும் யதார்த்தமும் கொண்ட மோதல்களுக்கும் கு.ப.ராஜகோபாலனுக்கும் எந்தவிதமான ஒப்புமையும் இல்லை.
புதுமைப்பித்தனின் 'கல்யாணி ', 'கோபாலபுரம் ' போன்ற கதைகள் கு.ப. ராஜகோபாலனின் கருக்களை கையாண்டவை எனலாம். இவற்றில் மன ஓட்டங்களை சொல்ல முயல்கிறார் புதுமைப்பித்தன். கதையில் அவரும் ஒரு குரலாக ஒலிக்கிறார். விமரிசனங்களை வெளிப்படையாக முன்வைக்கிறார். ஆனால் கு.ப. ராஜகோபாலனின் கதைகள் சொல்லவேண்டிய அனைத்தையும் குறிப்புணர்த்தவே முயல்கின்றன. அடையாளம் காண்பது என்பதுடன் அவரது பயணம் முடிந்துவிடுகிறது. ஒன்று சொல்லவேண்டும், அக உணர்வுகள் சார்ந்து எழுதப்பட்ட புதுமைப்பித்தன் கதைகள் எல்லாமே விமரிசனக்குரல் ஊடுருவுதலாலும் வெட்டவெளிச்சமான கூறுமுறையாலும் கலைக்குறைபாடு உள்ள படைப்புகள்தான். இங்கு வடிவரீதியாக ஜெயிப்பவர் கு.ப. ராஜகோபாலன்தான்.
கு.ப. ராஜகோபாலனின் வெற்றி அக உணர்வுகளை அதிராமல் சொல்ல அவர் உருவாக்கிய கச்சிதமான வடிவத்தில் இருக்கிறது. மிகக் குறைவான சொற்களில் புறவயமான தகவல்கள் வழியாக கதைக்களனை காட்சிவடிவமாக ஆக்குவது என்பதே அவரது வடிவத்தின் முக்கிய இயல்பு எனலாம். காட்சிவடிவ நிகழ்வுத்தொடர் இயல்பான நகர்வு கொண்டு கதையின் மையம் எதுவோ அங்கே சென்று மெல்ல முட்டி நின்றுவிடுகிறது, வாசக மனம் மேலும் நகரவிடப்படுகிறது. இது நவீனத்துவச்சிறுகதையின் சிறந்த வடிவ உருவகம் என்பதை காணலாம். கு.ப. ராஜகோபாலனின் பங்களிப்பு இவ்வளவே, அவர் நவீனத்துவச் சிறுகதையின் சிறந்தவடிவமாதிரியை உருவாக்கி வழிகாட்டிய முன்னோடி. இது நல்ல கதைகளில்தான் . பல கதைகளில் 'அவள் ' 'அவன் ' மார்பில் சாய்வதுடன் கதை முடிகிறது -- இப்போதும் குமுதம் விகடனில் சாய்ந்துகொண்டே இருக்கிறார்கள்.
இங்கே மீண்டும் புதுமைப்பித்தனுக்கு வரலாம். அவரது சிறந்த கதைகள் எதுவுமே நவீனத்துவத்தின் கச்சிதமான வடிவத்தை அடைந்தவையல்ல -- ' செல்லம்மாள் ' ஐ மட்டும் ஓரளவு சொல்லலாம். ஆசிரியன் கூற்றுகள், எல்லைமீறும் சித்தரிப்புகள், நேரடியான உணர்ச்சிச் சித்தரிப்புகள் ஆகியவை கொண்ட ஆக்கங்கள் அவை. அவற்றின் முக்கியக் கூறாக புதுமைப்பித்தனுக்கு மரபின் மீதிருந்த பிடிப்பும் ஐயங்களும்தான் அமைகின்றன. சிற்பியின் நரகம், கயிற்றரவு, கபாடபுரம், போன்ற கதைகளில் நவீனத்துவம் ஒரு வலிமையான இருப்பைக் கொண்டுள்ளது என்பது உண்மையே. ஆனால் புதுமைப்பித்தனின் முக்கிய இயல்புகள் நவீனத்துவத்துக்குள் நின்றுவிடுபவை அல்ல. அவரது மனத்தின் ஆழம் நமது சித்தர் மரபில் வேர் கொண்டது . அம்மரபின் அறியமுடியாமைக் கொள்கை, எதிர்மறையான கோணம், கட்டின்மை ஆகியவை கொண்டது [ பார்க்க புதுமையும் பித்தும் ; புதுமைப்பித்தனின் படைப்புலகம் ] அந்த அம்சத்துக்கும் நவீனத்துவத்துக்கும் இடையேயான முரணியக்கமே அவரது படைப்புலகம் என்று சொல்லலாம்.
கு.ப. ராஜகோபாலனின் மரபு ஈடுபாடு பெரிதும் பேசப்பட்டுள்ளது. சம்ஸ்கிருத காவிய மரபிலும் இந்துமெய்ஞானமரபிலும் அவருக்கு பயிற்சி இருந்தது என்று சொல்லப்படும் கூற்றுக்கள் எனக்கு நம்பிக்கை ஊட்டவில்லை. அவரது படைப்புலகில் அதன் தடையங்கள் ஏதுமில்லை. ராஜம் அய்யரில் வரும் வேதாந்த நோக்கு அன்று சென்னை பிராமண அறிவுஜீவிகளிடம் பிரபலமாக இருந்த ஒன்று. அறிவார்ந்த தர்க்கத்தை நீட்டி தூய பிரம்மக் கொள்கை நோக்கிச் செல்லக்கூடியது அது. அதையோ அல்லது அதற்கு மாற்றாக அன்றைய முக்கிய கவற்சியாக இருந்த தியாஸஃபிக்கல் சொசைட்டியின் தொல்படிமங்கள் சார்ந்த தத்துவ ஓட்டங்களையோ கு.ப. ராஜகோபாலனின் ஆக்கங்கள் காட்டவில்லை. இந்திய மரபில் அவருக்கு இருந்த ஆர்வத்தைக் காட்டுபவை அவரது எளிமையான சரித்திரக் கதைகள். அவை பங்கிம் சந்திரரின் ஆரம்பகால தேசபக்திக் கதைகள் போல உள்ளன இந்திய தேசிய மறுமலர்ச்சியின் விளைவாக உருவாக்கப்பட்ட மேலோட்டமான இலட்சியவாதப் தேசியப்பெருமிதமே கு.ப. ராஜகோபாலனின் ஆக்கங்களில் மரபின்மீதான ஈடுபாட்டின் தடையங்களாக இன்று சிக்குவது. இந்து மெய்ஞான மரபின் அடிப்படைக் கேள்விகள் எவையுமே அவரை இயக்கவில்லை-- புதுமைப்பித்தனின் 'சிற்பியின் நரகம் ', 'கயிற்றரவு ' போன்ற பல கதைகளில் உள்ளதுபோல.
இந்தியக் காவிய அழகியலின் எந்தக் கூறும் அவர் ஆக்கங்களை பாதிக்கவில்லை. மேலைநவீனத்துவ அழகியலையே அவர் முன்வைத்தார். அவரது எழுத்துக்களில் உள்ள மேலைப்பாதிப்புகளை எளிதாக வகுக்க முடியவில்லை. கண்டிப்பாக டி எச் லாரன்ஸ் அவரில் ஒரு வலுவான பாதிப்பை உருவாக்கியிருக்கவேண்டும். ஆனால் அவர் டி.எச். லாரன்ஸ் பற்றி ஏதும் எழுதியதாகவோ பேசியதாகவோ தெரியவில்லை. லாரன்ஸில் உள்ள மனச்சுதந்திரமும் உணர்ச்சிகரமும் கு. ப. ராஜகோபாலனில் இல்லை.மாப்பஸான் அன்றைய எல்லா எழுத்தாளர்களிடமும் ஒரு தீவிரமான பாதிப்பை செலுத்தியிருக்கிறார் . கு.ப.ராஜகோபாலனின் ஐரோப்பிய அழகியல் மனச்சட்டகம் கூட வங்கத்திலிருந்து வந்திருக்கலாம் என்றே எனக்குப் படுகிறது. அவர் அதிகமாக படித்த காலகட்டம் வங்கநவீனத்துவம் உருவாகிக்கொண்டிருந்த காலகட்டமாகும். இந்திய காவிய மரபு சார்ந்த சில கதைகளை கு .ப. ராஜகோபாலன் எழுதியுள்ளார், ஆனால் அந்தக் கருக்களை நவீன வடிவில் சொல்லிப்பார்க்கவே அவர் முயன்றுள்ளார். புதுமைப்பித்தன் கபாடபுரம், பிரம்ம ராட்சஸ் போன்ற கதைகளில் முயன்றதுபோல இந்திய அழகியல்க் கூறுகளைப் பயன்படுத்த அவர் முயலவில்லை .
இந்தியக் காவிய அழகியலின் முக்கியக் கூறுகள் என்ன ? வடிவரீதியாக பார்த்தால் நேரடியான யதார்த்தத்தின் தர்க்கத்தை மீறி உருவகத்தின் தர்க்கத்தை கொள்ளுதல் அவற்றின் முதல் இயல்பாக உள்ளது . அடுத்தபடியாக 'கதைசொல்லுதல் ' என்ற முறைமூலம் கதைகளை பின்னிப் பின்னி புறவுலக யதார்த்ததுக்குச் சமானமான ஒரு ஊடுபாவுநெசவை உருவாக்குதல் .முற்பிறவி என்ற உருவகம் இதற்கு அற்புதமாக கைகொடுத்துள்ளது. இந்திய இலக்கியம் உருவான உடனேயே இவ்விரு அம்சங்களும் வணிக ரீதியாகவும் இலக்கிய ரீதியாகவும் நம் எழுத்தில் இடம்பெற்றுவிட்டன. பங்கிம்சந்திரரின் கதைகள் உதாரணம். கபால குண்டலா உருவகம்சார்ந்த மாயத்தன்மை கொண்ட ஆக்கம் . [உபாசகனால் வளர்க்கப்படும் காளி, கபாலங்களை குண்டலங்களாக அணிந்தவள், ஆனால் களங்கமற்ற காதலி ] ஆனந்தமடம் கதையின் ஊடுபாவுகளைப் பயிற்சி செய்த நாவல் முயற்சி. இந்த அம்சங்களேதும் கு. ப.ராஜகோபாலனிடம் இல்லை. அவரது கலை எடுத்த எடுப்பிலேயே ஐரோப்பிய நவீன இலக்கியங்களின் 'மெளனம் மிக்க ' ஒற்றைப்படையான வடிவநேர்த்தியைக் குறிவைக்கிறது.
வங்க இலக்கியத்தில் தாகூரின் முக்கியப் பங்களிப்பு அதன் ஐரோப்பியத்தன்மையை நிறுவியதில் உள்ளது என்று விமரிசகர்கள் சொல்வதுண்டு. தாகூரின் தத்துவத்தேடல் கீழைமரபிலேயே வேரூன்றியது, அவரது அழகியல் ஐரோப்பாவை நோக்கித் திரும்பிய ஒன்று. அவரை பங்கிம்சந்திரரிடம் ஒப்பிட்டால் இது புரியும். அதற்கு அவரது சூழலும் முக்கியக் காரணமாகும் . அவர் இந்தியாவை ஐரோப்பியமயமாக்க விரும்பிய பிரம்ம சமாஜத்தின் மடியில் வளர்ந்தவர். தாகூர் குடும்பச்சூழலே ஐரோப்பியத்தன்மை மிக்கது. தாகூரின் கலையில் ஐரோப்பியக் கலையின் சீரான யதார்த்த ஒழுங்கு , தர்க்கங்களில் ஒற்றைப்படையான நேர்த்தி , சொல்வதைவிட குறிப்புணர்த்துவதில் ஆர்வம் ஆகியவை உண்டு .அவரது சிறுகதைகளும் நாவல்களும் மேலைஇலக்கியங்களின் வடிவநேர்த்தியை அடைந்தவை. ஆனால் முரண்பாடுகளில் ஊன்றும் நவீனத்துவ கோணம் தாகூரில் இல்லை. தாகூரினால் பாதிப்படைந்து, தாகூரை மொழிபெயர்த்துக் கொண்டு தமிழில் எழுதவந்தவர் கு.ப ராஜ கோபாலன். அவரை நான் தாகூரின் எளிய தமிழ்ப்பாதிப்பு என்றுதான் மதிப்பிடுவேன். தாகூரின் சிறுகதைகளுடன் கு.ப.ராஜகோபாலனின் சிறுகதைகளை ஒப்பிட்டால் எளிதில் இதை உணரலாம்.
