தமிழ் அறிவுஜீவிகள் குழப்பத்தில் இருக்கிறார்கள்-ரமேஷ்-பிரேம்
பின் - நவீனத்துவ தத்துவங்கள், விமர்சனக் கோட்பாடுகள், படைப்புகள் ஆகியவற்றைத் தமிழில் அறிமுகம் செய்து, அது குறித்த விவாதங்களை உருவாக்கி, தமிழ் அறிவுலக விமர்சனப் போக்கை ஆக்கபூர்வமானதாக மாற்றியவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் ரமேஷ் - பிரேம். பின் நவீனத்துவ படைப்பிலக்கியவாதிகளாகவும் விமர்சகர்களாகவும் அறியப்படுபவர்கள். இலக்கிய இரட்டையர்களாகவும் அறியப்படும் இவர்கள் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், விமர்சனக்கட்டுரைகள் என்று நிறைய எழுதியுள்ளனர். இதுவரை 15 புத்தகங்களும் 4 மொழி பெயர்ப்பு நூல்களும் வெளியாகியுள்ளன. பாண்டிச்சேரி அரசின். "கம்பன் புகழ் விருது" இரண்டு முறை இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது ரமேஷ், முழு நேர எழுத்தாளராக பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார். பிரேம், டெல்லி பல்கலைக்கழகத்தில் "Indian languages and Literary Studies" துறையில் விரிவுரையாளராக உள்ளார். இந்நேர்காணல் பாண்டிச்சேரியில் உள்ள ரமேஷ் - பிரேம் இல்லத்தில் எடுக்கப்பட்டது. இதன் மொழிபெயர்ப்பு "மாத்தியமம்" மலையாளப் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.
எழுத்து என்பது தனி மனித மனம் சார்ந்த படைப்புக் கலையென நம்பப்படுகிறது. இந்நிலையில் ரமேஷ் - பிரேம் எவ்வாறு இணைந்து சிந்திக்கவும் எழுதவும் சாத்தியப்படுகிறது?
நாங்கள் கலையை மட்டுமல்ல. எந்த ஒரு படைப்புச் செயலையுமே தனி மனித மனம் சார்ந்த, தனித்த உணர்வு சார்ந்த செயலாக எண்ணுவதில்லை. தனித்தனியே எழுதிக்கொண்டிருந்த நாங்கள். கவிதையை மனம் சார்ந்த ஊடாட்டங்களின் விளைவாகவும், மொழியைப் பரந்துப்பட்ட கூட்டு நினைவு மற்றும் கனவின் களமாகவும் புரிந்துகொண்டபின், இணைந்து எழுதத் தொடங்கினோம். இன்றைய சூழலில் கலைத்துவமான மனமும், அறிவும் மிகவும் தனிமைப்பட்டும் விலகியும் இருக்கின்றன. பிற மொழிச் சூழல்களைப் போலவே, தமிழிலும் கலைத்துவமான, கவித்துவமான நட்பும் புரிதலும் மிகக் குறைவாகவே உள்ளது. இந்நிலையில் எங்களுக்குள் தொடர் உரையாடலும், பேச்சும், முரண்பட்ட எதிரெதிர் வாதங்களும் நிகழ்வதென்பது எங்களுடைய எழுத்துக்கு மட்டுமல்ல, சிந்தித்தல், வாழ்தல் என்பவற்றிற்குக்கூட அடிப்படை ஆதாரமாக அமைந்துள்ளன. மையம் உடைய, சுயத்தை நிறுவும் பல எழுத்துக்கள்கூட தனி மனித, தனிமனம் சார்ந்த படைப்புகள் அல்ல. எங்களுடையதோ இவற்றிலிருந்து விலகியது. நாங்கள் இணைந்து சிந்திப்பதும், எழுதுவதும் இயல்பானதும் அறிவியல் அடிப்படையில் சரியானதுமாகவே உள்ளது. தமிழ் மரபின் மிகத் தொன்மையான திணைக் கவிதைகள்கூட கூட்டு மனதின், கூட்டுக் கவித்துவத்தின் படைப்புகளே. தனியே எழுதுகிறவர்கள் தாங்கள் கற்றது, பிறரிடமிருந்து பெற்றது, பிற உணர்வுகளுடன் ஊடாடுவது என்பதை ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு மறைப்புக்கு உட்படுத்தி, தமது "பெயரை" மட்டும் முன்னிலைப்படுத்தி உறுதி செய்து விடுகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை இணைந்து எழுதுதல், "சுயம்" மற்றும் "தனித்த நிலையென்ற" ஒரு பிளவு நிலையை, சிறிய அளவில் கடந்து செல்வதற்கான ஏற்பாடு. இது சாத்தியப்படுவது என்பது பண்பாடு, அரசியல், அறம் என்பவற்றில் ஏற்படும் சிதைவு, வலி, துயரம் என்பவற்றை முழுமையாக எதிர்கொண்ட படைப்பாளிகளுக்கு இன்று தேவையும் நிர்ப்பந்தமும் கூட.
சிந்தித்தலிலும், எழுதுதலிலுமான இந்த இணைப்பு எப்போது தொடங்கியது?
