சாமக்கொடை- வித்யாஷங்கர்

By 6:42 PM ,

சாமக்கொடைVidhyashankar

பதினெட்டு பட்டி சூழ
சந்நதம் கொண்ட மாரியாத்தா
சட்டென இறங்கினாள் 
பெரியவீட்டு சாந்தி மீது
"என்ன வேண்டும்
கேள் மகனே" என்றாள்.
ஆவேசங் கொண்டாலும்
அழகு ததும்பும்
அவளிடம்
அத்தனை பேர் முன்
எப்படிக் கேட்பேன்
நீதான் வேண்டுமென்று.

பேருக்குத்தான் பெயர்

சிற்றருவி
பேரருவி
ஐந்தருவி
பேர் என்னவானாலும்
அருவி ஆறாகாது
அதனதன் வேகமும்
தன்மையும்
அதனதன் இயல்பு
பேருக்குத்தான் பெயர்

கொலை = கவிதை

ஒரு நல்ல கவிதை
எழுதுவதும்
ஒரு கொலை செய்வதும்
ஒரே மாதிரித்தான்
திட்டமிடல்
ஓர்மை
தேர்ந்தெடுத்தல்
தொடர் வன்மம்
தீராத ரணம்
இரண்டுக்கும் பொது
அலட்சியங்கள்
அவமதிப்புகள்
புறக்கணிப்பு
பொல்லாப்பு
சேதாரமாகும் பொழுதுகள்
முனைப்பை
தீவிரப்படுத்துகின்றன
கொலைக்கான
கருவிகளை
சூழலே
தந்து உதவுகின்றன
எங்கேஎப்படி
இரக்கமற்று
உயிர் பறிப்பது
எதுவும்கவிஞனின்
திட்டமிடலில் இல்லை
அடையாளத்தை
விட்டுச் செல்வதா
அடையாளத்தை
அழித்துச் செல்வதா
தருணங்களே
தீர்மானிக்கின்றன
கவிதையிலும்
கொலையிலும்
எதிராளி
கொல்லப்பட்டதும்
பெறுகிற
விடுதலை வேட்கையோடு
கவிதையின்
வரிவடிவமும்
நிறைவடைகிறது.
தலைமறைவானால்
எல்லோரும் தேடுவார்கள்
வாய்க்கு வாய் பேசும்
நல்ல கவிதையை
முன்வைத்து
நேரும் உறவு போல
கொலையில்
சிந்திய ரத்தமும்
சேதமும் சிதைவும்
வெளித் தெரியும்
கவிதையில் தெரியாது
ஆனாலும்
கொலை செய்வதைவிட
சிரமமும் கடினமுமானது
ஆகச் சிறந்த கவிதையை
எழுதுவது

You Might Also Like

0 comments

Related Posts with Thumbnails