தமிழில் உரைநடை இலக்கியத்தின் ஆரம்ப காலம் முதலே அதில் வங்க இலக்கியத்தின் தீவிரமான பாதிப்பு உண்டு. பாரதியின் படைப்புலகில் வங்க இலக்கியத்தின் பாதிப்பை வெளிப்படையாகவே காணலாம் -- பானர்ஜிக்கள் கதாபாத்திரங்களாகவே வருமளவுக்கு. தாகூர்க் கதைகளை தமிழக்கம் செய்து நூலாக வெளியிட்டவர் பாரதி . 'ஆறில் ஒரு பங்கு ' முதலிய கதைகளைப் படிக்கும்போது வங்கமும் தமிழகமும் அருகருகே உள்ள இரு இடங்கள் என்ற எண்ணம் ஏற்படுகிறது .வ.வெ.சு அய்யர் தாகூரை தமிழில் நிகழ்த்த முயன்றவர். கு.ப.ராஜகோபாலன், மெளனி, ந.பிச்சமூர்த்தி ,ந.சிதம்பர சுப்ரமணியன் முதலிய அனவைரிலும் தாகூரின் பாதிப்பினைக் காணலாம். மலையாளத்தில் இப்பாதிப்பு மிகவும் இருந்திருக்கிறது. தகழி சிவசங்கரப்பிள்ளையின் முதல்நாவலில் [பதித பங்கஜம்] எல்லா முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்களும் வங்கப்பெயர்கள். பஷீர் கூட இம்மாதிரி நிறைய எழுதி பிறகு நடையையும் பாணியையும் மாற்றி அக்கதைகளைமுற்றாக அழித்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் மலையாளத்திலும் சரி தழிலும்சரி, நவீன இலக்கியத்தை துவக்கியவர்களில் இப்பாதிப்பு ஏதும் இல்லை . ராஜம் அய்யர், மாதவையா , வேதநாயகம்பிள்ளை போன்றவர்கள் முற்றிலும் தமிழ்த்தன்மை கொண்டவர்களே. மலையாளத்தில் வேங்கயில் குஞ்ஞிராமநாயனார் , சி வி ராமன்பிள்ளை, ஓ.சந்துமேனன் ஆகியோர் முற்றிலும் மலையாளத்தன்மை கொண்டவர்கள் . அடுத்தகட்டத்தில்தான் இப்பாதிப்பு உள்ளது. வங்கப்பிரிவினைமூலம் உருவான அரசியல் அலை இப்பாதிப்புக்கு காரணமா என்ற எண்ணமேற்படுகிறது. இந்த பாதிப்பு தெரியும் ஒருகதைகூட இல்லாத அக்கால எழுத்தாளர் புதுமைப்பித்தன் ஒருவரே.
ஆரம்பகால வங்க இலக்கியத்தின் 'வங்க 'அம்சங்கள் என்னென்ன ? முக்கியமாக இலட்சியவாததை கதைக்கருவாகக் கொண்டிருப்பதுதான். இலட்சியவாதத்தின் சிக்கல்கள், வெற்றிகள், தோல்விகள் ஆகிய அனைத்துமே இக்கதைகளில் முதன்மைப்பட்டன. ஆகவே செவ்வியல் சார்ந்த முழுமைக்கும் சமநிலைக்கும் பதிலாக கற்பனாவாதம் சார்ந்த ஒரு வேகம் இக்கதைகளில் இருந்தது. அத்துடன் பெண்விடுதலை சேர்ந்துகொண்ட போது காதலை முக்கியப்படுத்தும் ஆண்பெண் உறவுகள் முக்கியமான பேசுபொருளாக ஆயின. எந்த விதமான உத்வேகமும் படைப்பிலக்கியத்தில் நேர் எதிர் உத்வேகத்தால் சமன்படுத்தபட்டிருக்கும். கற்பனாவாதத்தில் உக்கிரமான துக்கம் இடம்பெறுவதன் தர்க்கம் இதுவே. பிற்பாடு இந்த அம்சம் ' வீங்கி ' வணிகரசனைக்கு தீனியாக ஆனபோது கற்பனாவாத இலட்சியவாதம் சாகசத்துடன் இணைக்கப்பட்டது. அதீத துக்கங்கள் பயிரிடப்பட்டன. குறிப்பாகத் ' துயரமே உருவான அழகி + இலட்சியவாதக் கதாநாயகன் ' என்ற ஓரு சூத்திரம் உருவாகியது .கு.ப.ராஜகோபாலனின் புனர்ஜென்மம் முதலிய பலகதைகளில் உள்ளது இந்தச் சூத்திரமே. அது அகிலன், நா.பார்த்தசாரதிவரை தொடர்ந்தது. ஆரம்ப நாட்களில் க.நா.சுப்ரமணியம் இந்த வங்காளிபாபுக்களின் எழுத்தை அவற்றின் கதாபத்திரங்களே நக்கல் செய்வதுபோல ஒரு நாடகம் எழுதியிருக்கிறார். யதார்த்தத்துக்கான க.நா.சுப்ரமணியத்தின் தாகம் மேலோங்கியமைக்கு இந்த வங்க அலை ஒரு முக்கியமான காரணம்.
கு.ப.ராஜகோபாலனில் இலட்சியவாதம் தவிர இன்னொரு முக்கியமான 'வங்க ' அம்சம் அவரது பெண்கதாபாத்திரச்சித்தரிப்புகளில் உள்ளது. ஒரு புரிதலுக்காக நாம் அ.மாதவையாவின் உலகில் உள்ள பிராமணப் பெண்களுடன் கு.ப.ராஜகோபாலனின் கதாபாத்திரங்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம். மாதவையாவின் முதல் நாவல் மறுபதிப்பே வரவில்லை. அது காட்டும் பிராமண அகவாழ்க்கை சித்திரம் மிக தீவிரமானதுஎ ந்று எம் வேதசகாயகுமார் சொல்கிறார். குறிப்பாக 'கண்ணன் பெருந்தூது ' என்ற கதையை. [எம் வேதசகாயகுமார் இக்கதையை தமிழின் முதல் சிறுகதையாகக் கொள்ளலாம் என்று சொல்வது அழகியல் ரீதியாக சரிதான் என்றே நான் எண்ணுகிறேன். இக்கதையை புறக்கணித்து வ.வெ.சு அய்யரின் குளத்தங்கரை அரசமரம் என்ற தாகூர்பாணி கதையை முதன்மைப்படுத்துவதில் நம் பிராமணமனம் கொண்ட தெரிவை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்] அனந்தவல்லியை 'ஆந்துவலி ' என்று சொல்லும் கொச்சை மொழி , வெளியுலகமே தெரியாத இருண்ட மனம் , ஆன்மீகம் உட்பட எந்த தளத்திலுமே மனம் திறக்காத அதனாலேயே சாதிஆசாரங்களில் ஊறிய நோக்கு ஆகியவை அக்கதையில் பிராமணப்பெண்களின் இயல்புகளாகக் காட்டப்படுகின்றன. இப்பெண்களுக்கு நேர் மாறாக கு.ப.ராஜகோபாலனின் கதைகளில் உள்ள பெண்கள் அழகிகள், நவீன சிந்தனையும் சுதந்திர நோக்கும் , நளினபாவங்களும் கொண்டவர்கள். அனைத்தையும் விட மேலாக நல்ல தூய நாடகபாணி தமிழ் பேசுபவர்கள்.
வங்க இலக்கியத்தில்தான் நாம் இத்தகைய பெண்களைக் காண்கிறோம். அதற்குக் காரணம் வங்கம் இந்தியாவிலேயே முதலில் கல்வியிலும் வாழ்க்கைமுறையிலும் ஐரோப்பியத்தன்மை கொண்ட பகுதி. [வங்கம் அல்ல, கல்கத்தா என்று சொல்லவேண்டும். இன்றும் நாம் அறியும் வங்கம் கல்கத்தாதான். கிராமிய வங்கம் ஒரிசாபோல ஒரு வளராத பிற்பட்ட பகுதி ] ஆகவே மேலைநாகரீகமும் கல்வியும் கொண்ட புதுவகையான பெண்கள் அங்கே உருவானார்கள். அவர்களுக்கு சமூக ஒழுக்கம், தனிமனித சுதந்திடம், பால்சமத்துவம் ஆகியவைசார்ந்து நம் பெண்கள் சந்தித்த பிரச்சினைகள் முன்கூட்டியே ஏற்பட்டன. ஆகவே அவர்கள் இலக்கியத்தில் முக்கியமான இடம் பெற்றார்கள் . தாகூரின் 'கோரா 'விலும் ஆஷாபூர்ணாதேவியின் 'பிரதமபிரதிசுருதி ' 'சுபர்ணலதா ' போன்ற நாவல்களிலும் இப்பெண்களை நாம் காண்கிறோம். இந்த பிரம்மசமாஜப் பெண்களை கும்பகோணத்தில் உட்கார்ந்து தன் பகற்கனவின் துணையுடன் உருவாக்கி புனைகதைகளை நிரப்பியிருக்கிறார் கு.ப.ராஜகோபாலன்.
கு.ப.ராஜகோபாலனின் கதையுலகில் உள்ள முக்கியமான அம்சம் ஒன்றை பேராசிரியர் ராஜ்கெளதமன் சுட்டிக் காட்டியிருக்கிறார். [ 'புதுமைப்பித்தன் எனும் பிரம்ம ராட்சஸ் ' நூலில் இரண்டாம் அத்தியாயம்] அவரது பெண்கள் மதர்த்த உடலழ்கு கொண்டவர்களாகவே பெரும்பாலும் உள்ளனர். உடல்மீதான மோகம்கொண்ட சித்தரிப்புகள் இக்கதைகளில் உள்ள முக்கியமான அடிப்படையைச் சுட்டிக் காட்டுகின்றன. பிரச்சினையின் துவக்கப்புள்ளி அதுவே. உடலை உரிமைப்படுத்தல், நுகர்தல். இந்தப் பெண்ணுடல் 'யாருடையது ' என்ற வினா மேலும் முக்கியமான ஒன்று. கு.ப.ராஜகோபாலனின் பெண்களுக்கு அப்படி ஒரு ' இட அடையாளமே ' இல்லை. அவர்களின் முகங்களை நாம் தஞ்சையிலோ கும்பகோணத்திலோ வைத்துக் கற்பனைசெய்யமுடியவில்லை . அந்தரங்கமான ஒரு மோகத்தால் உருவாக்கப்பட்ட பிம்பங்கள் அவை என்ற எண்ணமே ஏற்படுகின்றன. இப்படி அந்தரங்கமோகத்தை பெண்கதாபாத்திரங்கள்மீது ஏற்றுவது அவரில் துவங்கி இன்றுவரை ஏதோ ஒருவகையில் தொடரவே செய்கிறது . அதை பிழை என நான் சொல்லவரவில்லை, எழுத்து என்பது நிதரிசனம் மட்டுமல்ல, கற்பனையும் ஏக்கமும் கனவும் எல்லாம்தான். கு.ப.ராஜகோபாலனின் கதைகளின் துவக்கப்புள்ளி நிதரிசனத்தின் நெருப்போ, இலட்சியவாததின் மின்னலோ , ஆன்மீகமான உதயமோ அல்ல , அந்தரங்கமான ஒரு இச்சையின் கைவிளக்குமட்டுமே என்று சொல்லவருகிறேன்.