எங்களின் பதின் பருவத்தில் தொடங்கியது. நாங்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி காலங்களில், ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படித்தவர்கள், மேலும் ஒரே வகை சமூகச் சூழல், ஒரே வகை வர்க்கப்பின்னணி, இவற்றோடு எங்கள் இருவருடைய குடும்பங்களின் பாடுகளும் வலிகளும்கூட ஒன்றுபோலவே இருந்திருக்கின்றன. எங்களுக்குப் பிடித்தமான கவிஞர்களும், எழுத்தாளர்களும், திரைக்கலைஞர்களும் கலகக்காரர்களும், மகான்களும் கூட எனது ஒத்த சிந்தனை முறைக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள்.
யாருடன் உங்கள் கனவுகளையும் வலிகளையும் மிக உயர்ந்த அறங்களையும் மிகக் கீழான மனச்சிக்கல்களையும் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறீர்களோ, அவருடன் உங்களை முழுமையாகப் பகிர்ந்துகொள்கிறீர்கள். உங்களுக்கு ஒரு குருவும், ஒரு வழித்துணையும், மனநோய் மருத்துவரும் தேவைப்படுகிறார். நீங்கள் எதைக் கண்டு மகிழ்ச்சியில் துள்ளுகிறீர்கள். நீங்கள் எவருக்காக கண்ணீர் சிந்துகிறீர்கள். எதைக் கண்டு பயப்படுகிறீர்கள், நீங்கள் எவற்றைக் கண்டு வெறுப்பு கொள்கிறீர்கள் என்பவற்றையெல்லாம் பொறுத்ததுதான் சிந்தித்தலும் எழுதுதலும். உங்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் குழந்தையுடனோ, ஒரு நாய்க்குட்டியுடனோ நீங்களும் குட்டிக்கரணம் போடுகிறீர்கள். உங்கள் அரசியலும், அறமும் இவைப்பற்றிய கேள்விகளும் குழப்பங்களும் ஒன்றாக உள்ளன. பிறகு இணைந்து எழுதலாம். ஏனெனில் முடிவுகளை நோக்கியோ சாராம்சத்தை நோக்கியோ நீங்கள் செல்லவில்லை. செயல் மற்றும் சிந்தனை மட்டுமே நிகழ்கிறது. ஒருவர் எழுதிய இசைக்குறிப்பை மற்றவர் தனது கருவியில் இசைக்கிறார். நூறு பேர் இணைந்து ஒரே இசையை உருவாக்குகிறார்கள். கலையின் பல வடிவங்கள் கூட்டாகவே உருவாக்கப்படுகின்றன. மார்க்ஸ் - எங்கெல்ஸ். ழீல் தெலஸ் - பெலிக்ஸ் குத்தாரி போன்றவர்கள் சிலவற்றை இணைந்து எழுதியிருக்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து எழுதுவது பற்றியே சிந்திக்கிறோம், உரையாடுகிறோம், எழுத்துக்காக மௌனமாகவும் இருக்கிறோம். யார் முதலில் தொடங்கினாலும், முடியும்போது இருவருடைய சொற்களாலும் அவை நிரம்பிவிடுகின்றன.
உங்கள் அரசியல் என்ன? உங்கள் எழுத்தின் அரசியல் என்ன?
எங்கள் அரசியல் மிகச் சுருக்கமான வடிவில் வன்முறையை மறுப்பது, ஒடுக்குமுறையை எதிர்ப்பது, விடுதலையை ஏற்பது. எங்கள் எழுத்துக்களுக்கோ பலவித அரசியல்கள் உண்டு. பன்மையை நிறுவுதல், பலவித அணுகுமுறைகளை உணர்த்துதல், உடல் மனம் என்பவற்றின் அதிசயத்தை வியந்து கூறுதல், சகலவிதமான ஒடுக்குமுறைகளையும் எதிர்த்தல், மையப்படுத்தப்பட்ட உண்மைகளைக் கலைத்து, பலவித நிஜங்களின் சாத்தியப்பாடுகளை எடுத்துரைத்தல், முரண்படும் உரிமையை முன்வைத்தல், மாற்று அழகியல்களுக்குக் களம் அமைத்தல். இப்படி எத்தனையோ கூறலாம். என்றாலும், எழுதுவதே எங்களுக்கு ஒரு அரசியல் செயல்பாடாகத்தான் தோன்றுகிறது; அதன் பலவித அர்த்தங்களில், அறமும், அழகியலும் தீவிரமடையும் பொழுது நாம் அரசியல் வயப்படுகிறோம்தானே. எங்கள் எழுத்துக்கள் சில சமயங்களில் நாங்கள் இப்படி அரசியல் வயப்படுவதையும்கூட விமர்சிக்கக்கூடிய ஒரு ஆய்வுக்களமாக இயங்குகிறது. அரசியல் இல்லாமல் இருக்கமுடியாதா என்றும்கூட கேட்கிறது.
