கு. அழகிரிசாமி
குருசாமி ஆச்சாரி அழகிரிசாமி என்கிற கு. அழகிரிசாமி திருநெல்வேலி மாவட்டத்தில் இடைச்செவல் என்கிற கிராமத்தில் 1923ஆம் ஆண்டு பிறந்தார். வீட்டில் அழகிரிசாமியை மற்றவர்கள், செல்லையா என்று அழைத்தனர். 1943ஆம் ஆண்டுமுதல் கு. அழகிரிசாமி சிறிது காலம் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள சுரண்டை என்ற ஊரில் சப் ரிஜிஸ்தார் அலுவலகத்தில்
வேலை பார்த்தார். பின்னர் சிறிது காலம் பத்திரிகையாளராக பணியாற்றினார். 1952ஆம் ஆண்டு ‘அழகிரிசாமி கதைகள்’ வெளிவந்தது. இதே வருடத்தில் மலேஷியா ‘தமிழ்நேசன்’ பத்திரிகையில் துணையாசிரியராக அழகிரிசாமி சேர்ந்தார். பின்னர் 1970ல் ‘சோவியத் நாடு’ பத்திரிகையின் துணையாசிரியரானார். சோவியத் நாடு பத்திரிகையில் சேர்ந்த அதே வருடம் ஜூன் 5ஆம் தேதி அழகிரிசாமி காலமானார். அழகிரிசாமியின் மறைவுக்குப் பின்னர் 1971ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது அவருக்கு வழங்கப்பட்டது. கம்பராமாயணத்தில் பாலகாண்டத்தையும், அருணாசலக்கவிராயர் காவடிச்சிந்தையும் கு.அழகிரிசாமி பதிப்பித்துள்ளார். சங்கீதத்தில் அழகிரிசாமிக்கு அபார ஈடுபாடு இருந்தது. Ðல சங்கீத வித்வான்கள் அழகிரிசாமியின் நண்பர்கள். “எனக்கு நான்கு விஷயங்கள் முக்கியம். முதலாவது பாரதி, இன்னொன்று கம்பன், அடுத்து ராமாயணக் கதாநாயகன் ராமன். பிறகு தியாகய்யர். இந்த நான்கு பேரையும் பற்றி யாரும் குறைவாகப் பேசினால் அவர் வீட்டில் நான் கை நனைக்க மாட்டேன்” என்று அழகிரிசாமி அடிக்கடி சொல்வாராம். ‘கரிசல் வட்டார இலக்கியவாதிகளுக்கு முன்னத்தி ஏர் பிடித்தவர்’ என்று அழகிரிசாமியை குறிப்பிடுவார்கள்.
0 comments