அந்தர நதி ரமேஷ் - பிரேம்

By 5:27 PM ,

அந்தர நதி

பேரழுகையின் உப்பு நதியில்
வழி தவறிச் சேர்ந்த
பாய்மரத்தில் நான்
இந்தப் பாய்மரம் பல நூற்றாண்டுகளாகக் ramesh-prem
கரை தொட்டதில்லை
என்னைக் கடந்து செல்லும் பறவையே
உனது கேவல் எதற்காக
தரைதொடாத உனது பயணமே
எனது பாய்மரத்திற்கு வழிகாட்டலாய் அமைய
என்னைக் கடந்து செல்லும் பறவையே
எனது கால்களுக்குக் கீழேயும்
தலைக்கு மேலேயும் 
விரிந்து நீளும் நீல நதிகள்
யாரின் பேரழுகையில் நாம்
மிதந்து செல்கிறோம்
நூற்றாண்டுகளாக.

ரயில் நிலையத்தில்

ரமேஷ் பிரேதன்

எனக்குத் தெரியாது
ஆறு ஆண்டுகளுக்கு முன்பே
அதீதன் செத்துவிட்டது
கடந்த ஆறு ஆண்டுகளாக
அவனுக்கு நான் தொடர்ந்து
கடிதம் எழுதி வருகிறேன்
நேற்று ரயில் நிலையத்தில்
அடையாளம் தெரியாத தோற்றத்துடன் இருந்த
ஆத்மார்த்தியை உற்றுணர்ந்து
பேசிய பொழுதுதான் செய்தி தெரிந்தது

அவன் செத்து ஆறு ஆண்டுகள் ஆனபோதும்
மீண்டும் பிறந்து
மூன்று ஆண்டுகளாவதாகச் சொன்னாள்
என்னை வேதனையோடு பார்த்து
நீ ஏன் இன்னும் சாகவில்லை என்று கேட்டாள்

இளம் புன்சிரிப்போடு கைகுலுக்கி
விடைபெற்றேன்
போன நூற்றாண்டில் என்னோடு செத்தவர்களை
ஏற்றிக்கொண்டு
எனக்கான ரயில் வந்த பிறகு.

 

புலி

ரமேஷ் பிரேதன்

அவன் என்னை விட்டுப் போய்விட்டான்
சிறுத்தையாக நான் இருந்தபோது
என்னுடன் பழகியவன்
எனது புள்ளிகள் கோடுகளாக வழிந்து
நான் புலியாக மாறியவுடன்
என்னை விட்டுப் போய்விட்டான்

புலி ஒரு அரசியல் விலங்கு
அதிலும் தமிழ் விலங்கு என்றவுடன்
என்னை விட்டுப் போய்விட்டான்

எனது கோடுகள் வளர்ந்து கம்பிகளாகிவிட
நான் கூண்டுக்குள் இருக்கிறேன்
கூண்டாகவும் இருக்கிறேன்

மூன்றுமுறை தப்பித்தேன்
நடுக்கடலில் சுடப்பட்டேன்
ஒவ்வொரு முறையும் செத்துப் பிழைத்தேன்
என் கனவில் விரியும் தென்புலக் கடலில்

அவனுக்கும் எனக்குமிடையே ஒரு கடல்
கொஞ்சம் சொற்கள்
நிறைய ஆயுதங்கள் மற்றும்
மக்கிப்போன பழைய முத்தங்கள்.

You Might Also Like

1 comments

  1. நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள் ராம் !

    ReplyDelete

Related Posts with Thumbnails