ஒரு சமூகத்தில் எழுத்தாளருக்கும் எழுத்துக்குமான பங்கு என்ன என்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
எழுத்து ஒரு சமூகத்தின் மனச்செயல்பாடு. அது மொழியை இயக்கத்தில் வைக்கும் தளம். இலக்கியம் என்பதும், எழுத்து என்பதும் உண்மை என்று சொல்லப்படுபவற்றிற்குள் உள்ள புனைவுகள் பற்றியும், அழகு என்பதற்குள் உள்ள அச்சமுறுத்தும் தன்மைகள் பற்றியும் தொடர்ந்து பேசுவது. அர்த்தமுடையவை என்பவற்றுக்குள் உள்ள அபத்தங்களையும் அர்த்தமற்றவை என்று ஒதுக்கப்பட்டவற்றிற்குள் உள்ள அதிசயத் தன்மைகளையும் தேடிக் கண்டடைவது. உலகைப் புரிந்துகொள்ள ஒற்றைவழி மட்டும் இல்லை என்றும், மனிதர்கள் என்பதும் வாழ்வு என்பதும் ஏதோ ஒரு வகையும், வடிவமும் கொண்டு முடிந்து போவதில்லை என்பதையும் ஓயாமல் கூறிக்கொண்டிருப்பது. உண்மைகளால் ஒரு சமூகம் மூடப்படும் பொழுது கற்பனைகள், கனவுகள், புனைவுகளின் சாத்தியங்களைத் திறந்துவிடுவதாக உள்ள எழுத்து புனைவுகளால் மூடப்படுபவற்றில் உள்ள உண்மைகளை வெளிக்காட்டுவதாக மாறிவிடுகிறது. மறதிகளால் சூழப்பட்ட ஒரு சமூகத்தில் நினைவுகளை மீட்டுத் தருவதாக உள்ள எழுத்து, அதிக நினைவுகளால் பீடிக்கப்பட்ட சமூகத்திற்கு சில தேவைப்படும் மறதிகளைத் தரக்கூடியதாகவும் மாறுகிறது. மையங்களில் உள்ள முடிவுகளை ஓயாமல் சந்தேகப்படுவதன் மூலம், விளிம்புகளில் மறைந்துபோன மற்றவற்றின் இருத்தலை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. ஒரு சமூகத்தில் ஏதோ ஒரு புலன் மட்டும் மையப்பட்டு, மற்றவை பொருளற்றவைகளாக மாற்றப்படும் பொழுது, மறுக்கப்பட்ட புலன்களைச் செயல்பட வைக்கக்கூடியதாக எழுத்து உள்ளது. ஒரு வகையில் எழுத்து தனிப்பட்ட நோக்கத்திற்குள் அடங்குவதும்கூட இல்லை. அது பன்முகத் தன்மையை நினைவூட்டிக்கொண்டே இருக்கவேண்டியது. மனித இருப்பில் இத்தனைச் சாத்தியப்பாடுகளா? என்ற வியப்பைத் தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டே இருப்பதன் மூலம், வேறுபட்ட தன்மைகளுக்கான நியாயத்தை வழங்கும் எழுத்துதான், சில சமயங்களில் எத்தனை முரண்பட்டாலும் வேறுபட முடியாத தன்மையையும் கூறிக்காட்டுகிறது.
பன்மைத் தன்மை உடைய ஒரு சமூகத்தில் ஒன்றிணைந்த சிந்தனையும் எழுத்தும் அரசியலடிப்படையில் சாத்தியமா?
எங்களைப் பொருத்தவரை "ஒன்றிணைந்த சிந்தனை". "ஒன்று கலந்த சிந்தனை முறை" என்பவற்றை நாங்கள் ஏற்கவில்லை. பன்மைத்தன்மையும் பல வகை வடிவமும் ஏற்கப்பட வேண்டும்; வேறுபாடுகளுக்கான நியாயமும் அவற்றிற்கான இடமும் ஏற்கப்படவேண்டும். இந்த ஏற்பில், புரிதலில் உருவாகும் ஒருங்கிணைப்பே அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான அடிப்படை. மையப்படுத்தப்பட்ட அறமோ, சிந்தனை முறையோ, மதிப்பீடோ எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும் வன்முறையானதாகவே இருக்கும். நிலவியல், பண்பாட்டியல், வரலாறு, வட்டாரத்தன்மை, சூழலியல் என வேறுபாடுகள் விரியும்போது அறிவியலிலும் உலகு பற்றிய பார்வையிலும் அழகியல், அறம் என்பவற்றிலும் பன்மையும் வேறுபாடுகளும் இருக்கும். நவீனத்துவம் இந்த வேறுபாடுகளை மறுத்து ஒற்றைத் தன்மையுடைய உலகையும், கனவையும், அறிவையும், அறத்தையும் முன்வைத்து தனது செயலை நியாயப்படுத்தியது. அதன் அழிவுத் தன்மைதான் இன்று நம்மைச் சூழ்ந்துள்ளது. பரவலையும் வேறுபாட்டையும் மாறுபடும் உரிமையையும் விலகிச் செல்லும் விடுதலையையும் இன்று புரிந்துகொள்ளத் தொடங்கவேண்டும். இன்றைய எழுத்து இவற்றைப் புரிய வைக்கவேண்டும்.
மேற்குலக அறிவு இன்று அடைந்துள்ள இடம் பற்றி எப்படி விளக்குவீர்கள்?