அவரது 'யார்மேல் பிசகு ? ' கதையை எடுத்துக் கொள்வோம். கணவனின் நண்பனின் அறைக்கு கணவன் இல்லாத இரவில் தனியாகபடுக்க பயமாக இருக்கிறதென்று வந்து படுத்துக் கொள்கிறாள் 'கொள்கையுறுதிமிக்க ', ' கள்ளம் கபடமற்ற ' பெண். இது இன்றுகூட , சென்னை போன்ற நகரத்தில்கூட அத்தனை சாதாரணமாக நடக்கும் விஷயம் அல்ல என்பதை நாம் அறிவோம். தமிழ் வாழ்க்கைப் பழக்கம் ஒருபக்கம் இருக்க, பொதுவாகவே நம் பெண்கள் இம்மாதிரி விஷயங்களில் இலட்சியவாத நோக்கைவிட யதார்த்த நோக்கையே வெளிப்படுத்துகிறார்கள். அக்கதாநாயகி எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் அவள் பிறந்து வளர்ந்த சூழல் இங்கே உள்ள ஒன்றுதானே ? ஆண்களைப்பற்றிய எச்சரிக்கையே இல்லாமல் அவள் எப்படி உருவாகியிருக்கமுடியும் ? உண்மையில் இது ஒரு வங்கப் பிரச்சினை. தாகூரின் கதைகளில் அதிகமாகக் காணலாம். பிரம்மசமாஜம் மூலம் ஐரோப்பிய வாழ்க்கைக்குள் வந்த வங்கப்பெண்களின் உடல் அருகாமை ஆண்களுக்கு எழுப்பிய சிக்கல்கள். 'கோரா ' நாவலின் படகுப்பயணக்காட்சி நினைவுகூர்தற்குரியது .
'புனர் ஜென்மம் ' என்ற அவரது கதையை தமிழ்க் கலாச்சாரச் சூழலில் வைத்துப் பார்ப்பதே கஷ்டமாக உள்ளது, அது ஒரு அப்பட்டமான வங்கக் கதை, ஏன் சரியான பிரம்மசமாஜக் கதை. சுதந்திரப்போராட்டம் , சைத்ரிகனுடன் காதலுறவு, புதிய இலட்சியக் காதலனுடன் மறு உறவு . ஆமாம், கும்பகோணத்தில் !. விஸ்வேஸ்வரன் [ விஸ்வேஸ்வர் பானர்ஜி ? ] அன்னபூர்ணாவைக் கண்டு தெய்வீகக் காதல் கொள்ளும்போது நடக்கும் உரையாடல் இப்படி உள்ளது 'இனிமை அளிக்கும் சக்தியே என்னைவிட்டு அகன்றுவிட்டதே .என் இருதயமலர் அகாலத்தில் மலர்ந்து மூடிக் கொண்டுவிட்டது / என் ஆர்வத்தால் அதை நான் மறுமலர்ச்சி கொள்ளச்செய்கிறேன் என்னை நம்பு ' பிரம்மசமாஜத்தின் பள்ளியிலே நாடகமாகப் போடலாம். கலையைப்பற்றிய இலட்சியக் கனவுடன் சினிமாவில் நடிக்க எண்ணும் ஸ்ரீமதி ஸீதா [ சினிமா கதை] உன்னதக் காதலைப்பற்றி கவித்துவ விவாதம் செய்யும் மிஸ் நவமணி [ காதல்நிலை ] என கு.ப.ராஜகோபாலனின் இவ்வகை கதாபாத்திரங்கள் ஏராளமானவை.
எம் எஸ் கல்யாண்சுந்தரத்தின் முப்பது வருடங்கள் நாவலில் வரும் பெண்களுடன் இப்பெண்களை நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அவர்களையும் இலட்சியவாதத்தின் ஒளியிலேயே படைத்துள்ளார் ஆசிரியர். ஆனால் கற்பனாவாதம் இயல்பை மீறாமல் சகஜமான சித்தரிப்புமுறை காத்துவிடுகிறது. கு. ப. ராஜகோபாலனின் பெண்கதாபாத்திரங்களில் உள்ள செயற்கை நெகிழ்ச்சியும் கச்சிதமும் அவற்றில் இல்லை. உட்சிக்கல்களும் போராட்டங்களும் இல்லாத பெண்கள்தான் அவர்கள். ஆனாலும் நமக்கு அறிமுகமான முகங்கள் என எண்ணச் செய்துவிடுகிறார்கள். கு.ப.ராஜகோபாலனின் பெண் கதாபாத்திரங்களை மெளனி, லா.ச.ராமாமிருதம் , தி.ஜானகிராமன் ஆகிய பிற தஞ்சை படைப்பாளிகளின் கதைகளுடன் ஒப்பிடலாம். இதை பேரா.ராஜ்கெளதமனின் 'புதுமைப்பித்தன் என்ற பிரம்மராட்சஸ் ' நூலில் சுருக்கமாகச் சுட்டியுள்ளார். விரிவான ஆய்வு என் தி. ஜானகிராமனின் படைப்புலகம் என்ற கட்டுரையில் உள்ளது. 'பயங்கர வசீகரம் ' உள்ள [அதாவது அடக்கத்தூண்டக்கூடிய, முழுக்க அடைக்கிவிடமுடியாமையால் அச்சமளிக்கக் கூடிய என்கிறார் ராஜ் கெளதமன்] பெண்கள்தான் இவற்றின் பொது அம்சம். அது சைவ மரபின் சிம்மவாகினியான அம்பாள் என்ற உருவகத்தின் நவீன நீட்சியே என்பது என் ஊகம்.
ஜெயகாந்தனின் கதாபாத்திரங்கள் போலவே ஆசிரியனால் ' நோக்கத்துடன் ' உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள்தான் கு.ப.ராஜகோபாலனின் பெரும்பாலான கதாபாத்திரங்களும். இதை எம். எஸ். கல்யாணசுந்தரத்தின் இயல்பான எளிய பெண்கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டால் அறியலாம். கு.ப.ராஜகோபாலனின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் [உதாரணமாக காதல் நிலை, யார்மேல் பிசகு, புனர்ஜென்மம், ] ஒரு கருத்தை விவாதிக்க உதவும் உதாரணவடிவங்கள், ஆகவே பல சமயம் இலட்சியவாத கதாபாத்திரங்கள். ஜெயகாந்தன் தன் நல்ல கதைகளில் தன் கதாபாத்திரங்கள்மூலம் ஒரு விவாதத்தை உருவாக்கி பதிலின்மைக்குக் கொண்டு செல்லும்போது கு.ப.ராஜகோபாலன் பழைமைச் சார்ந்த ஒரு முடிவை உருவாக்கி அங்கேயே நின்றுவிடுகிறார். 'ஸ்டுடியோ கதை ' சிறுகதையை 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ' உடன் ஒப்பிட்டால் இதை அறியலாம். பல குபராஜகோபாலன் கதைக்கருக்களை ஜெயகாந்தன் மீண்டும் எழுதியுள்ளார். ஜெயகாந்தனை பிரச்சாரகர் என்ற நமது விமரிசக மரபு கு.ப.ராஜகோபாலனைப்பற்றி அப்படி சொன்னது இல்லை. ஒரே காரணம் கு.ப.ராஜகோபாலன் சுருக்கமாகச் சொல்கிறார் என்பதே.
'கண்ணன் பெருந்தூது ' தமிழில் முன்னுதாரணமாக ஆகவில்லை , அம்மாதிரி கதைகளையே எவரும் கண்டுகொள்ளவில்லை. கு.ப.ராஜகோபாலன் மெளனி ஆகியோர் உருவாக்கிய நாசூக்கான , கவித்துவம் கொண்ட, சுதந்திரமும் நிமிர்வும்கொண்ட, முக்கியமாக மர்மமும் ஆழமும் மிக்க பெண்களையே தமிழில் பிற பிராமண எழுத்தாளர்கள் தங்கள் ஆக்கங்களிலும் உருவாக்கினார்கள். தி.ஜானகிராமன் அப்பிம்பத்தைமேலும் உயிர்துடிப்பு கொண்டதாக ஆக்கினார். [அதை தன் புனைவின் உச்சத்தில் கிழித்துப் போடவும் செய்தார் ].அதை பாலகுமாரன் விற்பனைப்பொருளாக ஆக்கினார். ஆனால் சென்ற முக்கால் நூற்றாண்டாக நம் சூழலில் புழங்கும் இந்த நாணயம் யதார்த்தத்தில் இருந்து வேர்கொண்டதல்ல, ஏக்கத்திலும் பகற்கனவிலும் வேர்கொண்டது.
குன்றாத வேகத்துடன் தேட கு.ப.ராஜகோபாலனுக்கு அவிழ்க்கமுடியாத பெரும்புதிர் ஏதும் வாழ்க்கையில் இருக்கவில்லை. சில கதைகள் 'விடியுமா ' போல எளிய பிரமிப்பை அல்லது 'ஆற்றாமை ' போல கையறுநிலையை முன்வைப்பவை. வழக்கத்துக்கு மாறான , அபூர்வமான எந்த அவதானிப்பையும் கு.ப. ராஜகோபாலனின் கதைகளில் நாம் காணமுடியவில்லை-- அழகிரிசாமியின் 'அழகம்மாள் ' போலவோ சுந்தர ராமசாமியின் 'ரத்னாபாயின் ஆங்கிலம் ' போலவோ . வழக்கமான வாழ்க்கைசித்திரத்தினூடே நுட்பம் நிறைந்த அகஉலகமும் அவரது கைகளைமீறி வெளியே வழியவில்லை - புதுமைப்பித்தனின் 'செல்லம்மாள் ', அசோகமித்திரனின் 'மாலதி 'போல. வாசித்து முடித்ததும் நம் மனதில் மேலும் சிக்கலாகும் கு.ப.ராஜகோபாலன் கதை என ஏதுமில்லை. பெரும்பாலான கதைகள் எளிய விடைகளினால் ஆனவை. வடிவ ரீதியாக சற்று பின்னால் நின்றாலும் புதுமைப்பித்தனின் கதைகள் முடிவடையாத வினாக்களில் சென்று நிற்பவை. 'கல்யாணி ' கதையில் எழுப்படும் வினாவை அக்கதை முடிந்ததுமே தீவிரமாக உணர்கிறோம் - கல்யாணிக்கு சமூக அடையாளமோ அன்போகூட தேவையில்லை , காமம் மட்டுமே தேவை என்றால் நாம் சொல்லும் பதில் என்ன என்ற வினா . அத்தகைய வினாவை எழுப்பும் கு.ப.ராஜகோபாலன் கதைகள் ஏதுமில்லை. ஆகவேதான் அவர் கவனம் எல்லாம் வடிவத்தில் ஊன்றியது. ' சொல்லெண்ணி ' எழுதச் செய்தது. 'ஆற்றாமை ' போல வடிவநேர்த்தி கொண்ட ஒருநவீனத்துவக்கதையை எழுதியதுமே அவரது தேடல் பூர்த்தியாகிவிட்டது. அதன் பிறகு அவர் பங்களிக்க களம் ஏதுமில்லை.
