பொருள்வயின் பிரிவு –விக்ரமாதித்யன் நம்பி

By 10:44 AM ,

பொருள்வயின் பிரிவு

அன்றைக்கு
அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை.
நிசப்தம் காடாக விரிந்துகிடந்ததுnambi2562
சாரல் மழைபெய்து
சுகமான குளிர் வியாபித்திருந்தது

அயர்ந்து
தூங்கிக்கொண்டிருந்தான் பெரியவன்
அரவம் கேட்டு விழித்த சின்னவன்
சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது
சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்

இவள்
வெந்நீர் வைத்துக் கொடுத்தாள்
வெளுத்த துணிகளை எடுத்துவைத்தாள்
வாசல்வரை வந்து
வழியனுப்பி வைத்தாள் தாய்போல

முதல் பேருந்து
ஓட்டுநர் இருக்கைக்கு பின்புற ஜன்னலோரம்
பிழைப்புக்காக
பிரிந்து வந்துகொண்டிருந்தேன்
மனசு கிடந்து அடித்துக்கொள்ள.

****

கூண்டுப் புலிகள்
நன்றாகவே பழகிவிட்டன
நாற்றக்கூண்டு வாசத்துக்கு
பெரிதாக ஒன்றும் புகார் இல்லை
நேரத்து இரை
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி
குட்டி போட சுதந்திரம் உண்டு
தூக்க சுகத்துக்குத் தடையில்லை
கோபம் வந்தால்
கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்
சுற்றிச்சுற்றி வருவதும்
குற்றமே இல்லை
உறுமுவதற்கு உரிமையிருக்கிறது
முகம் சுழிக்காமல்
வித்தை காண்பித்தால் போதும்
சவிக்குச் சொடுக்குக்குப் பயந்து
நடந்து கொண்டால் சமர்த்து
ஆதியில் ஒரு நாள்
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப்புலிகள்

****

நேற்றிரவு
நரகம்

இன்று இரவு
சொர்க்கம்

நாளை நல்லபடியோ
கெட்டபடியோ

வருநாளெல்லாம்
திருநாளென்ற கனவில்

ஒருநாளுக்காக
ஒவ்வொரு உயிரும்

வெறுநாள்களை
வாங்கிவைத்தபடி.

****

பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை
தீப்பெட்டி படம் சேகரிக்கிறான் மகன்
நான் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்

****

முழுதாய் வாழ்ந்து முடிக்க
முன்னூறு வார்த்தைகள் போதும்
இவனோ வார்த்தைகளின் ஊர்வலத்தில்
வழிதவறிய குழந்தை

****

அண்ணி மேல் கொண்ட ஆசை
கொழுந்தனைக் குழப்ப
அந்நிய இடமாகும் வீடு

விரும்புவது
நதிக்கரை நாகரிகம்
விதிக்கப்பட்டது
நெரிசல் மிக்க நகரம்

கைபட
தளர்வது முலை
கவலைப்பட
தளர்வது மனம்

*****

You Might Also Like

8 comments

  1. இந்த கவிதைகளில் சிலதை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். அன்று ஏற்பட்ட அதே உணர்ச்சிதான் இன்றும். பிரமாதம்.

    ReplyDelete
  2. நட்சத்திர கவிதைகளை நட்சத்திர வாரத்தில் பகிர்வதற்கு சிறப்பு நன்றிகள்

    ReplyDelete
  3. நட்சத்திர தகுதிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. எம்.ஏ.சுசீலாJanuary 18, 2011 at 10:19 PM

    திரு ராம்பிரசாத்,
    அண்மையில் தில்லியில் நிகழ்ந்த தமிழ்2010 கருத்தரங்கில் கவிஞர் ரவி சுப்பிரமணியன் , தாங்கள் மேலே தந்திருக்கும் விக்கிரமாதித்தனின் ’’அன்றைக்கு அதிகாலை’’என்னும் பொருள்வயின் பிரிவு கவிதையை மிக நெகிழ்வான குரலில் பாடலாக இசைத்தார்.
    இப்போது அழியாச்சுடர்களில் அதே கவிதை படித்தபோது
    ரவியின் குரல் மனதுக்குள் ரீங்கரிக்கிறது.

    ReplyDelete
  5. ram unkalathu thervukal ellame unkalathu melana rasanaiyai velippdthukirathu paraddukkal.-vidyashankar

    ReplyDelete
  6. இந்த பொருள்வயில் பிரிவை லக்குமி குமாரன் ஞானதிரவியம் அவரின் "என்பதாய் இருக்கின்றது" கவிதை தொகுப்பில் குறிப்பிட்டு இருந்தார் ஆனால் என்னால் அப்போது கவிதையை படிக்க கிடைக்கவில்லை.

    மிகவும் நன்று

    ReplyDelete
  7. அருமை அருமை. மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete
  8. ஏற்கனவே படித்து ரசித்த கவதைகள் தாம். மீண்டும் அழியாச் சுடரில் படிக்கும்போது அதே சிலிர்ப்பும்,லயிப்பும் ஏற்படுகிறது. வாழ்வின் மீதான கவனிப்பும், ஊடாடும் கனவும், கவலைகளும்தான் விக்ரமாதித்யன் கவிதைகள்.

    ReplyDelete

Related Posts with Thumbnails