உலகில் எத்தனை இனக்குழு சமூகங்களும் எத்தனை மொழியினச் சமூகங்களும் இருந்தனவோ அத்தனைவித பண்பாடுகளும் அறிவுமுறைகளும் அரசியல் நாகரிகங்களும் இருந்திருக்கின்றன. ஆனால். இன்று இதைச் சொல்வதே முரண்பட்ட ஒரு பயங்கரம் என்று அர்த்தம் ஆகிவிடக்கூடும் என்ற அளவுக்கு அவை அழிவுக்குள்ளாகி இருக்கின்றன. நாகரிகமடைந்த - நாகரிகமடையாத என்ற எதிரிடைகளும், அறிவியல் அடிப்படையிலான சமூகங்கள் - அறிவியல் அடிப்படை அற்ற சமூகங்கள் என்ற எதிரிடைகளும்கூட இன்று உருவாக்கப்பட்டுவிட்டன. இன்று அறிவு, சிந்தனை, தொழில்நுட்பம் என்பதே மேற்குலகின் அறிவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு விளக்கப்படுகின்றன. இது மிகப்பெரிய வன்முறை கொண்ட புனைவு. இன்றுள்ள உலகமயமாதல் என்ற வன்முறைக்கு இதுவே அடிப்படை. பலம் குறைந்த நாடுகளை, தமது பயங்கரவாதச் செயல்களால் அடிமை கொண்டு, பல இன மக்களை அழித்தொழித்த, பல நாடுகளின் இயற்கை வளங்களை நாசம் செய்த மேற்குலக பேரதிகாரத்தின் அழிவுக்கூறுகள் மாறுவேடமிட்டபடி இன்று உலக அறிவியலாக, அழகியலாக, கலை இலக்கியங்களாக, தொழில் நுட்பங்களாக பெரும் தாக்குதலைச் செய்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நிலமும், பண்பாடும் இதில் தனது இடத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டிய தருணமிது. இந்திய நிலப்பரப்பில் உள்ள மொழிச் சமூகங்கள் கட்டாயம் இந்தச் சிக்கலைப் புரிந்துகொண்டு தமக்கான அறிவை, சிந்தனை முறையை எதிர்காலத்திற்காக கட்டமைக்க வேண்டியது உடனடியாகத் தேவையாக உள்ளது. உலக அறிவைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், உங்கள் நிலத்திற்கானதை உருவாக்கவேண்டும்.
உலகமயமாதலின் பயங்கரத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
உலகமயமாதல் என்பது மிகத் தொன்மையான அளவில் ஆக்கிரமிப்புப் போர்களின் மூலம் தொடங்கப்பட்டு, மத்திகால காலனியாதிக்க வன்முறையினால் விரிவுபடுத்தப்பட்டு, நவீனத்துவத்தால் உலக அளவில் உறுதி செய்யப்பட்டு, தற்போது முழுமையான மனித இனங்களை, நிலங்களைப் பற்றிப் பிடித்திருக்கிறது. இது அரசியல், பொருளாதாரம், உற்பத்திமுறை, போர் அச்சுறுத்தல் என்ற கண்ணுக்குப் புலப்படும் முறைகளிலும்; பண்பாட்டு அழிப்புகள், இனக்குழு அழிப்புகள், பன்மைத்துவ அழிப்புகள், சிந்தனை முறைகளை மையப்படுத்துதல் என்ற கண்ணுக்குப் புலப்படாத முறைகளிலும் மனிதக் குழுக்களுக்கு எதிரான பயங்கரத்தைச் செய்து வருகிறது. மனிதகுல முன்னேற்றம், உலகளாவிய பரிமாற்றம் என்ற பொய்யான உறுதி மொழிகளுடன் இந்த உலகமயமாதல் எல்லாத்துறைகளையும் அழித்துக் கொண்டிருக்கிறது. இதன் வன்முறை பயங்கரமானது. ஏகாதிபத்திய பாசிசம் இதன்மூலம் உருவாகக்கூடியது. பலகோடி மனிதர்களைப் பயனற்றவர்கள் என்று கொன்றழிப்பதை நியாயப்படுத்தக்கூடியது இந்த உலகமயமாதல். உயர் தொழில்நுட்பவெறி, போராதிக்க அச்சுறுத்தல், ஒற்றைத்தள அறிவு, உலக மேலாண்மை, உலகமயமாதல் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று உறவுடையவை. விடுதலையை, மனித நுண்ணுணர்வுகளை, பிற மனித இருப்பை நேசிக்கும். மரியாதை தரும் யாரும் உலகமயமாதலை ஏற்கவோ, சரியென்று கூறவோ முடியாது. உலகமயமாதலையும் அமெரிக்க, ஐரோப்பிய மேலாண்மையையும் எதிர்க்கிறோம் என்ற பெயரில் வரும் வன்முறைப் போராட்டங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இனி ஆயுதங்கள் அனைத்தும் உலகமயமாதலை ஏதோ ஒருவகையில் விரிவுபடுத்தி மக்களையே அழிக்கும். உலக ஆயுத வியாபாரிகள் பல நாடுகளில் உள்நாட்டுப் போர்களையும், மோதல்களையும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
உலகமயமாதலின் பிரச்சினை பயங்கரம் பற்றிப் பேசும்போது உலகளாவிய சிந்தனை, உலகளாவிய அறிவுமுறை என்பவற்றை எப்படி விளக்குவீர்கள்?