கு.ப.ராஜகோபாலனின் வடிவம் சார்ந்த தேடல் நவீனத்துவம் சார்ந்ததாக இருப்பினும் அவரது வாழ்க்கை நோக்கில் நவீனத்துவத்தின் அடிப்படைகள் பலவீனமாகவே உள்ளன. அடிப்படையில் அவர் இலட்சியவாதி . இலட்சியவாதத்தின் சிக்கல்கள், சோர்வுகள் ஆகியவையே அதிலுள்ள எதிர்மறை மனநிலையை பெரும்பாலும் நிர்ணயிக்கின்றன. நவீனத்துவ வாழ்க்கைப்பார்வையின் அம்சம் என்றால் மனித உறவுகளை காமம் நோக்கி குறுக்கும் அணுகுமுறையை மட்டுமே சொல்ல முடியும். அதுவும்கூட அதிர்ச்சி தரும் முரண்பாட்டுவெளிப்பாடாக கு.ப.ராஜகோபாலனின் படைப்புகளில் பதிவாகவில்லை. மெல்லிய தொட்டுக்காட்டல், உணர்த்திவிலகுதல், அவ்வளவுதான். அதிர்ச்சியின் விளிம்பில் நம்மைக் கொண்டு மெளனமாக நிறுத்தி பின்னகர்ந்துவிடும் சரியான நவீனத்துவக் கதைகள் --- சிறந்த உதாரணம் அசோகமித்திரனின் பிரயாணம் போன்ற படைப்புகள் -- கு.ப.ராஜகோபாலனின் ஆக்கங்களுள் இல்லை . நவீனத்துவக் கதைகளின் மெளனம் மிக்க உடல், திருப்பம் கொண்ட முடிவு என்ற செவ்வியல் வடிவையே அவர் பரிசோதனை செய்து வென்றிருக்கிறார்.
கு.ப.ராஜகோபாலனின் அழகியலின் முக்கியமான சிக்கலே இங்குதான் எழுகிறது . நவீனத்துவம் முரண்பாட்டின் அடிப்படையிலான வடிவபோதம் கொண்டது என நாம் அறிவோம். வாழ்க்கையின் இயக்கவியலையும் மனிதமனதின் இயக்கவியலையும் முரண்பாடுகளின் வழியாகக் காண்பது அதன் அது. இலட்சியவாத நோக்குக்கு உரிய அழகியல் கற்பனாவாதமே. வாழ்க்கையையும் மனித மனத்தையும் இலட்சியம் என்ற ஒற்றைப்புள்ளியில் குவிக்கிறது அது. அந்த ஒற்றைப்படையான பார்வையே தீவிரமான உணர்ச்சி உத்வேகத்தை உருவாக்குகிறது. கற்பனாவாதம்தான் உணர்ச்சிவேகங்களுக்கு உரிய அழகியல். தாகூரில் செயல்பட்டது அந்தக் கற்பனாவாதம்தான். தாகூரின் கதைகள் அதிர்ச்சிகளை அளிப்பவையல்ல, ஒரு குறிப்பிட்ட பார்வையில் முழுமையாக ஒருமைகொள்பவை அவை. கு.ப.ராஜகோபாலன் இலட்சியவாத நோக்கையும் நவீனத்துவ வடிவையும் இணைக்க முயன்றார் . அது பெரும்பாலும் குறிதவறிய விளைவுகளையே ஏற்படுத்தியது என்பதை இன்று அவரது கதைகளைப்படிக்கும்போது உணரலாம்.
கு.ப.ராஜகோபாலனின் தோல்வியடைந்த கதைகள் எப்படி உள்ளன என்று பார்ப்போம். 'சந்திப்பு ', 'மனம்வெளுக்க.. ' முதலிய கதைகளில் கதையின் இறுதியில் திருப்பம் வரவில்லை, கதையின்வழியாக நீண்டு செல்லும் ஆசிரியனின் பார்வை முத்தாய்ப்பு கொண்டு கதைச்சரடுகளை முழுமையாக இணைத்து நிற்கிறது அவ்வளவுதான். கதைமுடிவில் திருப்பம் நிகழும்போது அது முன்னரே வாசகர்களின் ஊகத்துக்கு வராமலிருக்கவும் ,அதேசமயம் வாசக கவனம் பிசகாமலிருக்கவும் கதையை ஒற்றைப்படையான சீரான மெளனம்மிக்க ஓட்டமாக அமைப்பது நவீனத்துவக் கதைகளின் இலக்கணம் . இக்கதைகளில் கு.ப.ராஜகோபாலன் கதை முழுக்க நவீனத்துவ முறைப்படி நகர்ந்து உச்சத்தில் தன் தரப்பை முன்வைத்து நிற்கிறார். ஆகவே சுருக்கமாகச் சொல்லப்பட்ட அபிப்பிராயங்களாக இக்கதைகள் உள்ளன.சிக்கதைகளை அவர் கற்பனாவாத முறைப்படி எழுதியிருந்தால் கதை முழுக்க அழுத்தமும் வேகமும் கொண்ட உணர்வுகள் வெளிப்பட்டு உச்சத்தில் உணர்ச்சிகரமான அழுத்தம் பெற்றிருக்கும் , பிரேம்சந்த் , தாகூர் கதைகள்போல . கதையின் பாதிப்பும் அதிகரித்திருக்கும். நவீனத்துவம் கு.ப.ராஜகோபாலனின் அடிப்படை நோக்குக்கு ஒவ்வாத ஓர் வடிவத்தை அவருக்கு அளித்ததென்றாலும் எங்கே அவர் காமத்தின் இச்சையை கருவாகக் கொண்டாரோ அங்கே அவருக்கு அவ்வடிவம் சிறப்பாக கைகொடுக்கிறது .
இவ்விஷயத்தை ஏற்கனவே வேறு ஒரு கோணத்தில் டாக்டர் எம் வேதசகாயகுமார் அவதானித்துச் சொல்லியிருக்கிறார். புதுமைப்பித்தன் வாழ்க்கையின் புரிந்துகொள்ளமுடியாத முரண்பாடுகளையும் புதிர்களையும் தேடிச் செல்லும்போது கு. ப. ராஜகோபாலன் ஏற்கனவே அவர் அறிந்த விஷயங்களை துல்லியமாகச் சொல்லவே முயல்கிறார் என்கிறார் அவர் [புதுமைப்பித்தன்:காலத்தை வென்ற கலைஞன்] அப்படி சொல்லும்விஷயம் தெளிவாக இருப்பதனாலேயே கு.ப.ராஜகோபாலனின் கவனம் துல்லியப்படுத்துவது சார்ந்து செயல்பட்டது என்பது அவரது மதிப்பீடு. தன் இலட்சியத்துக்கு ஏற்ப வடிவத்தை உருவாக்குவது என்பதே கு.ப.ராஜகோபாலனின் இயல்பு என்றும் வடிவத்தின் சாத்தியக்கூறுகள் வழியாக தன்னைக் கண்டடைதலல்ல என்றும் சொல்கிறார். இதை நான் ஏற்கிறேன். கு.ப.ராஜகோபாலனின் சொற்களில் இதை நாம் காண்கிறோம் ' ஆங்கிலத்தில் ரியலிஸம் என்பது பிரத்யக்ஷ சித்திரம். வாழ்க்கையில் நாம் காணும் பிரத்யக்ஷமல்ல .அதன் உயரிய அம்சங்களை பொறுக்கி எடுத்துபிணைத்த ஒரு புது சிருஷ்டி. புது பிரத்யக்ஷம் ' [கு.ப.ராஜகோபாலனின் உரையாடல்] இங்கே இலக்கிய உண்மை என்பது வாழ்க்கையதார்த்தமல்ல, அதன் செறிவாக்கப்பட்ட சித்திரம் மட்டுமே என்பது சரிதா. ஆனால் 'உயரிய ' என்று கு.ப.ராஜகோபாலன் அடையாளம் செய்யும்போதுதான் அவரது இலட்சியவாதப் பார்வை வெளியே தெரிகிறது .
இங்கு ஒரு முக்கிய விஷயத்தைச் சொல்ல விழைகிறேன் .ஏற்கனவே மெளனி கதைகள் பற்றிய விவாதத்திலும் இதைச் சொல்லியுள்ளேன்.[மெளனியின் படைப்புக்களின் இலக்கிய இடம் ] உலக இலக்கியத்தின் மகத்தான அகச்சித்தரிப்புகள் கொண்ட மாபெரும் மரபு நமக்குள்ளது. அதன் பின்னணியில் கு.ப .ராஜகோபாலனின் இடம் என்ன ? குறுந்தொகைப்பாடல்களின் கச்சிதத்தைவிட , நம்மாழ்வார் பாடல்களின் இங்கிதத்தைவிட கு.ப.ராஜகோபாலனின் ஆக்கங்களில் மேலதிகமாக எதையேனும் காணமுடியுமா ? நமது நவீன இலக்கிய விமரிசகர்களில் பலர் தமிழின் பண்டைப்பேரிலக்கியங்கள் மீது பிடிப்போ படிப்போ அற்றவர்கள் என்பதனாலேயே அவர்கள் கு.ப.ராஜகோபாலன், மெளனி போன்றவர்கள் மீது மிதமிஞ்சிய பிரமிப்புகளை பதிவு செய்தார்கள் என்று படுகிறது. இக்கணம் வரை இவர்களின் பங்களிப்பை ஒட்டுமொத்த தமிழிலக்கியத்தின் பரப்பில் வைத்து ஓர் ஆய்வுமதிப்பீடு செய்யப்பட்டதில்லை.
அப்படிப்பார்த்தால் கு.ப.ராஜகோபாலன் அகஉணர்வுகளை நுண்மையாகக் குறிப்புணர்த்திச் சொல்லும் ஓர் இலக்கிய வடிவை உருவாக்க முயன்றார் என்ற மதிப்பீடு மிக அதிகப்படியானதென்று புரியும். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் சங்கப்பேரிலக்கியங்கள் அனைத்துமே அச்சேறிவிட்டிருந்தன. 'வத்தலக்குண்டு பித்தன் ' என்பவர் அவற்றை நவீனத்தமிழ் கவிதைகளாக மாற்றி மணிக்கொடி இதழிலேயே பிரசுரம் செய்திருக்கிறார். கு.ப.ராஜகோபாலன் அவற்றை பொருட்படுத்திப் படித்ததாக தெரியவில்லை . அகத்தை நுட்பமாகக் குறிப்புணர்த்திச் சொல்ல விழைந்த அவர் சங்கப்பாடல்கள் அதில் உச்சசாதனைகளை நிகழ்த்தியிருப்பதை அடையாளம் காணவில்லை. அதற்குக் காரணம் அவருக்கு செவ்விலக்கியங்கள், குறிப்பாக காவியஇயல் பரிச்சயமில்லை என்பதே என்று நான் ஊகிக்கிறேன்.அவரது காவிய ஈடுபாடு குறித்த கூற்றுக்கள் பெருமளவு மிகைப்படுத்தப்பட்டவை என நான் கணிப்பதன் காரணமும் இதுவே. வடமொழிக்காவிய மரபில் பயிற்சி உடைய ஒருவருக்கு சங்க இலக்கியம் அன்னியமாக இருக்காது. உளவியல்தடைகள் இருக்கலாம், அழகியல் தடைகள் இருக்க வாய்ப்பில்லை. சங்கப் பாடல்களை மலையாளத்துக்கு கொண்டுபோன என் வி கிருஷ்ணவாரியர் சம்ஸ்கிருத காவிய இயலை அடிப்படையாகக் கொண்டு அவற்றை அணுகி சிறப்பாகவே உள்வாங்கியிருக்கிறார்.
