மௌனி

By 1:29 AM ,

mowni  தமிழ்ச் சிறுகதையின் ஆரம்ப காலங்களைப் பற்றி எழுதும் ஒவ்வொரு முறையும் விமர்சகர்கள் இரண்டு பள்ளிக்கூடங்களாக அதனைக் குறிப்பிடுவர்கள். ஒன்று புதுமைப்பித்தன் பள்ளிக்கூடம், மற்றொன்று மௌனி பள்ளிக்கூடம். புதுமைப்பித்தன் பள்ளிக்கூடத்தைச்
சேர்ந்தவர்கள் என்று சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், ஜி. நாகராஜன்... போன்றவர்களைக் குறிப்பிடலாம். ஆனால், மௌனி அவருக்கு முன் மாதிரிகள் இல்லாதது போலவே பின்பற்றுபவர்களும் இல்லாதவர். அந்த அளவுக்கு மௌனியின் கதை உலகம் சிக்கலானதும் ஆழமானதும் ஆகும். இன்று வரை நிரப்பப்படாத மௌனியின் இடம் அவருக்குத் தமிழ் இலக்கியத்தில் இப்போதும் இருக்கும் முக்கியத்துவத்தையே காட்டுகிறது.

  மௌனி 1907ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் நாள் தஞ்சை மாவட்டத்திலுள்ள செம்மங்குடி என்ற கிராமத்தில் பிறந்தார். 1926 வரை கும்பகோணத்தில் படித்த பிறகு 1929ல் கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். திருமணத்திற்குப் பின் கும்பகோணத்தில் தன் வீட்டில் 14 ஆண்டுகள் வசித்தார். இந்தக் காலத்தில் அவர் வேலை எதுவும் செய்யவில்லை. 1943ல் தன் குடும்பச் சொத்து மற்றும் தொழிலைக் கவனிக்க என்று சிதம்பரம் சென்று அங்கே தங்கினார். மௌனிக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள். இருவர் இளம் வயதில் விபத்தில் சிக்கி அகால மரணமடைந்து விட்டனர். தத்துவத்தில் எம்.ஏ. படித்துமுடித்த ஒரு பையனுக்கு மனக்கோளாறு ஏற்பட்டது. இன்னொரு மகன் பணியின் நிமித்தம் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

  மௌனி மொத்தம் 24 கதைகள் எழுதியிருக்கிறார். 1935ஆம் ஆண்டு பிற்பகுதியில் மௌனி 6 கதைகள் எழுதினார். 1936இல் இருந்து 1939 வரையிலான காலகட்டத்திற்குள் மேலும் ஒன்பது சிறுகதைகள் எழுதினார். பின்பு தொடர்ந்து பத்து ஆண்டுகள் மௌனி எதுவும் எழுதவில்லை. 1948ஆம் ஆண்டு மறைந்த எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராமின் வேண்டுகோளுக்கிணங்க `தேனி’ பத்திரிகைக்காக இரண்டு கதைகள் எழுதினார். பிறகு 1954 வரை ஒன்றும் எழுதவில்லை. மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பின்பு ஒருசில கதைகள் எழுதினார். 1971ஆம் ஆண்டு அவரது கடைசிக் கதை `தவறு’ `கசடதபற’ பத்திரிகையில் வெளியானது.

  மௌனியின் முதல் சிறுகதைத் தொகுப்பு `அழியாச்சுடர்’ 1959ஆம் ஆண்டு வெளியானது. பின்பு `மௌனி கதைகள்’ என்ற தலைப்பில் `க்ரியா’ பதிப்பகம் 1967ஆம் ஆண்டு ஒரு தொகுப்பும் 1978ஆம் ஆண்டு மற்றொரு தொகுப்பையும் கொண்டு வந்தது. 1991ஆம் ஆண்டு `பீக்காக்’ பதிப்பகம் மூலமாக கி.அ. சச்சிதானந்தம் மௌனியின் எல்லாக் கதைகளும் அடங்கிய `மௌனி கதைகள்’ புத்தகத்தைக் கொண்டுவந்தார். இப்புத்தகத்தில் 1968ல் ஆனந்த விகடனில் மௌனி எழுதிய `செம்மங்குடி _ தன் ஊர் தேடல்’ கட்டுரையும் 1965 பி.எஸ். ராமையா மணிவிழா மலருக்காக எழுதப்பட்ட `எனக்குப் பெயர் வைத்தவர்’ கட்டுரையும் மற்றும் மௌனியை கி.அ. சச்சிதானந்தம் கண்ட நேர்காணலும் இடம்பெற்றது. பின்பு இன்றுவரை மௌனி கதைகள் மறுபதிப்பு காணவில்லை.

  கணிதத்திலும் வயலின் வாசிப்பதிலும் மௌனி மிகுந்த தேர்ச்சி பெற்றக் கலைஞராயிருந்தார். வீட்டில் சும்மா இருக்கும் சமயங்களில் மௌனி கணக்குகளைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருப்பார், அல்லது வயலின் வாசித்துக் கொண்டிருப்பார். இவை இரண்டும் மௌனிக்கு மிகவும் விருப்பமான பொழுதுபோக்குகள். கு. அழகிரிசாமியின் மகன் சாரங்கன் எடுக்கத் துவங்கி இன்னும் நிறைவுபெறாமல் இருக்கும் மௌனி குறித்த விவரணைப்படத்தில் வயலின் மீது மௌனிக்கு இருக்கும் ஈடுபாட்டைக் காணலாம். மௌனியைப் பற்றி திலீப்குமார் எழுதிய, `மௌனியுடன் கொஞ்ச தூரம்’ என்னும் புத்தகம் 1992ல் வானதி பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்தது.   மௌனி 1985ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி காலமானார்
.தளவாய் சுந்தரம்

You Might Also Like

0 comments

Related Posts with Thumbnails