நவீனத்துவம் கூறிய உலகளாவிய, மனித குலம் சார்ந்த என்ற உறுதிமொழிகள் பொய்யானவை என்பது தற்போது புலப்பட்டுவிட்டது. ஒவ்வொரு நிலத்திற்கும், இனத்திற்கும், இனக்குழுவுக்கும் தனித்தனியே அறிவும், பண்பாடும், அணுகுமுறையும், மொழியும், அழகியலும், அறமும், அறிவியல் தொழிநுட்பங்களும் இருக்கும். இவற்றையெல்லாம் பொருளற்றவை என்றும், பயனற்றவையென்றும், தவறானவை என்றும் கூறி ஒதுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. எந்த இனமும் மற்றொரு இனத்தைவிட உயர்ந்ததோ, மேலாண்மை செய்யும் உரிமை உடையதோ அல்ல. அழித்தொழிப்பு, போர்த்தாக்குதல், கொலை மிரட்டல் அச்சுறுத்தல்கள் மூலம்தான் ஒரு அறிவின்மீது மற்றொரு அறிவு மேலாண்மை கொள்கிறது. இன்றுள்ள உலகமயத் தன்மைக்குப் பின்னே உள்ள படுபாதகக் கொலைகள் எத்தனை கோடி. போர்கள் எத்தனை ஆயிரம். இன அழிப்பு எத்தனை பயங்கரமானது. இவற்றை சற்றே நினைவுப்படுத்திக் கொண்டால் உலகமயமான, மேற்கு மயமான சிந்தனை முறைகள் அறிவுமுறைகள் என்பவற்றை நாம் மௌனமாக ஏற்றுக்கொண்டு இருக்கமுடியாது. மேற்குலகின் சில மாற்றுச் சிந்தனையாளர்கள் வெள்ளை மையவாதத்தையும் இன ஒழிப்பு அரசியலையும் எதிர்த்து ஏகாதிபத்திய வன்முறையைத் தொடர்ந்து புலப்படுத்தி வருகின்றனர்.
வரலாற்றின் முடிவு (End of History) என்பது பற்றி கம்யூனிச நாடுகளின் வீழ்ச்சிக்குப் பிறகு எண்பதுகள் தொடங்கி பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் கம்யூனிச இயக்கத்தில் ஏற்பட்டுள்ள தத்துவார்த்தச் சிக்கல் பற்றி நீங்கள் என்ன கருத்து கொண்டிருக்கிறீர்கள்?
கம்யூனிசம் என்பதை ஒரு தத்துவம் என்பதைவிட, ஒரு கூட்டுக்கனவு என்று கூறலாம். மனிதர்களை நேசிப்பவர்கள் யாருக்கும் இந்தக் கனவு தோன்றலாம். இந்தியாவில் பௌத்தம் இதை வேறு வகையில் முவைத்தது. அம்பேத்கரும், காந்தியும் இதனை வேறு வேறு வார்த்தைகளில் விளக்க முயற்சித்தார்கள். இந்தியாவில் பல மகான்களும் ஞானிகளும் உண்மையான துறவிகளும் இந்தக் கனவைக் கொண்டிருந்தனர். ஆனால், அது ஒரு அரசியல் வடிவமாக, செயல் திட்டமாக மாறும்போது வேறு வடிவம் கொள்கிறது. விடுதலையை நோக்கிய கனவில் மார்க்ஸூம், ஏங்கெல்ஸூம் முன்வைத்த சோசலிசம் என்பது அற அடிப்படையில் கவித்துவமான ஒன்று. ஆனால் வழிமுறை என்பது, அவ்வளவு தெளிவானதோ, எளிதானதோ அல்ல. சோஷலிச அரசுகள் இருந்த நாடுகளில், கட்சிகளின் ஆட்சி இருந்த அளவுக்கு, சோஷலிச அறங்களும் சோஷலிச பண்பாடுகளும் இருந்தனவா என்பது மிக முக்கியமான கேள்வி. அதே சமயம் சோஷலிச கோட்பாடுகள் இன்று அய்ரோப்பா முழுக்க உள்ளீடான பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது.
சோஷலிச நாடுகளின் சிதைவுகளுக்குக் காரணம் என்று எதை நினைக்கிறீர்கள்?