கு.ப.ராஜகோபாலனுக்கு தமிழ்பயிற்சி இல்லை என்பதை குறையாகச் சொல்லும்போது தோப்பில் முகம்மது மீரானுக்கு தமிழ் சரியாக தெரியாது என்பதையோ அல்லது வைக்கம்முகம்மது பஷீருக்கு மலையாளமே சரியாகத் தெரியாது என்பதையோ நான் குறையாகச் சொல்லமாட்டேன். அவர்கள் தங்கள் ஆளுமை மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த எல்லைகளைக் கொண்டவர்கள். ஆனால் கு.ப.ராஜகோபாலன் சிரத்தை எடுத்து வங்கமொழி கற்றவர் என்று தெரிகிறது. சம்ஸ்கிருதம் கற்கவும் ஆங்கிலம் கற்கவும் கடுமையாக உழைத்திருக்கிறார்,.பழந்தமிழிலக்கியத்தை பொருட்படுத்தவேயில்லை . நான் சுட்டிக் காட்ட விழைவது இதையே.சங்கமரபைக் கண்டிருப்பாரென்றால் கு.ப.ராஜகோபாலன் தன் சவால் மிகப்பெரியதென உணர்ந்திருப்பார் . பெரும் அகக்கவிதை மரபின் நுனியில் நின்றபடி நவீன காலத்து அழகியலுக்கு அதைப் பொருத்தும் பொறுப்பு அவருக்கு கிடைத்திருக்கும். குறுந்தொகைப்பாடல்கள் கவிதையில் அடைந்ததை தான் சிறுகதையில் அடையவேண்டுமென்ற கனவு அவரில் எழுந்திருக்கும். அப்படி நிகழவில்லை. இது ஒரு துரதிருஷ்டமே. அக இயக்கத்தை மொழியில் பற்றமுனைந்த நவீன இலக்கியவாதிகள் பலர் அதை ஓர் அந்தரங்க [ அந்தர ] புள்ளியிலிருந்து துவங்கி சில மேலைவடிவங்களை அதற்குப் போட்டுப்பார்த்து சற்று முன்நகர்ந்து, ஓர் வடிவ இறுக்கத்தில் சக்கரம் நிலைத்து, நின்றுவிடுகிறார்கள் . கு.ப.ராஜகோபாலனுக்கு என்ன நேர்ந்ததோ அதுவே எம்.யுவனுக்கும் நிகழ்கிறது என்று படுகிறது .
கு.ப ராஜ கோபாலன், மெளனி, ந,பிச்சமூர்த்தி, தி.ஜானகிராமன், க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா , லா.ச.ராமாமிருதம்,சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஜி.நாகராஜன் என சைவப்பிராமணர்களுக்கு, அய்யர்களுக்கு [ஸ்மார்த்தர்கள்] தமிழ் மரபின் மீதுள்ள ஆழமான உதாசீன மனநிலை நம் கலாச்சாரத்தின் துரதிருஷ்டவசமான ஒரு பக்கம். முன்னோடிகளான தமிழாய்வாளர்கள் உ வே சாமிநாத அய்யர், அனந்தராம அய்யர், கி.வா. ஜகன்னாதன் ஆகியோரை இங்கே கணக்கில் கொள்ளாமலில்லை. நவீனலிலக்கியம் படைத்த ஸ்மார்த்தர்கள் அல்லாத வைணவப் பிராமணர்கள் அனைவருக்குமே தமிழ்மரபின் மீது பிடிப்பு உள்ளது - நா.பார்த்த சாரதி ,இந்திரா பார்த்தசாரதி, சாண்டில்யன், சுஜாதா முதல் பி.ஏ.கிருஷ்ணன் வரை இது தொடர்கிறது. பிராமணர்கள் அல்லாத படைப்பாளிகளில் அவர்கள் எந்த அழகியலைச் சேர்ந்தவர்கள் என்றாலும் தமிழிலக்கிய மரபின் மீதான ஆழமான ஈடுபாடு பெரும்பாலும் காணப்படுகிறது. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் , கு அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், ப.சிங்காரம் ,பிரபஞ்சன், நாஞ்சில்நாடன் என்று உதாரணம் காட்டலாம்.
ஸ்மார்த்தர்களில் உள்ள இந்த கலாச்சாரக் கூறு ஒரு மிக முக்கியமான ஊனமேயாகும். இந்த ஊனத்தையே, எந்த மொழியில் இலக்கியம் படைக்கிறார்களோ அந்த மொழியை அறிந்திராத கண்மூடித்தனத்தை , பொருட்படுத்தாத உதாசீனத்தை ஒரு சிறப்பாகவே கொண்டாடக் கூடிய விமரிசன அளவுகோல்களும் இவர்களால் உருவாக்கப்பட்டன . மெளனியின் கந்தல் நடையை அவரது அழகியல் தனித்தன்மையாகவும், அவருக்கும் கு.ப.ராஜகோபாலனுக்கும் இருந்த மரபின் மீதான பிடிப்பின்மையை 'மூலங்கள் இல்லாத சுயம்புத்தன்மையாக 'வும் கொண்டாடும் போக்கு இங்கே உருவாக்கப்பட்டது. அதை அடையாளம் கண்டுகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இவர்கள் அனைவரிலும் உள்ள கலைக்குறைபாட்டின் முக்கியமான காரணம் மரபின் மீதான உதாசீனம்தான்.[மேலும் விரிவாக தி ஜானகிராமனின் படைப்புலகம் கட்டுரையில் காணலாம்]
மரபுடன் தொடர்பில்லாமல் அந்தரங்கமான ஒரு புள்ளியில் தொடங்கும் கு.ப.ராஜகோபாலன் மேலைநாட்டு எழுத்துக்களில் இருந்து , குறிப்பாக நவீனத்துவ முன்னோடிகளின் வடிவங்களில் இருந்து , ஒரு வடிவ போதத்தைப் பெற்றுக் கொண்டு அதில் தொடர்ந்து தொழில்நுட்பரீதியான நேர்த்தியை அடைய முயன்று ஒருசில வெற்றிகளை அடைந்தார். அவ்வெற்றிகளை அடிப்படையாகக் கொண்டு தமிழில் அகச்சித்தரிப்பின் ஒரு புது மரபு உருவாகியது. வண்ணதாசன் படைப்புகளிலேயே அதில் தமிழ் பேரிலக்கிய மரபின் அடிப்படைக் கூறுகள் இடம் பெற்றன. என் பார்வையில் வண்ணதாசன் போன்றோர் எழுதி அதன் பெறுமானத்தை நிறுவியதனாலேயே கு.ப. ராஜ கோபாலனின் சிறுகதை வடிவத்துக்கு முக்கியத்துவம் உள்ளது. அவ்வடிவத்தை உருவாக்கிய முன்னோடி என்ற முறையில் மட்டுமே கு ப ராஜ கோபாலனுக்கு தமிழிலக்கியத்தில் ஏதேனும் இடம் அளிக்க முடியும்.
********
ஜெயமோகன் கு.ப.ராஜகோபாலனின் படைப்புகளைப்பற்றி மிகுந்த பிரேமை கொண்ட ஒரு எழுத்தாள நண்பரும் நானும் பேசிக் கொண்டிருதோம். கு. ப. ராஜகோபாலன்தான் ...
கு.ப.ரா தான் வந்து இரண்டு நாட்களாகியும் ராஜம் தன்னிடம் பேசக்கூட மாடிக்கு வராதது அவனுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. தான் ஒரு விதமாகவும் பிசகு செய்ததாக அவனுக்குத் தெரியவில்லை. ஆகையால் அவள் கோபித்துக் கொண்டிருப்பாள் என்பதற்கும் இடமில்லை. அதுவுமின்றித் திருமண மான பிறகு, முதல் முதலாக அப்பொழுதுதான் அவளைப் பார்க்க வந்திருந்தான். அதற்கு முன் நேரில் கண்டு பேசினதே இல்லை. ஆகையால் எந்தக் காரணத்தைக் கொண்டும் அவள் அதற்குள் கோபித்துக் கொள்ள முடியாது.
![]()
ஒருவருக்கொருவர் இடைவிடாமல் கடிதங்கள் எழுதிக்கொண்டார்கள். அவற்றில் அவ்வளவு ஆர்வத்துடனும் உணர்வுடனும் எழுதிவிட்டு, நேரில் வந்தபோது ஏன் அவள் அப்படி இருந்தாள் என்பதுதான் அவனுக்குப் புரியவில்லை. தின்பண்டம், பலகாரம், காப்பி எல்லாம் மாமியார் கொண்டுவந்து வைத்தாள். தாம்பூலம் மடித்து வந்தது, அதை யார் மடித்தார்கள்?
மாடி அறையில் அவன் தனியாக எவ்வளவு நேரந்தான் அவளை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பது? பகலெல்லாம் எதிர்பார்த்தான்; இரகசியமாக வருவாளோ என்று இரவில்கூட வெகுநேரம் விழித்துக் கொண்டு படுக்கையில் கிடந்தான்.
கடிதத்தில் வெகு துணிச்சலாக எழுதிவிட்டாள். நேரில் கண்டவுடனே வெட்கம் மேலிட்டு விட்டது போல் இருக்கிறது! ஒருவேளை அப்படி அசடுபோல் கடிதத்தில் எழுதி விட்டோமே என்று பயந்தே தன்னிடம் வராமல் இருந்தாளோ என்று எண்ணினான்.
என்ன சமாதானம் செய்து கொண்டாலும் அவள், அவ்வளவு அருகில், தன்னிடம் வராமல் இருந்ததன் காரணம் அவனுக்கு விளங்கவே இல்லை.
இரண்டாவது நாள் இரவு எட்டு மணி. தொலைவில் கோவிலிருந்து திருவிழாக் கொட்டு முழக்குச் சத்தம் கேட்டது. தெருவில் பெண்கள் கும்பல் கும்பலாகக் கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். சாளரம் வழியாக உள்ளே விழுந்த வெண் நிலவு அவனது இருதயத்தை வலைபோட்டு வெளியே இழுப்பதுபோல இருந்தது. வெளியுலகத்து இன்பம் அவனை 'வா, வா' என்று அழைத்தது. ஆனால் அப்பொழுது அவனுக்கு அதெல்லாம் காதில் ஏறவில்லை. அந்த அழகு அவன் கண்களில் படவில்லை. அவன் உள்ளம் முழுவதும் ராஜத்தின் மேல் இருந்தது. அவள் எழுதின கடிதங்களின் வாக்கியங்களும் அவளுடைய முகமும் கண்களுமே அவன் முன் நின்றன.
அன்றிராவாவது கட்டாயம் ராஜம் தன்னிடம் வருவாள் என்று எண்ணினான். நடுப்பகல் வேடிக்கையாக மைத்துனனைப் பார்த்து, "உன் அக்கா இந்த ஊரில்தானே இருக்கிறாள்?" என்று கேட்டான். அதைக் கேட்டுக் கொண்டிருந்த மாமியார்கூடக் கொஞ்சம் பதறிப் போய் ஏதோ குசுகுசுவென்று யாருடனோ பேசினாள். யாருடனோ என்ன, 'அவளுடன்' தான். ஆகையால் தன்னுடைய மனநிலையை ஒருவாறு அவர்கள் அறிந்திருந்ததால் அன்றிரவு கட்டாயம் வருவாள் என்றே எதிர் பார்த்தான். முதல் நாளிரவு பாவம், வெகுநேரம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சிரமத்தால் தன்னை அறியாமல் தூங்கிப் போய்விட்டான். மறுநாள் காலையில் அவனுக்குக் கோபமும் துக்கமும் வந்து, காப்பி வேண்டாம் என்று சொல்லி விடலாமா என்றுகூட எண்ணினான்.
கீழே வீணை மீட்டும் சத்தம் கேட்டதும் சற்று நேரத்திற்கெல்லாம் சங்கராபரணத்தில் "தாரி சூசுசுன்னதி நீது ப்ரியா" என்ற ஜாவளியை யாரோ பாடிக்கொண்டே வாசித்தார்கள். வேறு யார்? அவள்தான்!
"உன் காதலி உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள், உன் வழி நோக்கிக் கொண்டிருக்கிறாள்" என்று பொருள்படத் தொடங்கிய அந்தப்பாட்டு, படுக்கையறையின் அலங்காரத்தைக் கவர்ச்சி கரமாகச் சித்தரித்தது. இசையும் பாட்டுமாகக் கலந்து அவனது உள்ளத்தை உருக்கின.