முதலாளித்துவ, ஏகாதிபத்திய நாடுகளின் வன்முறைகளும், மூன்றாம் உலக நாடுகளின் துயரங்களும் நிரம்பிய இருபதாம் நூற்றாண்டில், சில நாடுகளில் சோஷலிச அரசுகள் உருவானது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால், அவை தேசிய அரசுகளே தவிர வேறு இல்லை. இரண்டாம் உலகப் போரினால் உருவான தேசிய அரசுகள், சோவியத் யூனியனில் ராணுவ கண்காணிப்பின் கீழ் ஒருவித சமூகம் கட்டப்பட்டிருந்தது. ஆனால் பண்பாடு, அணுகுமுறைகள், சமூக உளவியல், மதிப்பீடுகள் என்பவற்றில் என்ன வகை மாற்றங்கள் ஏற்பட்டன என்பது பற்றி இன்றுவரை சரியான பதிவுகள் இல்லை. இந்நிலையில் அந்நாட்டு மக்களே நமது அரசுகளை மாற்றிக்கொண்டார்கள். இது அந்த வகை நாடுகளில் முடிந்திருக்கிறது. ஆனால், மற்ற ஏகாதிபத்திய நாடுகளில் முடியக்கூடியதா என்ன? அந்நாடுகளில் ஏற்பட்டது மாற்றங்கள்தாம். சிதைவுகள் அல்ல. இதனை முன்வைத்து, உலக அரசியல் - சமூகப் பார்வையிலிருந்தே - விடுதலை மற்றும் சமநீதி, சம உரிமை, மக்கள் நல இலட்சியங்களை, கோட்பாடுகளை நீக்கிவிட வேண்டும் என்று மனித அழிப்பு, ஆதிக்கக் கருத்தியலாளர்களும் முதலாளித்துவ ஜந்துக்களும் கூறுவது விஷமத்தனமானது. அறிவியல் அடிப்படையற்றது.
இதற்கு மாற்றுக்கள் என்று எவற்றைச் சொல்வீர்கள்?
மேற்கத்திய அய்ரோப்பிய உதாரணங்களை விட்டுவிட்டு இந்தியச் சூழலை, இந்திய வரலாற்றை, இந்தியாவின் எண்ணற்ற மரபுகளைக் கற்று, இந்திய மரபுகளிலிருந்தே சிலவித விடுதலைக் கோட்பாடுகளைக் கண்டறிய வேண்டும். பண்பாட்டு அரசியல், தனி மனித உளவியல், நுண்ணரசியல், சாதியத்தின் கொடூரம், மதவெறி பாசிசத்தின் வேகம் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு மாற்றுகளை உருவாக்க வேண்டும். இந்தியச் சமூகங்களின் அடிப்படை மனக்கட்டமைப்புகளை நிதானமாக ஆய்ந்தறிய வேண்டும். ஏதோ ஒரு கோட்பாடு எல்லாவற்றையும் தீர்த்துவிடும் என்று முரட்டுவாதம் செய்து கருத்தியல் அதிகாரத்தை நிறுவுவதை விட்டுவிட்டு, எல்லா மனிதநேயக் கருத்துக்களிலிருந்தும், அணுகு முறைகளிலிருந்தும் நமக்கான கூறுகளைக் கண்டெடுத்து இணைத்து ஆக்கபூர்வமான அரசியல் அறங்களை, மக்கள் மயமான செயல் திட்டங்களை வடிவமைக்க வேண்டும். அம்பேத்கரையும், காந்தியையும், பெரியாரையும் இன்னும் ஆழமாகப் புரிந்துகொண்டு பல அடிப்படைக் கூறுகளை உருவாக்க வாய்ப்பு உள்ளது. ஆன்மீகம், அறம், சிறு மரபுகளின் ஆக்கபூர்வமான கூறுகள் ஆகியவற்றைப் புரிந்து புதியவகை சேர்க்கைகளை உருவாக்க வேண்டும். இந்திய - தமிழ் - பின் நவீனத்துவப் புரிதல்கள் எங்களுக்கு இதுபோல் சிலவற்றைக் காட்டித் தந்திருக்கின்றன. என்றாலும், இவைப் பற்றிய நீண்ட ஆய்வுகளும், விவாதங்களும் தேவை. அதுவரை ஜனநாயகத்தையும் தேசியத்தையும் அவற்றின் உண்மையான அர்த்தத்தில் வளர்ந்து பாதுகாப்பதற்கே மிகக் கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது.
இன்றைய சூழலில் நீங்கள் கூறும் பௌத்தத்தின் முக்கியத்துவம் என்ன?
இதுகுறித்து அம்பேத்கர் விரிவாக ஆராய்ந்து கூறியிருக்கிறார். காந்தியின் செயல்பாடுகளில் பௌத்தத்தின் முக்கியமான பல கூறுகள் உள்ளன. இந்திய மண்ணிலிருந்தே தோன்றிய மிகப் பெரும் அறச்சிந்தனையான பௌத்தம் தமிழகத்திலும், இந்தியாவிலும் பல நூற்றாண்டுகள் வாழ்வியலில் பிணைந்து இருந்திருக்கிறது. இன்றைய அரசியல் சிதைவுகள், சமூக நோய்கள், மதவெறி வன்முறைகள், உலகமயத்தாக்குதல்கள் என்பவற்றிற்கு மாற்றான புதிய வாழ்வு என்ற கோட்பாட்டை, பௌத்தத்தின் அறமும் தத்துவமும் அமைத்துத்தர முடியும். நமது மக்கள் மறந்துபோன தமது பூர்வீக சமயமான பௌத்தத்தை நினைவூட்டி, மறுஉயிர்ப்பு செய்வதன் மூலம், ஒரு மாற்று அரசியல் சமூக அறத்தையும், பண்பாட்டையும் கட்ட முடியும். மக்கள் இயக்கங்கள் பௌத்தத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு, அதனை சிந்தனை மற்றும் பண்பாட்டுத்தளத்தில் கொண்டு செல்லும்போது பாசிசம் விரிவடைவதைத் தடுக்கமுடியும். நாங்கள் கூறும் தமிழ் பௌத்தம் இன்னும் பல விரிவான பொருளை உடையது.