"ஆகா! நல்ல ரசிகையாக அல்லவா இருக்கிறாள் ராஜம்! ஏன் இருக்க மாட்டாள் அவளுடைய கடிதங்களே அவ்வளவு கதையாக இருந்தனவே! என்ன வாசிப்பு, என்ன சாரீரம். இதற்கு மேற்பட்ட இன்பம் கிடையா... ஆனால் இதோடு அவளுடைய வாய் வார்த்தை ஒன்றை, என் முன்பு, என்பக்கத்தில், நான் கேட்டால்... இன்பத்தின் மின்னொளியைப் பாய்ச்சும் அவளுடைய கைபட்டதும் எழும்பும் இனிமை என்னுள் பாய்ந்தால் என்ன பேறு பெறுவேன்! ராஜம் வேண்டுமென்றுதான் இப்படி ஏக்கத் தீயிட்டு என் உள்ளத்தை வாட்டுகிறாளோ? எதற்காக இந்தச் சோதனை? என் கடிதங்களில் காணவில்லையா அவள், என் உள்ளத்தின் வேட்கையை? பெண்ணின் கொடுமை உன்னிடங்கூடத்தான் இருக்கிறது. உன் இங்கிதமும், புத்தியும், தேர்ச்சியும், ஈரமும் எங்கே? உன் கடிதங்களிலேயே நின்றுவிட்டனவே அவை! இல்லை, இது சரியன்று. ராஜம் உடனே வீணையைக் கீழே வைத்துவிட்டு என்னிடம் வா! அந்த வீணை எதற்கு உனக்கு? என் இருதய வீணையை மீட்டி வாசி, சுருதி கலைந்து கிடக்கிறேன் நான். குழைவற்றிருக்கிறேன். உன் இழைக்கும் விரல்களால், என்னைச் சுருதி கூட்டிச் சரி செய்து, உன் விரல் விந்தையால், விண்ணொலி கொள்ளச் செய்" என்று உணர்ச்சி மேலிட்டவனாய்த் தனக்குள்ளேயே பிதற்றிக் கொண்டிருந்தான் அவன்.
"உன் காதலி வழி நோக்கிக் கொண்டு கத்திருக்கிறாள்" என்ற பல்லவி திரும்பத் திரும்ப ஓர் ஏக்கக் குரலாக வந்து அவன் காதில் தாக்கிற்று. அவனுக்கு அங்கே இருக்க முடியவில்லை. எழுந்து கீழே இறங்கிப் போனான்.
முற்றத்திலிருந்த மாடிப்படியின் உச்சியில் நின்று கொண்டு கூடத்தைப் பார்த்தான். அங்கே கையில் வீணையுடன் உட்கார்ந்திந்தாள்! ராஜம் அல்ல! அவளுடைய தமக்கையாகத்தான் இருக்க வேண்டும். ஆமாம் அவள் பிறந்த வீட்டில் இருப்பதாகத்தான் சொன்னார்கள். அவள் ஒரு வருஷத்திற்கு முன்பு கணவனை இழந்தவள், பாவம்! அவள் கதை ஒரு சோக நாடகம். எல்லோரும் கதை கதையாகச் சொன்னார்கள். நிரம்பக் கெட்டிக்காரி: அழகு என்றால் அப்படி; கணவன் ஒரு குடிகாரன்; ஈரல் வீங்கி இறந்தான். குடும்பம் என்று அவள் நடத்தி அறியாள்.
அவளா வீணை வாசித்தது! ஏன் அப்படி வாசித்தாள்? வீட்டில் மற்ற எல்லோரும் எங்கே? கோவிலுக்குத்தான் போயிருக்க வேண்டும் - ராஜம் கூட! ஒருவரும் வீட்டில் இல்லாதபொழுது, ஏன் இவள், அவன் கேட்கும்படி வீணையை எடுத்து வைத்துக் கொண்டு இப்படி உருக வேண்டும்?
திடீரென்று அவன் உலுக்கி விழுந்தான். ஒரு வேளை கடிதங்களெல்லாம் இவள் எழுதினவைதாமோ? ராஜத்தின் பெயரை வைத்து இவள்தான் அப்படி உள்ளத்தைக் கொள்ளை கொண்ட முறையில் எழுதினாளோ? ஆமாம், அப்படித்தான் இருக்க வேண்டும்! இல்லாவிட்டால் அவ்வளவு எழுதினவள் இப்போது அருகில்கூட வராமல் இருப்பாளா?
மடமடவென்று அவன் மாடிப்படி இறங்கினான். வீணையும் கையுமாக உட்கார்ந்திருந்த சரசுவதி சட்டென்று வீணையைக் கீழே வைத்துவிட்டு எழுந்திருந்தாள், உள்ளே போய் மறைந்து கொள்ள. அதற்குள் அவன் அவள் அருகில் வந்துவிட்டான். ஒன்றும் செய்யாமல் அப்படியே திகைத்து நின்றாள் சரசுவதி.
கூடத்து மின்சார விளக்கின் வெளிச்சத்தில் அவளது உருவம் நன்றாகத் தெரிந்தது. அவளது உடம்பும் உடையும் ஒரே வெள்ளையாக இருந்தன. தலைமயிரை அசிரத்தையாக முடிந்திருந்தாள். நெற்றியில் குங்குமம் இல்லாததால் அவளது முகம் காலை நேரத்துச் சந்திரன் போல வெளுத்த சோபையற்று இருந்தது. ஆனால் சிறிது நேரத்துக்கு முன்பு வாசித்த பாட்டால் ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கில் அதில் இருந்த சோகம் கொஞ்சம் மறைந்து சற்றே ஒளிர்ந்தது.
"நீதானா கடிதங்கள் எழுதினது?" என்று அவன் உடனே கேட்டான்.
"இல்லை, - அவள்தான் எழுதினாள் - அதாவது" என்று ஒன்றும் மேலே சொல்ல முடியாமல் திகைத்தாள் சரசுவதி.
"உண்மையைச் சொல்லிவிடு!"
"அதாவது அவள் சொன்னாள் - நான் எழுதினேன்" என்று அவள் இழுத்தாள்.
"நிஜமாக!"
"அவள் உள்ளம் சொல்லிற்று, நான் பார்த்து எழுதினேன்."
"எப்படித் தெரியும்?"
"எப்படியா -" என்று கேட்டுச் சற்றுத் தயங்கினாள் சரசுவதி.
பிறகு திடீரென்று அவள், "எப்படியா? நான் நினைத்தது போலத்தானே அவள் நினைத்திருக்க வேண்டும்? ஆகையால் அப்படியே எழுதிவிட்டேன்" எனச்சொல்லிவிட்டு, சொல்லக்கூடாததைச் சொல்லிவிட்டது போலவும் கதிகலங்கினவள் போலவும் நாலு புறமும் பார்த்தாள்.
"மாப்பிள்ளை! நீங்கள் இங்கே நிற்கக்கூடாது. மாடிக்குப் போய்விடுங்கள். அவர்கள் வந்து விடுவார்கள். குடி முழுகிப்போகும்" என்று கெஞ்சினாள் பிறகு.
அவன் தீர்மானமாக அங்கே நின்றான்."என்னை ஏன் கூப்பிட்டாய்?" என்று ஏக்கப் பார்வையுடன் கேட்டான்.
"கூப்பிட்டேனா! ஐயோ! இல்லையே! தெரியாமல் செய்திருந்தால் மன்னியுங்கள் - இல்லை - கூப்பிடவில்லை. பிசகு!" என்று சரசுவதி நிலை தவறினவள் போல் பதற்றத்துடன் பேசினாள்.
"ராஜத்தின் மூலமாக -" என்று அவன் ஆரம்பித்தான்.
"இல்லை - வேண்டாம் - எல்லாம் மறந்துவிடுங்கள் தவறு"
"எப்படி மறப்பது சரசுவதி? மறக்கும்படியாகவா எழுதியிருந்தாய் நீ?"
"மன்னியுங்கள்; பிசகு செய்துவிட்டேன் இப்படி ஆகுமென்று தெரியாது!"
"நான் கட்டை என்று எண்ணினாயா?"
"தப்பிதம், தப்பிதம்!" என்று வெறி பிடித்தவளைப் போல சொன்னாள்.
"தப்பிதம் இல்லை; சரசுவதி, உண்மையை எழுதினாய், அல்லவா?"
அவள் குற்றவாளியைப்போல் நடுநடுங்கினாள், உணர்ச்சி மேலிட்டு அழலானாள்.
"சரசுவதி! பயப்படாதே, அம்மா! நீ ஒன்றும் குற்றம் செய்யவில்லை. உண்மையாகவே கட்டைபோல இருந்த என்னைச் செப்பனிட்டு வாத்தியமாக்கி விட்டாய்!"
"இல்லை, இல்லை. அப்படிச் சொல்லாதேயுங்கள்! ராஜந்தான்! நீங்கள் அவள் சொத்து. அவள்தான் உங்களை உருக்க உரிமை பெற்றவள். அவள் எழுதியதாகவே எண்ணுங்கள்."
"இந்தப்பாட்டு -"
"அவள் பாடியதுதான். தேர்ச்சி இருந்தால், அறிந்திருந்தால், அவளே இப்படிப் பாடியிருப்பாள்."
"பாடியிருப்பாள்! - தேர்ச்சியிருந்தால்தானே? சரசுவதி, தைரியமாக நீதான் அவற்றை எழுதினது சொல்லேன், என்ன பிசகு?"
"ஐயோ, கூடாது."
"ஏன்?"
"நான் - நான் - எனக்குக் கை ஏது எழுத? எனக்கு வாய் ஏது - பாட? அவள்தான் என் கை, அவள் தான் என் வாய். அவள் மூலந்தான் எனக்கு வாழ்க்கை. அவள் மூலந்தான் என் உயிர்."
"இன்னும் வேறொன்றும் இல்லையா?" என்று அவன் இளகிக் கொண்டான்.
"உண்டு - அதையும் சொல்ல வேண்டுமா என் வாய் திறந்து?" என்று சரசுவதி ஒருவிதமான அமைதியுடனும் ஏக்கத்துடனும் தன்னையே மறந்து கேட்டுவிட்டாள்.
கோவிலுக்குப் போயிருந்தவர்கள் திரும்பி வந்து வாசற் கதவைத் தட்டினார்கள்.
அவன் மாடிக்குப் போனான். அவள் உள்ளே போனாள்.
இருவருக்கும் நடுவில் மறுபடியும் திரை வந்து கூடிற்று.
ஆனால் திரை என்ன அறியும்?
"ராஜம்! மாடிக்குப் போ!" என்றாள் சரசுவதி, சற்று நேரம் கழித்து.********
நன்றி: விட்டல் ராவ் தொகுத்த 'சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்' என்ற தொகுப்பிலிருந்து. வெளியீடு: கலைஞன் பதிப்பகம், 10, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
கு.ப.ரா தான் வந்து இரண்டு நாட்களாகியும் ராஜம் தன்னிடம் பேசக்கூட மாடிக்கு வராதது அவனுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. தான் ஒரு விதமாகவும...
கு.ப.ராஜகோபாலன்
நான் வேலூர்ச் சிறையிலிருந்து விடுதலையடைந்து வந்து ஒருவாரம் இருக்கும். ஒருநாள் காலையில் நாற்காலியில் சாய்ந்து கொண்டு என் உயிர் வெள்ளம் இனிமேல் எந்த நிலத்தில் பாயப்போகிறதோ என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன். நான் கைகொண்டு செய்யக் கூடிய காரியமாக எனக்கு ஒன்றும் தென்படவில்லை. தேசிய இயக்கத்திலோ ஒரு தேக்கம்; காங்கிரஸ் நிர்மாணத் திட்டம் அப்பொழுதும் சிதைவுற்றுக் கிடந்தது.
தபாற்காரன் ஒரு கற்றைத் தமிழ்ப் பத்திரிகைகளுடன் ஒரு கவரையும் கொண்டு வந்து கொடுத்தான். தன்னந்தனியாக எனக்கு இவ்வுலகில் யார் கடிதம் எழுதக் கூடுமென்று எண்ணிக் கொண்டே அதை உடைத்துப் படித்தேன். பின்வருமாறு ஆங்கிலத்தில் அது எழுதப்பட்டிருந்தது.
மதராஸ்
குலாம் காதர் கான், எம்.ஏ.,
ப்ரோ. டிப்டி கலெக்டர்.
என் அருமைத் தோழா,
நீ என்னை மறந்திருப்பாயென நான் நினைக்கவில்லை. இத்தனை ஆண்டுகளாகக் கடிதம் எழுதாதற்குக் காரணம், எனக்கு நீ இருக்குமிடம் தெரியாததுதான். இப்பொழுதும், இந்தக் கடிதத்திற்கு மேலேற்படும் நமது சந்திப்பிற்கும் காரணம் என் தங்கை நூருன்னிசா. நாம் படித்தபொழுது நம்முடன் விளையாடினவள், நினைவு இருக்கிறதா ? தற்செயலாகச் சென்ற பத்தாம் தேதிப் பத்திரிகையில் உன் பெயரைக் கண்டு அதை எனக்குக் காட்டினாள். அவள் உன் 'இன்சியல் 'களைக் கூட நினைவில் வைத்திருந்ததால்தான் நீ என்று நிச்சயிக்க முடிந்தது. உடனே அவள் சொன்னதன் பேரில், உன் முகவரியைக் கேட்டு வேலூருக்கு, 'டெமி அபிஷியலா 'கத் தந்தி அடித்துப் பதில் வரவழைத்தேன். அது இன்று கிடைத்தது.
நமது பன்னிரண்டாவது வயதில், திருச்சியில் படிக்கும் போது, ஒரு சிறுபிள்ளை சபதம் செய்து கொண்டோமே, நினைவு இருக்கிறதா; நாம் ஒருவரை ஒருவர் அறியாமல் மணம் செய்து கொள்வதில்லை என்று ? அதை நிறைவேற்றுவதற்காகத்தான் இந்தக் கடிதம். சென்னையில் எனக்குத் திருமணம். பத்திரிகை இதனுடன் இருக்கிறது. நீ வந்தே தீர வேண்டும்.
உன் அன்புள்ள
குலாம் காதர்.
இந்தக் கடிதம் மின்னலைப் போல் என் மனத்தின் மறதி இருளை அப்பொழுது பளிச்சென்று போக்கிற்று. இந்த பத்து ஆண்டுகளாகப் பரதேசிபோல் திரிந்த பொழுதும், உப்பு சத்தியாக்கிரகம் காரணமாக ஆறுமாதம் சிறையில் இருந்தபொழுதும் அடிக்கடி என் மனத்தில் தோன்றித் தோன்றி என்னை மயக்கிய பெண் உருவம் யாருடையது என்று தவித்தேன்; அப்பா, அது நூருன்னிசாவுடையதுதான்!
ஒரு சிறுமியின் முக்காடிட்ட குற்றமற்ற முகம்; அதில் மை தீட்டிய இமைகளிடையே குறுகுறு என்று அசைந்தாடும் இரண்டு குறைகூறும் விழிகள். ரோஜாக்களினிடையே மல்லிகை போல கீழ் இதழைச் சற்றே கடித்து வெளியே தொற்றின பல்வரிசை. இத்தகைய உருவம் மோகினிபோல் என் மனத்தில் குடிகொண்டு ஆட்டி வைத்ததே - அது அவளுடையது!
அவளுடைய மனநிலையும் என் மனநிலையை ஒத்திருக்கக் கூடுமா என்ன! இல்லாவிட்டால் இக்கடிதத்திற்கு ஏன் காரணமாகிறாள்/ கூட்டத்திற் கலந்து திரியும் என்னைக் குறித்தல்லவோ அவள் கூப்பிடுவது போலிருக்கிறது!
2
குலாம் காதருக்கும் எனக்கும் இருக்கும் இந்த நட்பு தொடங்கியதே மிகவும் வேடிக்கையான செய்தி. எனது பத்தாம் வயதில் என்னை என் தகப்பனார் திருச்சியில் ஒரு நடுநிலைப் பள்ளிக்கூடத்தில் மூன்றாம் வகுப்பில் சேர்த்தார். அங்கே குலாம் என் 'பக்கத்துப் பையன் '. பெண்சாயல் கொண்ட வளர்ந்த வாலிபன்.
ஒருநாள் கணக்குப் போடும்பொழுது குலாம் என் சிலேட்டைப் பார்த்துக் 'காப்பி ' அடித்து விட்டான். அது எப்படி வெளியாயிற்றென்றால், நான் பிசகாய்ப் போட்டிருந்த வழி அவனுடைய சிலேட்டிலும் காணப்பட்டது. உடனே, ஆசிரியர், நான் 'காப்பி ' அடித்தேனென்று என்னைப் பிரம்பால் அடித்தார்.
குலாம் அன்று மாலை வீட்டுக்குப் போகும்பொழுது என்னைக் கைதட்டிக் கூப்பிட்டான்.
'நீ ஏன் என்மீது குற்றஞ் சாட்டவில்லை ? ' என்று கேட்டான். நான் பதில் சொல்லவில்லை.
அவனுக்கு என்ன தோன்றிற்றோ தெரியாது.
'அடே, என்னோடு எங்க மோட்டாரில் எங்க வீட்டுக்கு வா. அப்புறம் உங்க வீட்டில் கொண்டு விடுகிறேன் ' என்றான்.
காரில் ஏறினோம். காரில் சவாரி செய்ய வேண்டுமென்ற என் விருப்பம் பூர்த்தியாயிற்று. பதினைந்து நிமிடத்தில் தென்னூரில் அரண்மனை போன்ற ஒரு வீட்டு வாசலுக்குக் கார் விர்ரென்று போய் நின்றது.
கயாசுதீன் சாகேப் ஒரு பெரிய வியாபாரி. ஆற்க்காடு நவாப் வம்சத்தைச் சேர்ந்தவராம். வீட்டின் முன் கூடத்தில் பெரிய வெல்வெட்டுத் திண்டுகள் போட்டுச் சாய்ந்து கொண்டிருந்தார். எதிரில் உக்காவும் பாத்திரம் ஒன்றும் இருந்தன. எங்கே பார்த்தாலும், நிலைக் கண்ணாடிகள், பெரிய பெரிய மொகலாயப் படங்கள், பளிங்கு மயில் ஒன்றில் செருகப்பட்டிருந்த ஊதுவத்திகளிலிருந்து வாசனை கம்மென்று வீசிற்று. காலுக்கு மெத்தின்றிருந்த ரத்தினக் கம்பளங்கள் தரையில் விரிக்கப்பட்டிருந்தன.
குலாம் குதித்துக் கொண்டு போய் அவரிடம் ஏதோ சொன்னான். திகைத்துப் போயிருந்த என்னைப் பார்த்து அவர், 'இங்கே வா! ' என்று கூப்பிட்டார். பிற்காலத்தில் நான் மெளலானா செளகத் அலியைப் பார்க்கும் போதெல்லாம் அவர் ஞாபகம் எனக்கு வரும். குலாம் என்னை அவரிடம் இழுத்துக் கொண்டு போனான். அவர் என்னைத் தடவிக் கொடுத்துக் கொண்டே தம் மனைவியைக் கூப்பிட்டார். உள்ளேயிருந்து அந்த அம்மாளும் அவளுடைய இரண்டு பெண்களும் வந்தார்கள். இப்பொழுது நினைவிலிருந்து சொல்லுகிறேன். அந்த அம்மாளுக்குச் சுமார் முப்பது வயசு இருக்கலாம். உயர்ந்து வளர்ந்த அழகான மாது. அவள் மெதுவாக ஒவ்வோர் அடி எடுத்து வைத்து வந்த பொழுதும் கால் சலங்கை கலீர் கலீரென்று சத்தம் செய்தது. மூத்த பெண் அலிமா குட்டையாயும் பருமனாயும் இருந்தாள். இளைய பெண் நூருன்னிசாவோ குலாமைப்போலவே இருந்தாள்.
அப்பொழுது அவளுக்கு எட்டு வயசு இருக்கலாம். இவ்வளவு விரிவாக எடுத்துச் சொல்லும் ஆற்றல் எனக்கு அப்பொழுது இருந்ததா என்ற சந்தேகம் வேண்டாம், கிடையாது. ஆனால் என் மனத்தில் 'போட்டோ ' பிடித்ததுபோல் பதிந்திருக்கிற அம்சங்களையே இப்போது எடுத்து எழுதுகிறேன்.
நூருன்னிசாவின் உருவம் என் மனத்தில் வரைந்த சித்திரம்போல் நிற்கிறது. நான் முதல்முதலில் பார்த்த அன்று அவள் சரிகை மயமாயிருந்த பச்சைப் பாவாடை உடுத்திருந்தாள். இலேசான மஞ்சள் பட்டு இரவிக்கையும், ரோஜாப் பட்டுத் தாவணியும் அணிந்திருந்தாள். காலில் காப்பு, பாதரசம், கையில் காப்புகள், விரல்களில் மோதிரங்கள், கர்நாடக முஸ்லீம்களைப் போல குருடு முதலியன இல்லை. முகம் என் மனத்தில் அப்படியே இருக்கிறது. நீண்ட புருவங்களும் தலைமுடியும் கன்னங்கறேலென்று இருந்தன. பின்னல் இல்லாமல் தலைமுடியை முடிந்திருந்தாள். அது அவளுக்கு மிகவும் அழகாக இருந்தது. அவளது உடலின் சிவப்புக்கு ஈடே சொல்ல முடியாது. அவளுடைய கண்கள் அவற்றின் தன்மையை எடுத்துச் சொல்ல முடியவில்லை. வேண்டுமானால் தாமரை இதழ்கள் போன்றவை, மீனுருவம் கொண்டவை என்று கவியைப்போல் சொல்லிக் கொண்டே போகலாம்.
கயாசுதீன் தம் மனைவியிடம் ஏதோ சொன்னார். அவள் என்னை ஒருதரம் பார்த்துவிட்டு அலிமாவிடம் ஏதோ சொன்னாள். அலிமா உள்ளே போய் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளைகள் நிறைந்த ஒரு பையைக் கொண்டு வந்தாள். அதை என்னிடம் கொடுத்தபோது குலாமின் தாயினது முகத்தில் தோன்றிய அன்புப் பார்வையை நான் மறக்கவே முடியாது. என் கன்னத்தை ஒருதரம் தாய்போல தடவிக் கொடுத்தாள்.
குலாம் என்னைக் கூட்டிக் கொண்டு காருக்குச் சென்றான். அதில் ஏறி உட்கார்ந்தோம். புறப்படும்பொழுது வாசற்பக்கம் கண்ணெடுத்துப் பார்த்தேன். நூருன்னிசா முக்காட்டைப் பல்லால் கடித்துப் பிடித்துக் கொண்டு என் முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். என் கண்களைச் சந்தித்த நிமிடமே உள்ளே ஓடிவிட்டாள்.
அன்று முதல் நானும் குலாம் காதரும் இணைபிரியாமல் திரிந்தோம்; விளையாடினோம்; அரட்டைகள் அடித்தோம். ஆகாயக் கோட்டைகள் கட்டி மகிழ்ந்தோம். எந்நேரமும் நான் அவனுடைய வீட்டில்தன் இருப்பேன். நூருன்னிசாவும் எங்களுடன்தான் இருப்பாள். நாங்கள் செய்வதையும் பேசுவதையும் உற்றுக் கவனித்துக் கொண்டிருப்பாள். தானும்கூட விளையாடுவாள். தெரியாமல் பின்னால் ஒளிந்து வந்து, என் கண்களைப் பொத்துவதில் அவளுக்கு ஓர் ஆனந்தம். ஏன், எனக்குந்தான் ஒருவித மகிழ்ச்சி அப்பொழுது உண்டாகும். அவளுடைய கைகள், மென்மையாக ரோஜா மலர்போல இருக்கும். கைகளை எடுத்து விட்டுக் கலகலவென்று சிரிப்பாள். அவளுடைய கன்னங்கள் குழிவுபடும். அச்சமயம் என் மனம் என்னவோ நான் எடுத்துச் சொல்ல முடியாத ஒரு மகிழ்ச்சியை அடையும்.