உங்கள் பார்வையில் தற்கால தமிழ் அறிவு ஜீவிகளின் நிலைப்பாடு அல்லது நிலை என்னவாக உள்ளது?
தமிழகத்தில் காலம்காலமாக ஒரு எதிர்மரபு இருந்து வந்துள்ளது. அறத்தையும் உண்மையையும் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு சிறுபான்மை சிந்தனையாளர் குழு இருந்து வந்துள்ளது. மக்களுக்கானவற்றைப் பேசவும், அதிகாரத்திற்கும் அடக்குமுறைகளுக்கும், வன்முறைகளுக்கும் எதிரானவற்றை வளர்க்கவும், இந்த வகை அறிவு மரபு தொடர்ந்து முயன்று வந்திருக்கிறது. காலனிய, நவீன காலச் சிக்கல்களிலிருந்து உருவான வைகுண்டசாமி, இராமலிங்க அடிகள் தொடங்கிய அயோத்திதாசர், பெரியார், ஈ.வே.ரா. வழியாக சிந்தனை மரபுகள் தமிழில் விரிவடைந்திருக்கின்றன. ஆனால், இவை மக்களிடத்தில் முழுமையாகச் சென்றடையவில்லை.
தற்போது அறிவு ஜீவிகள் என்பவர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். ஆனால் தங்கள் குழப்பத்தை மறைக்க பல முடிவுகளைக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்ச் சமூகத்தின் சிக்கலும், அவலமும் பன்முகப்பட்டது. இவற்றைக் கண்டறிந்து பேசவும் ஆய்வு செய்யவுமான அறிவுத்தளம் மிகச் சிறியதாக உள்ளது. மார்க்சிய, பெரியாரிய, காந்திய, அம்பேத்கரிய சிந்தனைகள் ஏதோ கட்சி மற்றும் அமைப்பு கட்டும் செயல் திட்டங்களாகக் குறுக்கப்பட்டுவிட்டன. அய்யோத்திதாசரை முன்வைத்து உருவான பௌத்த சிந்தனை அய்ரோப்பிய தொண்டு நிறுவனமாகிவிட்டது. விவாதங்கள் விரிவாக்கப்படுவதில்லை. மார்க்சியம் பேசுபவர்களுக்கு கிராமிய, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய அக்கறை இருப்பதில்லை. பெரியாரியம் பேசுபவர்களுக்கு சமூகப் பொருளாதாரச் சிக்கல்கள் பற்றியும் தமிழ்ப் பண்பாட்டு உள்ளீடுகள் பற்றியும் சமூக மனவியல் பற்றியும் புரிதல் இருப்பதில்லை. காந்தியம் என்பது செயலற்ற, தனி மனிதப் பேச்சாகவும், வசதியான கௌரவ வேடமாகவும் மாற்றப்பட்டுவிட்டது. அம்பேத்கரியம் என்பது கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து சட்டசபையில் இடம் பிடிப்பதன் தேவையை மட்டுமே முதன்மையாகக் கொண்டு குறுக்கப்பட்டுவிட்டது.
தமிழில் அறிவு - சிந்தனை என்பதன் விரிவான அக்கறைகள் மறதிக்குள்ளாகியிருப்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் நிறுவனங்கள், அமைப்புகள் இவற்றைத் தமது கருவிகளாக்கிக் கொண்டது முதல் காரணம். மக்கள் குழு என்பது கும்பல் அரசியல், திரைப்பட அரசியல், மத அமைப்பு அரசியல் என்பவற்றைத் தவிர எதையும் அரசியலாகப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளது. அறிவுஜீவிகள், சமூகச் சிந்தனையாளர்கள் என்பவர்கள் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட உலகமயமான சிக்கல்கள் பற்றியும் இந்தியச் சமூகம், தமிழ் சமூகம் அடைந்துள்ள சிதைவுகள் பற்றியும் மிகக் குறைவான புரிதல் மட்டுமே கொண்டவர்களாக இருப்பதுடன் தத்தமது சிந்தனைகளை முடிவுகளிலிருந்து தொடங்குபவர்களாகவும் உள்ளனர். இவை பற்றிய ஓரளவு புரிதல் உள்ளவர்கள் சிதறிப்போய் தனிமைப்பட்டு கண்ணில் காணமுடியாத சிறுபான்மையினராகவே இருக்க வேண்டியிருக்கிறது. தமிழக பத்திரிகைகளையும், தொலைக்காட்சிகளையும் மேடைகளையும் பார்த்து வரும் ஒருவருக்கு எதிர்காலம் பற்றிய எந்த நம்பிக்கையும் ஏற்பட வழியில்லை. கல்பாக்கம், கூடங்குளம் என இரு அணு உலைகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட தமிழ்நாடு பெரும் ஆபத்தை