நாலாம் பாரம் வரையில் நானும் குலாமும் இபடி இருந்தோம். திடாரென்று என் தகப்பனாரைத் திருச்சியிலிருந்து மாற்றி விட்டார்கள் பிறகு எனக்கும் குலாமுக்கும் சந்திப்பே கிடையாது.
பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவனிடமிருந்து இந்தக் கடிதம் வந்திருக்கிறதென்றால் என் மகிழ்ச்சியை என்னென்பது ?
மறுநாள் இரவு வண்டியில் சென்னைக்குப் புறப்படேன்.
3
உறவினர்கள் நிறைந்த அந்தப் பங்களாவில் குலாம் என்னைத் தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு பழைய நாட்களைப் பற்றிப் பேசிக்கொண்டே இருந்தான். முகம்மது காசிம் என்ற பாடகரின் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் ரோஜா மலர்கள்! அத்தரும் பன்னீரும் நீர் பட்டபாடாய் வழங்கப்பட்டன. குலாம் என்னைப் பங்களாவின் மேல் மாடியிலிருந்த ஓர் அறைக்கு அழைத்துச் சென்றான். வெகுநேரம் அங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
குலாமின் தாய் மகனைத் தேடிக்கொண்டு அங்கே வந்தாள். நான் இருப்பதைப் பார்த்துச் சட்டென்று பின்வாங்கி முகத்தை மூடிக் கொண்டாள்.
'அம்மா யாரென்று எண்ணுகிறாய் ? நம்... ' என்று குலாம் பேச்சைத் தொடங்கினான்.
'ஆம். நினைவிருக்கிறது. நலந்தானே, தம்பி ? ' என்று கேட்டுக் கொண்டே மெதுவாக அந்த அம்மாள் முன் வந்தாள்.
'நலந்தான், அம்மா! '
'எங்கே இருக்கிறாய் ? '
'திருச்சியில் இருக்கிறேன். '
'திருமணம் ஆயிற்றோ ? '
'இல்லை! '
பேசும்பொழுதே அவ்வுருவிற்குப் பின்னால், இன்னும் ஓர் இளம் உருவம் நிழல் போல நிற்பது போன்ற பிரமை தட்டியது எனக்கு. ஒரு நிமிடம், நூருன்னிசாவே என் முன் தோன்றுவாளோ என்ற ஆசை! மறுநிமிடம், 'சே! அது எப்படி முடியும் ? அவள் பர்தாப் பெண் அல்லவா ? குலாமும் கடிதத்தில் எழுதினதைத் தவிர நேரில் அவளைப் பற்றிய பேச்சே எடுக்கவில்லையே ? ' என்ற நினைப்பு ஏற்பட்டது. அவளைப் பற்றிக் கேட்கக்கூட எனக்குத் தயக்கமாக இருந்தது. அவளை நிச்சயமாகப் பார்க்க முடியாதென்ற எண்ணம் ஏற்பட்ட பிறகுதான் குலாமுடன் வழக்கம் போல் பேசலானேன்.
இரவு பத்து மணிக்குக் குலாம் படுத்துக்கொள்ளச் சென்றான். எனக்கு ஒரு தனியறை ஒழித்துத் தந்திருந்தார்கள்.
என் தனியறையின் தனிமையில் நான் படுக்கையில் படுத்துப் புரண்டேன். மின்சார விளக்கின் வெளிச்சம் எனக்குத் தாங்க முடியாததாக இருந்ததால், அதை அணைத்துவிட்டுச் சாளரத்தைத் திறந்து வைத்தேன். அதன் வழியாக முழுநிலவு என் படுக்கையின் மேலே தன் ஒளியைப் பரப்பியது. படுக்கையில் உட்கார்ந்து கொண்டு எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணினேன்.
அதே வீட்டின் ஒரு பாகத்தில் 'அவளும் ' அப்பொழுது உலவிக் கொண்டிருந்தாளல்லவா!
என் இருதயத்தின் நிலைமையை அவள் அறிவாளோ ? முடியாது. பூவின் அவா மணமாக வெளியேறி உணர்வைத் தாக்குகிறது. நினைவில் புறப்படும் அலை எப்படி அவள் இருதயக் கரையில் போய் மோத முடியும் ? முடியாதுதான்! அக்கடிதத்தில் தன் சகோதரனைக் கருவியாகக் கொண்டு என்னை ஏன் இங்கு வரவழைத்தாள் பின்னே ? என்னிடத்தில் அவளுக்கு ஓர்... அதெப்படி நான் சொல்லுவது ?
இப்படி என் பேதை மனம் கேள்விகளும் மறுகேள்விகளும் போட்டுக் கொண்டு கடல்போல அலையலையாய்ப் பொங்கிக் கொண்டிருந்தது.
நடுநிசி ஆயிற்று. எனக்குத் தூக்கம் வரவே இல்லை. பட்டணத்தின் ஓசையும் அடங்கிவிட்டது. தூரத்திலிருந்து கடலின் ஓலந்தான் காற்றில் மிதந்து வந்தது. திடாரென்று மனத்தில் ஓர் ஆவல் மூண்டது. 'ஒருவேளை இப்பொழுது என்னை நூருன்னிசா பார்க்க வரக் கூடுமா ? அல்லது என்னைத்தான் எங்கேயாவது எதிர்ப்பார்க்கிறாளோ ? ' என்று நினைத்தேன்.
மெதுவான காலடிச் சத்தம் கேட்டது. ஆம், அது நூருன்னிசாதான்! வந்து எனக்கு அருகே இருந்த சாளரத்தின் அப்புறத்தில் நின்றாள். அதே உருவந்தான்! வயதிற்கு ஏற்ற வாட்டசாட்டம் மட்டுமே வேறாக இருந்தது. நிலவில் முகம் தெளிவாகத் தெரிந்தது. இன்னது சொல்கிறேன் என்று அறியாமல் எழுந்து நின்று, 'எண்ணினபடி ஆயிற்றே! ' என்றேன்.
ஒருவிரலால் தன் உதடுகளை அவள் பொத்திக் காட்டினாள். தன் மார்பில் வைத்திருந்த ஒரு கவரை எடுத்து என் கையில் கொடுத்தாள்.
'இதை ஊருக்குப் போய்ப் படி, நாளைக்குக் காலையிலேயே புறப்பட்டு விடு! பார்த்தாய்விட்டது. ஒரு நிமிடம் தாமதிக்கக் கூடாது ' என்று சொல்லித் திரும்பினாள்.
சிறிதுதூரம் சென்று திரும்பிப் பார்த்தாள்! நிலவின் வெளிச்சத்தில் அவளுடைய அழகான முகத்தில், கலவரத்தினால் முத்து முத்தாய் வேர்வை துளித்திருந்ததைக் கவனித்தேன். நான் தாவியோடி அவள் கையைப் பற்றினேன்.
ஒரு நிமிடம் அப்படியே நின்றோம்!
மறுநொடியில் மெதுவாகக் கையை விடுவித்துக் கொண்டு போய்விட்டாள்.
4
மறுநாள் காலை நான் பயணத்திற்குத் தயாராயிருந்ததைக் கண்டு குலாமிம் முகம் வாட்டமடைந்தது.
'என்ன சேதி ' என்றான்.
'அதுதான் ஒருநாள் இருந்தாயிற்றே; மற்றொரு சமயம் சந்திப்போம். எனக்குக் கொஞ்சம் அலுவல் இருக்கிறது ' என்றேன்.
அரைமணிக்குள் அந்தப் பங்களாவை விட்டு வெளியேறி விட்டேன்.
திருச்சியில் காவேரிக்கரை ஓரத்தில் என் அறையிலிருந்து சாளரத்தின் வழியாகத் திரும்பவும் அதே சந்திரனைப் பார்த்துக் கொண்டிருந்தேன், எவ்வளவு மாறுபட்ட மனநிலையில்! கடிதத்தைப் பிரித்துப் படித்துப் பார்த்தேன்.
'இக்கடிதத்தை என் வாக்காகவும் என் அடையாளமாகவும் நீ வைத்துக் கொள்ளலாம். நாம் திருச்சியில் சிறு குழந்தைகளாக விளையாடினபோது என் மனத்தில் உன்னிடம் ஏற்பட்ட பற்று என்னை விட்டு இன்னம் அகலவில்லை. ஏனென்றால், உன் உருவம் எப்போதும் சிலைபோல என்முன் நிற்கிறது.
நான் என்றென்றும் இளமையோடு உன்னுடன் விளையாடுவது போலவே கனவு காண்கிறேன். உன்னை மற்றொரு முறை இந்தப் பிறவியில் பார்க்க வேண்டுமென்ற அவாவும் நிறைவேறி விட்டது. இனி என் நாட்களை முன்பு அவுரங்கசீப்பின் தங்கை ஜெபுன்னிசா கழித்ததுபோல கழிக்கப் போகிறேன். என் தாயிடம் உனக்குத் திருமணமாகவில்லை என்று நீ சொன்னது எனக்குத் திருப்தியைக் கொடுத்தது. இனிமேல் நீ வேறொரு பெண்ணிடம் ஈடுபடாமல் உன் வாழ்நாட்களை என் மனத்தோடு மட்டும் ஒன்றும்படி காலம் கழிப்பாயானால், நானும் சோர்வின்றி வாழ்வேன். அப்படியே செய்கிறேனென்று நீ எனக்குப் பதில் எழுத வேண்டாம். நீ செய்வாய் என்று எனக்கு ஒரு திடநம்பிக்கை இருக்கிறது. அதுவே என் உயிர்நாடி.
நான் மெய்ம்மறந்து உன்னையே நினைக்கிறேன். ஆனால் நாம் இருவரும் இவ்வுலகில் கணவன் மனைவியல்ல. எப்போதும், உடல் ஆசை வேண்டாம் நமக்கு. நினைவென்னும் வானத்தில் ஒளிரும் இன்பமெனும் முழுநிலவுக்குக் களங்கம் உண்டாக்காதிருப்போம்! சரிதானே.
நூருன்னிசா '
அவ்வொளி மயக்கத்தில் அவளே முழு மதியின் உருவில் வந்து என்னிடம் வாக்கு வாங்குவதுபோல் இருந்தது.
என் மனமோகினியின் கட்டளைப்படி நான் உலகவழிகளில் திரிந்து வருகிறேன். நான் செய்யும் எல்லாச் செயல்களிலும் நான் நினைத்ததும் என் முன் தங்கப் பதுமை போல வந்து நின்று என்னை ஊக்கி வருகிறாள். அவள் என் சோர்விலும் என் மனத்தின்முன் குதித்துக் கொண்டு வந்து நின்று எனக்கு ஆறுதல் தருகிறாள்.
நன்றி: கு.ப.ரா. எழுத்துக்கள் - தொகுதி ஒன்று - முதற்பதிப்பு: அக்டோபர் 2002 - அல்லயன்ஸ் கம்பெனி வெளியீடு, 244, ராமகிருஷ்ணா மடம் சாலை, சென்னை - 4.
கு . ப . ராஜகோபாலன் நான் வேலூர்ச் சிறையிலிருந்து விடுதலையடைந்து வந்து ஒருவாரம் இருக்கும். ஒருநாள் காலையில் நாற்காலியில் சாய்ந்து கொண்டு என் ...
Bonjour & Welcome
Subscribe & Follow
Popular Posts
Created By Sora Templates | Distributed By Gooyaabi Templates