எப்போதும் தனக்குள் கொண்டுள்ளது. இது பற்றிய எந்தவொரு சொரணையும் தமிழரிடத்தில் இல்லை. பச்சையற்ற மண்ணாக மாறிவரும் தமிழகத்தில் 90 சதவீதம் பேச்சுக்கள் திரைப்படங்கள், திரைப்பட நடிக, நடிகைகள், கிரிக்கெட் பற்றி மட்டுமே இருப்பதை எந்தப் பின்னணியில் புரிந்து கொள்வது. விவசாயம் அழிந்துபோன நிலங்கள் பற்றிய பேச்சும் அழிந்துகொண்டிருக்கும் காடுகள், மலைகள், நீர்நிலைகள் பற்றிய பேச்சும் கூட சிறுபான்மை பேச்சுகளாகவே இருக்கும் இந்தச் சூழலில் அறிவுஜீவிகள், சிந்தனையாளர்கள் என்பவர்களின் இடம் என்ன? காலம் இன்னும் தேவை என்றுதான் தோன்றுகிறது. தமிழில் அறிவுத்துறையும், சமூக அரசியல் சிந்தனையும் மன அமைப்புடன் ஒன்றிய தொடர் நிகழ்வாக மாற இன்னும் காலம் எடுக்கும். அமைப்புகள் தமது எல்லைக்குள் இயங்குவது தவிர்க்கமுடியாதது. ஆனால், சிந்தனையாளர்கள் அவை கடந்த கேள்விகளைத் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டியவர்கள்.
தமிழிலக்கியத்தின் எதிர்காலப் போக்குகள் எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்?
தமிழின நவீன இலக்கியம் தொடங்கிய காலத்திலிருந்து மிக முக்கியமான பிரச்சினைகளும் கேள்விகளும் ஆராயப்பட்டு வருகின்றன. தமிழின் நவீன மனம், நவீன வாழ்வு, நவீன அடையாளம், நவீன மதிப்பீடுகள் அதன் மரபான அமைப்புகளுடன் மோதும்போது ஏற்படும் சிக்கல்களும், மாற்றங்களும் ஏற்பதில் நேரும் குழப்பங்களும் பேசப்பட்டுள்ளன. ஆனால் எதார்த்த எழுத்து, எதார்த்தவியல் பார்வை என்பது முக்கியம் பெற்று உறுதியான வடிவமாகிப் போனதனால், தமிழ்ச் சமூகங்களின் பலவித கதை மரபுகள், கதை கூறும் முறைகள் மறுதலிக்கப்பட்டு, எழுத்துக்கான ஒரு உள்ளார்ந்த தணிக்கையும் ஒடுக்குதலும் ஏற்பட்டுவிட்டது. தற்போது புதிய வகை எழுத்து கதை கூறுதல், கதை அமைத்தல், முரண்பார்வைகள், பலகுரல் தன்மை என்பவற்றின் வகைமைகள் மூலம் புதிய வடிவங்களை நோக்கிச் செல்ல முனைந்திருக்கிறது. ஆனால் தமிழில் பலவகைத்தன்மை, சிறு மரபுகள், கதை கூறலின் பன்மைச் சாத்தியப்பாடுகள் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்ட செவ்வியல் தன்மை உடைய எழுத்துகள் இனி தேவைப்படுகிறது. எதிர்கால எழுத்துக்கள் அதை நோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. எழுத்து என்பது நுண்மையான ஒரு கலைத்தொழில் என்பதுடன் பன்முக அறிவும் பல்துறைப்பயிற்சியும் தேவைப்படும் நிகழ்கலை வடிவம் என்ற பிரக்ஞையுடன் எழுதப்படும் எழுத்துக்கள் தேவைப்படுகின்றன. எப்போதும் போல் வெறும் பேச்சுக் கதைகள், பெருங்கலாச்சாரக் கதைகள் அதிகம் பெருகி நுண்ணுணர்வுகளை, நுண்ணறங்களை, நுண்ணழகியல்களை நசிவுபடுத்தும் என்பது மட்டும் தற்போது தெளிவாகத் தெரிகிறது. அவற்றை எதிர்த்து நிற்கும் வலிமையுடன் சிறுபான்மை நுண்ணிலக்கியவாதிகள் செயல்படுகிறார்களா என்பதை இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்தே நாம் அறிந்துகொள்ள முடியும். எந்த ஒன்றையும் நுகர்பொருளாக்கி ஆற்றல் அழித்துவிடும் சக்தி தற்போதைய ஊடகங்களுக்கு உண்டு. அவற்றின் வன்முறையை மீறி தமிழிலக்கிய வகைமைகள் வளருவதற்கு கடின உழைப்பும் போராட்டமும் நிறைந்த வாழ்வும் எழுத்தாளர்களுக்குத் தேவைப்படுகிறது.
நன்றி: தீராநதி 21 SEPTEMBER, 2005
1 comments
how to place an picture image or icon before an HTML link
ReplyDeletehttp://ramasamydemo.blogspot.com/2010/09/how-to-place-picture-image-or-icon.html